Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

Su.tha Arivalagan
Jun 22, 2026,12:36 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


எமபுரியில் எமதர்மராஜனின்  விருந்து போஜன வேளை. மிக நீண்ட விரத நாள்கள் கழிந்து எமதர்பாரில் அனைத்து

எமகிங்கரர்களோடு சேர்ந்து எமனுக்கு விருந்து போஜன உபச்சார விழா அரங்கேற அனைத்து ஏற்பாடுகளும் 

தயாராகிக் கொண்டு இருந்தன. 


உணவு மேசையின் முன் கடும்பசியோடு காத்திருந்த எமதர்மன் தனது உதவியாளரிடம் இன்று என்ன சிறப்பான

உணவு வகைகள் என்று உணவுப் பட்டியலில் உள்ளவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தான். உதவியாளர் மிகுந்த உற்சாகத்தோடு அன்றைய உணவுப் பட்டியல் பற்றி, "மிக மிக சுவையான ஸ்வாரஸ்யமான மெனு மன்னா! புதுமையான முறையில் இன்று தங்களுக்கு உணவு படைக்கத் திட்டமிட்டுள்ளோம்!" என்றார். 


"அப்படி என்ன புதுமையான முறையில் சுவாரஸ்யமான சுவையைப் படைக்கப் போகிறீர்கள்?" 


"தாங்கள் சுவைப்பதற்கான உணவுகள், பூவுலகில் இருந்து நேரடியாக உயிர்களைத் தருவித்துச்  சுடச்சுட எடுத்துவந்து படைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது மன்னா!" 


'அதற்காக உலகின் பல இடங்களிலும் நமது கிங்கரப் பணியாளர்கள் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் போல, விரைந்து உயிர்களை எடுத்து வந்து தங்கள் முன் படைக்க ஆயத்த நிலையில் உள்ளனர். இங்கிருந்து  நீங்கள் எந்த உயிரினை வேண்டும் என்று விரும்பிக் கேட்கிறீர்களோ? அதனை உடனடியாக நம் எம கிங்கரர்கள் கொணர்வார்கள்.'


"அதெல்லாம் சரியே...! உங்களின் இந்தப் புதுமை விளையாட்டு என்னைச் சங்கடத்தில் கொண்டு நிறுத்திவிடக் கூடாது... ஜாக்கிரதை!" என எச்சரித்தான் எமன். ஆனாலும் நாம் நமது கொண்டாட்ட மனநிலையில் தர்மம் தவறிவிடக் கூடாது...!  மிகுந்த விழிப்போடு செயல்படுங்கள்.




சித்ர குப்தா! நீ, உனது பேரட்டினைத் தயாராக வைத்துக் கொள்!


பூலோகத்தில் இருந்து எடுக்கப் போகும் உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளையும் அவ்வுயிரின் விதிக்  கணக்கையும் மிகவும் கவனமாகப்  பார்த்துச் சொல்லிக் கொண்டே வா!" - என்றான் தர்மராஜன்.


"மன்னா! ஆரம்பிப்போமா... தங்களின் முதல் தெரிவைச் சொல்லுங்கள்" என்று வெகு பணியாகக் கேட்டுக் கொண்டு உதவியாளர் நின்றார். எமலோகத்தின் காட்சித் திரையில் பூலோகத்தின் வீதிகள், கட்டடங்கள் என அணிவகுப்பு போல மானிட கண்காட்சி தெரியத் தொடங்கியது. 


எமதர்ம ராஜன், "சித்ர குப்தா! இதோ இவன் இவன்... வீதியில் செல்வோர்க்கு பீதி கிளம்பும்வண்ணம் வாகனம் ஓட்டும் இந்தப் பயலின் விதியைக் கூறுவாயாக!" என்று தனது  முதல் தெரிவாக போக்குவரத்து அதிகம் உள்ள பெருநகர 

வீதியில் விதிமுறையை மதிக்காது வாகனம் ஒட்டிய ஒருவனைக் காட்டினான். 


"மன்னர்மன்னவா! சர்வ நிச்சயமாக இவனை இப்போதே நாம் தட்டித் தூக்கலாம்!" என்று விதிக்கணக்கு மற்றும் பாவ - புண்ணியப் பேரேட்டின் பக்கங்களின்வழி கணக்கு நேர் செய்யும் வேலையை கனகச்சிதமாக சித்ரகுப்தன் செய்து கொண்டு வந்தார். 


எமதர்மனுக்கு இப்போது இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றத் துவங்கியது. அடுத்தடுத்து இதுபோன்றே வேறு வேறு பெருநகரங்களின் போக்குவரத்துப் பாதைகளைப் பார்த்துத் தேர்வு செய்து கொண்டே வந்தார். 


பட்டபகலிலேயே குடித்துவிட்டு விழுந்து கிடந்த நடுவயது மனிதனைக் காட்டி, இவன் விதியைப் பார்...! என்றார்.


எமதர்மன் தேர்வு செய்யும் உயிர்களின் பாவ - புண்ணிய பலாபலன் கொண்டு விதியின் கணக்கை நேர்செய்தும் கூட்டியும் கழித்தும் அடுத்த ஜென்மத்தில் பற்று வரவு வைத்தும் என்று சித்ரகுப்தன் படுபிஸியாக கணக்கை செட்டில் செய்து கொண்டு வந்தான். 


இப்போது நாம் அடுத்ததாக மருத்துவமனைகளுக்குள் செல்லலாம்... என்று காட்சியின் கோணத்தை மாற்றி, பெரும் பெரும் பிரம்மாண்ட மருத்துவ வளாகக் கட்டிடங்களின் உள் தனது தேடலைத் துவங்கினார் எமன். ஐ.சி.யு வார்டில் உள்ள இந்தப் பெண்ணின் கணக்கைச் சரிபார்! சித்ரகுப்தா.. ! என்றார். அவளின் கணக்கைப் பார்த்து அரண்டு போன சித்ரகுப்தன்... "அரசே! இவ்வுயிர் இப்போது உங்கள் கையில்..." என்றான். அதாவது 'இப்போது நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும்' என்ற பொருள்பட உரைத்து நின்றார். 


அதற்குள் எமதூதர்கள், விரைந்து கொணர்ந்து  எமதர்மன் கரங்களில் ஒப்படைக்க, தம் கரங்களால் எடுத்துச் சுவைக்க வாயருகில் கொண்டு சென்றவேளையில், சித்ரகுப்தன், பதறியடித்துக் கொண்டு, "மன்னர்மன்னவா! வேண்டாம் ஐயா. வேண்டாம்.. இவ்வுயிர்க்காக ஒரு பெருங்கூட்டமே ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டு 

இருக்கிறது; மற்றொரு பக்கம் மிருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்பட்டுள்ளது. 


இவை எல்லாவற்றையும் விட மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அரணாக இவளைச் சுற்றி ஒரு கவசம் போல காத்து நிற்கிறது; ஆனால் அது என்னவென்று என்னால் துல்லியமாக அறிய முடியவில்லை மகாபிரபு. நீங்கள்தான்... அதனைக் கண்டு சொல்ல வேண்டும்" என சித்ரகுப்தன் தனது பேரேட்டுப் பக்கங்களை எமனிடம் கொணர்ந்து  நீட்டினான். 


உடனடியாக எமனும் தன் கரங்களில் வைத்திருந்த அப்பெண்ணைக் கீழே வைத்துவிட்டுப் பேரேட்டைப் பெற்றுக் கொண்டு உற்று நோக்கத் துவங்கினார். எமனும் மிரண்டுபோய், "சித்ரகுப்தா...! நல்ல நேரத்தில் என்னைத் தடுத்தாயப்பா... இல்லாது போயிருந்தால்  நீயும் நானும் ஈசனின் விசாரணைக் களத்தில் பலியாகி இருப்போம்....

இப்பெண்ணினைக் காக்கும் கவசம் போன்ற ஒன்று என்னவென்றால்...


'சில திங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம், இப்பெண் ஒருநாள் காலையில், வழக்கம் போல் தன் மிதிவண்டியில் கல்லூரிக்குப் போவதற்காகக் கிளம்பினாள். அப்போது அவள் தினமுமே தான் குடியிருக்கும்  வீட்டுக்கார அம்மாளிடம் 

எப்போதும் "காலேஜ்க்குப் போய்ட்டு வாரேன் அம்மா!" என்று சொல்லிச் செல்வது வழக்கம்.  


அதுபோன்றே அன்றும் சொல்வதற்காக வீட்டின் கொல்லைப்புறமெல்லாம் தேடிவிட்டு, நேரமாகிவிட்டது... மாலையில் வந்து விளக்கம் சொல்லிக் கொள்வோம். இப்போது புறப்படுவோம் என்று நினைத்துக் கொண்டு தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டின் மதில் சுவர் கடந்து தெருவிற்கு வந்தாள். 


அங்கு தங்கள் வீட்டின் எதிர்வீட்டு அம்மாளுடன் வீட்டுக்கார அம்மாளும் நின்று பேசிச் சிரித்து கொண்டு நிற்பதைக் காண்கிறாள். உடனே அருகில் சென்று, "அம்மா... நான் உங்களை வீட்டினுள் தேடிக் கொண்டு இருந்தேன். நீங்கள் இங்கே  இருக்கிறீர்களா!? நல்லது அம்மா... எனக்கு நேரமாகிவிட்டது. நான் காலேஜ்க்குப் போய்ட்டு வாரேன்' என்று தன் வீட்டுக் கார அம்மாளிடம் புன்னகையோடு சொல்லிய வண்ணமே... அருகில் இருந்த எதிர்வீட்டு அம்மாளிடமும் 'அம்மா! நான் போய்ட்டு வாரேன்' என்று மாறாத புன்னகையோடுச் சொல்லிவிட்டு தனது லேடி பேடில் சிட்டாகப் பறந்துவிட்டாள்.


எதிர்வீட்டு அம்மாளுக்கோ பயங்கர அதிர்ச்சி! தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை வார்த்தையில் வர்ணித்துச் சொல்ல முடியாது, கண்களில் அருவிப் பெருக்கு ஊற்றெடுத்துவிட்டது.   உடன் நின்று பேசிக் கொண்டு இருந்த வீட்டுக்கார அம்மாள் பதறிப்போய், 'என்னாச்சு..! என்னாச்சு ...! ஏன் அழுறீங்க!' 


"யாரு பெத்த புள்ளயோ! மகராசி... நல்லா இருக்கணும் ஆத்தா! நீ  நல்லாயிருக்கணும்..." என் மனசு குளுந்து உன்ன வாழ்த்துறேன் தாயி! நீ நல்லாயிருக்கணும்..."


மனதார வாழ்த்திய அந்தப் பெரியமனுஷி, தன் கண்ணீரின் ஊடே, "என் வீட்டில் நான் பெத்த பிள்ளைகளே! வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் போது என்னிடம்  சொல்லிக் கொண்டு செல்வதை விரும்ப மாட்டாங்க. அவர்கள் வெளிக் கிளம்பும்போது நான் அவர்கள் கண்ணில் பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக என் அறையின் மூலையில் 

பதுங்கிக் கொள்வேன். தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால், அவர்கள் செல்ல நினைத்த இடத்திற்குச் செல்லாமல் விட்டுவிடுவர். 'அபசகுனம் பிடித்த கிழவி, வேண்டும் என்றே நம் பிளானை எல்லாம் கெடுத்துவிட்டாள்' என்று வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே இருப்பார்கள்... அந்த வாரம் முழுவதும். 


என் வீட்டுக்காரர் தவறியதில் இருந்து இதுதான் தொடர்வாடிக்கை... என்று தனது பலநாள் வேதனையைச் சொல்லியதோடு, இன்று இந்தப்பெண் தன்னிடம் சொல்லிக் கொண்டு சென்றது... தன் மனதை என்னவோ செய்கிறது" என நெகிழ்ந்து போனார். எமதர்மராஜன், இந்த முன் சம்பவம் அனைத்தையும் சித்ரகுப்தனுக்கு விளக்கிக் காட்டினார். 

"இப்போது புரிகிறதா? சித்ரகுப்தா... இப்பெண்ணைக் காக்கும் கவசம் போன்றது... அம்மூதாட்டியின் மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்!" 


"நாமும் இவளை வாழ்த்தி மீண்டும் பூலோகத்திற்கே அனுப்பி வைப்போம்!"


தூதர்களே! இப்பெண்ணை பத்திரமாக எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வாருங்கள்.


"அந்தப் பெண்ணின் செயலோ வெகு சாதாரணமான ஒன்றாகத் தோன்றலாம்; ஆனால்,அந்த மூதாட்டியின் பல்லாண்டு மனவேதனைக்கு மருந்திட்டது போன்ற இந்த சிறு செய்கையின் விளைவே இவளின் ஆயுள் நீளப் போதுமானது!''


'தர்மத்தின்  காவலரே! இப்போது நம்மைப் பற்றி கதை எழுதிக் கொண்டு இருக்கிறாளே... இவள் கதையை நாம் முடித்துவிடலாமா?!' எனக் கேட்ட கிங்கரனிடம், 'அவசரப்படாதே! மடையா! அவள் இப்போதுதானே கதை எழுதி உள்ளாள்... அது இன்னும்  பிரசுரமாகவில்லையே...! வரட்டும் வரட்டும்! அச்சில் வந்தபிறகு யாரெல்லாம் 

கருத்துரைக்கவில்லையோ..? அவர்களை நாம் வச்சுச் செய்யலாம்! சற்றே பொறுத்திரு!'


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).