டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, டிசம்பர் 26 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ உயரத்தில் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 25 வரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அல்லது புகைமூட்டம் இருக்கலாம். டிசம்பர் 24 வரை குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். டிசம்பர் 25 முதல் 27 வரை வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக இயல்பாகவே காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக கன்னியாகுமரியில் 31.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக திருப்பத்தூரில் 15.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை அறிக்கையின்படி, டிசம்பர் 25 வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேலும், டிசம்பர் 26 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். டிசம்பர் 27 அன்று உள் தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னை, புதுச்சேரி, கன்னியாக்குமரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.