எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
சென்னை: ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முடிவு கிடைக்காததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், கூட்டணியின் தற்போதைய நிலவரம் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சின்னம் விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல் :
பேச்சுவார்த்தையின் போது, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்துப் பேசிய அருணாச்சலம், "இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. அவர்கள் எங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டுக் கொண்டனர். ஆனால், நாங்கள் எங்கள் கட்சியின் அடையாளமான 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகத் தெளிவுபடுத்தியுள்ளோம்," என்று கூறினார்.
கடைசி முடிவு கமல்ஹாசன் கையில் :
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் இருந்தாலும், இறுதி முடிவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் எடுப்பார் என ம.நீ.ம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்ட கமல்ஹாசன், இந்த முறை தனது கட்சி வேட்பாளர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவது கட்சியின் தனித்துவத்தைப் பேண உதவும் என்பது ம.நீ.ம-வின் நிலைப்பாடாக உள்ளது. மறுபுறம், கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது. அதே போல் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சின்னம் தொடர்பான இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில சிறிய கட்சிகள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திலேயே தொடர்ந்து போட்டியிட்டதால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. கட்சியின் அங்கீகாரம் பறிபோய் விடக் கூடாது என்பதால் தங்கள் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவது என இந்த முறை அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதே போல் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதால், கடந்த முறை போட்டியிட்ட 173 தொகுதிகளை விட குறைவான தொகுதிகளிலேயே திமுக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.