இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

Meenakshi
Dec 05, 2025,03:34 PM IST

சென்னை: இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 4 நாட்களாகவே மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் டெல்லி விமான நிலையத்தில் 172 விமானங்களும் அடங்கும். மும்பை விமான நிலையத்தில் குறைந்தது 118 விமானங்களும், பெங்களூருவில் 100 விமானங்களும், ஐதராபாத்தில் 75 விமானங்களும், கொல்கத்தாவில் 35 விமானங்களும், சென்னையில் 26 விமானங்களும், கோவாவில் 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


இண்டிகோ விமான நிறுவத்தில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் மற்றும் குமறுபடிகள் காரணமாக கடந்த 4 நாட்களாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையங்களுக்கு வந்து நீண்டநேரம் காத்திருந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விமானங்கள் ரத்து பற்றி எந்த தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.




இந்த சம்பவங்களை அடுத்து விமான ரத்து மற்றும் தாமதங்களை குறைக்க உரிய செயல்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கேட்டுக்கொண்டுள்ளது.


இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று இயக்கப்படும் இண்டிகோ விமானங்கள் மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து இண்டிகோ விமான நிறுவனம் தெளிவான காரணம் ஏதும் இதுவரை தெரிவிக்காமல் இருந்து வருகிறது.