Spiritual Tour:.. பக்தியினால் நிறைந்த மனசு.. சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (பகுதி 2)

Oct 20, 2026,01:50 PM IST

- எம்.எல்.பிரபா


ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்வதற்கு முன் நாங்கள் கடற்கரையில் உள்ள அக்னி தீர்த்தம் அதாவது சேது சமுத்திரத்தில் புனித நீராடினோம். மூன்று முறை கடலில் மூழ்கி எழுந்தோம். அதுதான் மரபு என்று அங்கே கூறினார்கள். நீராடிய பின் ஈரத் துணியுடன் நேராக வடக்கு புறம் இருக்கும் கோபுரத்தின் வழியாக கோவிலின் உள்ளே சென்றோம். அங்கு தான் 22 கிணறுகள் (தீர்த்தங்கள்) உள்ளன. 


ஒவ்வொரு கிணறாக சென்றோம். அங்கு உள்ள குருக்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றினார்கள்.அந்த 22 கிணற்று தீர்த்தங்களில் நீராடினால் இந்த ஜென்மத்தின் பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும். புண்ணியம் உண்டாகும் என்பது  இந்துக்களுடைய நம்பிக்கை. நாங்களும் நம்பிக்கையுடன் நீராடினோம்.


லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலில் நீராடினார்கள்.ஈர உடையுடன் மூலஸ்தானம் செல்லக்கூடாது என்பது கோவிலின் நிபந்தனை.அதனால் கோவிலிலேயே உடையை மாற்றுவதற்கும் தனித்தனியாக அறைகள் உள்ளன. பக்தர்களுக்கு கோவிலில் அன்னதானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்களும் புதிய உடையை மாற்றிக் கொண்டு மூலவர் ராமநாத சுவாமியை தரிசிக்க சென்றோம்.




முதலில் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்க சென்றோம். காலை 4 மணி முதல் 6:00 மணி வரை அங்கு சிறப்பான சங்காபிஷேகம், பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் ஜோதிர்லிங்கம் உள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.


கோவிலின் முதல் பிரகாரத்தில் சீதாதேவி மணலால் அமைத்த லிங்கத்தை ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது. அதை நாங்கள் தரிசனம் செய்தோம். மூலவர் ராமநாத சுவாமியை நாங்கள் தரிசனம் செய்தோம். அங்கு தீபாராதனையின் போது பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா' என்று கோஷமிட்டது, உடம்பை புல்லரிக்கச் செய்தது.


அடுத்ததாக அம்பாள் சன்னதிக்கு சென்றோம். "பர்வதவர்தினி" அம்மனை தரிசனம் செய்தோம். அம்பாளின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கர நிறுவிய ஸ்ரீ சக்கரம் உள்ளது. அதையும் கண்டோம். சக்தி பீடங்களில் இத்தலம் சேது பீடம் என்று சொல்லப்படுகிறது. சன்னதி பிரகாரத்தில் விபீஷணன் அமைத்த ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோரை நாங்கள் தரிசனம் செய்தோம்.


பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்களால் பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். பதஞ்சலி முனிவர் நாக வடிவில் உள்ளார் .அவரையும் தரிசனம் செய்தோம். அடுத்ததாக மூன்றாம் பிராகாரத்திற்குச் சென்றோம்


மிகவும் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம்.இது உலகிலேயே மிகவும் பெரிய பிரகாரம் என்று கூறப்படுகிறது. 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம் ,435 அடி அகலம், 22 1/2 அடி உயரம் கொண்டது. பார்ப்பதற்கே பிரம்மாண்டமாய் உள்ளது. இதை கிட்டத்தட்ட முப்பது வருடங்களில் கட்டியுள்ளார்கள் என்பதை அங்கே கோயிலில் எழுதப்பட்டுள்ளது. 


அது பார்ப்பதற்கு மிகவும் வியப்பாகவும், பிரமிப்பாகவும், கண்கொள்ளாக் காட்சியாகவும் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதனை மேலும் வண்ணங்களால் மெருகேற்றி மிகவும் அழகாக தோற்றமளிக்க செய்துள்ளார்கள். கோயில் நன்கு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. ஒரு நாளில்  கோவிலை முழுமையாக பார்க்க இயலவில்லை. இருந்தாலும், மனதிற்கு ஒரு நிறைவு வந்துவிடுகிறது. பக்தியினால் மனம் திருப்தி அடைகிறது. புது நம்பிக்கை வருகிறது. 


வாழ்க்கையில் கட்டாயம் ஒரு முறையாவது ராமேஸ்வரம் கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க வேண்டும். நம்முடைய பாவங்களை நீக்க வேண்டும். நம்பிக்கையுடன் வழிபட்டால் நினைத்தது நடக்கும். 


(பயணம் தொடரும்)


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்