Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

Su.tha Arivalagan
Dec 09, 2025,04:15 PM IST

- அ.கோகிலா தேவி


டெல்லி: 2025 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட (Most Searched Athlete) இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா பெற்றுள்ளார். அவரது இந்தச் சாதனை, ஒரு சர்வதேச வீரராக அவரது அபாரமான எழுச்சியைக் குறிக்கிறது.


2025 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில், அபிஷேக் ஷர்மாவின் ஆக்ரோஷமான மற்றும் பயமற்ற ஆட்டம் பாகிஸ்தான் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.


குறிப்பாக, ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் ரசிகர்களின் கண்களைக் கவர்ந்தது. அவர் வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து, மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டைப் பதிவு செய்தார். அவரது இந்த ஆட்டம்தான், பாகிஸ்தான் கிரிக்கெட் பிரியர்கள் மத்தியில் அவரைப் பற்றித் தேட ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.




இந்தப் போட்டி மட்டுமல்லாமல், தொடர் முழுவதும் அவர் வெளிப்படுத்திய அதிரடியான மற்றும் தொடக்க ஆட்டக்காரருக்கான ஸ்திரமான பங்களிப்பும்  அவரது புகழை மேலும் உயர்த்தியது. 


அபிஷேக் ஷர்மாவின் அபாரமான பேட்டிங் திறன் மற்றும் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை இலக்காகக் குவிக்கும் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை ஆகியவற்றின் காரணமாக, அவர் 2025 ஆம் ஆண்டில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டராகத் தரவரிசையில் உயர்ந்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் பெற்ற விரைவான மற்றும் நிலையான வெற்றி இந்த தரவரிசை உயர்வுக்குக் காரணம்.


பாகிஸ்தானில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட டாப் 10 வீரர்களில் முதலிடம் அபிஷேக் ஷர்மாவுக்குப் போயுள்ள நிலையில், அதற்கு அடுத்த இடங்களில் ஹசன் நவாஸ், இர்பான் கான் நியாஸி, சஹிப்ஸதா பர்ஹான், முகம்மது அப்பாஸ் ஆகியோர் உள்ளனர். முன்னணி வீரர்களான பாபர் அஸம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் டாப்பில் இடம் பிடிக்காமல் போனது ஆச்சரியம்தான்.


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)