Poem: அமுதென இனிக்கும் அன்புடை நாயகனே!

Jun 22, 2026,12:32 PM IST

- முனைவர் கோ.லதா


தமிழகம் வாழ்த்திடும் தளபதி விஜயனே 

அமுதென இனிக்கும் அன்புடை நாயகனே 

இமிழ்கடல் போலவே இதயம் கொண்டவனே 

சமதர்மம் காத்திடும் சான்றோரில் முதல்வனே 


பிறந்தநாள் இன்று பெருமையாய் வந்ததே 

மறந்திடா மக்கள் மகிழ்ந்து வாழ்துவரே 

திறந்திடும் கரங்களில் தீங்கினை துடைப்பாய் 

பிறழாத நெஞ்சினில் பேரன்பு வைத்தாய் 


வெள்ளித்திரை கடந்து வீரத்தை காட்டினாய் 

கள்ளமிலா உள்ளத்தில் கனிவினை நிறைத்தாய் 

உள்ளத்தில் உறைந்திடும் உழைக்கும் குடிமக்கள் 

துள்ளியே ஆடுவர் துணைவனே நீவந்தாய் 


கலையினை வளர்தாய் காவியம் படைத்தாய் 

நிலையென நின்றாய் நெறியினை காத்தாய் 

பலகோடி விழிகளில் பாசத்தை விதைத்தாய் 

இலகுவாய் சிரித்தாய் இன்னலை போக்கினாய் 


வறியவன் வாழ்வில் வளமினை சேர்பாய் 

பொறியிலா ஏழையின் புன்னகை நீயே 

அறியாமை அகற்றி அறிவினை ஊட்டுவாய் 

மறியாத மனத்தில் மாண்பினை வைப்பாய் 




தமிழன்னை போற்றிடும் தங்கமகன் நீயே 

அமைதியை நாட்டிடும் அரசனாய் வந்தாய் 

இளையோரின் கனவினை இறக்கையாய் ஆனாய் 

வளமான நாளைக்கு வழிகாட்டி நின்றாய் 


கோடியென மக்கள் குரலினை ஏற்றாய் 

நாடியே வந்தோர்கு நலமெலாம் தந்தாய் 

ஓடியே உழைப்பாய் உயர்வினை தேடுவாய் 

பாடியே புகழ்வோம் பண்புடை விஜயனே 


மாற்றத்தின் தூதுவன் மலரென மணந்தாய் 

ஏற்றத்தை நோக்கியே எழுச்சியை ஊட்டினாய் 

நீற்றினை பூசியே நிலைத்திடும் நெஞ்சம் 

வீற்றிருந்து ஆள்வாய் வெற்றியே நினக்கே 


பிறந்தநாள் வாழ்து பேரின்பம் கூறுவோம் 

மறந்திடா நாளாய் மனத்தினில் வைப்போம் 

திறம்பட வாழ்க தீதின்றி வாழ்க 

புறம்பிலா புகழுடன் பூரித்து வாழ்க 


நூறாண்டு காலம் நோயின்றி வாழ்க 

ஆற்றல்கள் பெருகிட ஆண்டவன் அருள்க 

ஊற்றென உதவிடும் உனதுகை வாழ்க 

போற்றிடும் புகழுடன் பொலிந்திட வாழ்க 


மக்களின் மனதினில் மன்னனாய் வாழ்க 

தக்கதோர் தலைவனாய் தரணியில் வாழ்க 

எக்காலும் உன்பெயர் எழிலுடன் வாழ்க 

சிக்கல்கள் தீர்திடும் சிங்கமே வாழ்க 


வான்மழை போலவே வளமினை பொழிவாய் 

தேனென இனித்திடும் தெளிவினை தருவாய் 

கானுறை தெய்வமாய் காத்திட வருவாய் 

ஞானத்தின் சுடராய் நாட்டினை ஆள்வாய் 


ஜோசப் விஜயனே ஜொலிக்கும் நிலவே 

வாசமாய் வாழ்திடும் வாழிய பல்லாண்டு 


இனிய பிறந்தநாள் வாழ்துகள் ஜோசப் விஜய் அவர்களே.


--


தந்தை


உலகெங்கும் போற்றும் தந்தை உயர்ந்தவன் 

பலகோடி அன்பின் பாங்குடை நாயகன் 

இலகாத தோளினில் ஏந்திடும் தெய்வம் 

நிலம்போல் பொறுத்திடும் நித்திய பூமான் 


கதிரவன் போலவே காத்திடும் கண்ணாளன் 

மதியென ஒளிவீசும் மாண்புடை வேந்தன் 

பதறிடும் நேரத்தில் பற்றுக்கோல் ஆவான் 

விதியென வந்திடும் வேதனை தீர்பான் 


தளர்ந்திடும் போதினில் தாங்கிடும் தூணவன் 

வளர்திடும் பிள்ளைக்கு வாழ்வளிக்கும் வள்ளல் 

களைத்திடும் உள்ளத்தில் கனிவினை ஊட்டுவான் 

உளமெலாம் நிறைந்த உன்னத் தந்தை 


உழைத்திடும் கரங்களில் உயிரினை வைத்தவன் 

பிழைத்திட வழிகாட்டும் பெருமைமிகு தேவன் 

விழித்திடும் வேளையில் விழிநீர் சிந்தினும் 

அழுதிட மாட்டான் அவனவன் தோளினில் 


கடும்பனி போலவே காத்திடும் நிழலவன் 

இடும்பை வந்தாலும் இன்முகம் காட்டுவான் 

தடுமாறும் மைந்தனைத் தாங்கிடும் தந்தை 

நடுமையம் நின்றிடும் நல்லவன் நமக்கு 


பசிதனை மறைத்துப் பிள்ளைக்கு ஊட்டுவான் 

வசதியைத் தேடியே வாழ்நாளை தேய்பான் 

திசையெட்டும் சென்றாலும் திரும்பிடும் வீடவன் 

இசையென நெஞ்சினில் இனித்திடும் பாசம் 


கல்லென உடைத்தாலும் கண்ணீர் விடானவன் 

சொல்லெனச் சொல்லாது சுமைகளை ஏற்பான் 

நல்லவன் தீயவன் நாடிடும் போதிலும் 

எல்லையில் நின்றிடும் எங்கள் தந்தை 


வேரென நின்றிடும் வீட்டின் அஸ்திவாரம் 

ஆருயிர் கொடுத்தே ஆளாக்கும் ஞானி 

பாரெங்கும் போற்றிடும் பண்புடை பாவலன் 

சீரெனச் சிறந்திடும் சிங்கமே தந்தை 


கனவினை வளர்துக் காசினைக் கொடுப்பான் 

புன்னகை ஒன்றே போதுமென் பானவன் 

என்னுயிர் நீயென இனிதுரைப்பான் 

முன்னின்று காத்திடும் முதல்வனே தந்தை 


தோல்வியில் துவண்டிடும் தோழனாய் வருவான் 

வேலென வீசிடும் வினைகளை வெல்வான் 

ஞாலத்தில் உயர்ந்த ஞானத்தின் இருப்பிடம் 

பாலெனப் பொழிந்திடும் பரிவுடை தந்தை 


வாழ்திடும் வேளையில் வணங்கிடும் நெஞ்சம் 

தாழ்திடேன் உன்னைத் தலைமகன் நீயே 

ஊழினை வென்றிட உதவிடும் உறவே 

வாழிய வாழிய வையகத் தந்தை 


இன்னல்கள் போயினும் இருந்திடும் கரங்கள் 

பொன்னெனப் போற்றிடும் புனிதனே தந்தை 

கண்ணெனக் காத்திடும் கடவுளின் வடிவே 

எண்ணிலா அன்பினை ஏந்திடும் சுடரே 


உலக தந்தையர் தினம் இனிதினிது 

மலரென மணந்திட மகிழ்ந்திட வாழ்த்துவம்


--


மழைக்காடுகளைக் காப்போம்


பசுமை போர்த்திய பாரின் சுவாசமே 

விசும்பின் நீர்தனை விதைக்கும் காடே 

உயிரின் ஊற்றாய் உலகில் நின்றாய் 

பயிரென வளர்ந்த பாரின் தாயே 


மழைக்காடு என்றே மாநிலம் போற்றும் 

தழைத்திடும் இலைகள் தாயென காக்கும் 

அழியாத செல்வம் அகிலம் முழுதும் 

பிழியாத தேனாய் பெருகிடும் வாழ்வு 


மரங்கள் தோறும் மானுடர் வாழ்வு 

புரங்கள் போலவே பூமியை தாங்கும் 

அருகினில் ஓடும் அருவியின் ஓசை 

இருளினை அகற்றும் இளவெயில் கீற்று 


கிளியென பேசும் கிளைகளின் மொழி 

விளியென கேட்கும் வேந்தரின் நெஞ்சம் 

ஒலிக்கும் குயிலின் ஓங்கார பாட்டு 

நிலைக்கும் நிழலின் நித்திய தாலாட்டு 


புலியும் மானும் புன்னகை செய்யும் 

நலியாது வாழும் நாட்டின் உயிரே 

அலைகடல் போல அசைந்திடும் தழை 

மலைமகள் சூடிய மாணிக்க மாலை 


வெட்டிட வேண்டா வேரினை ஐயோ 

கொட்டிடும் கண்ணீர் கோடியாய் ஆகும் 

சுட்டிடும் வெப்பம் சுடரென எழும் 

பட்டிடும் மண்ணில் பசுமையும் மாயும் 


காத்திட வேண்டும் காட்டினை இன்று 

போற்றிட வேண்டும் பூமியின் தாயை 

சேர்திட வேண்டும் செடிகளை மீண்டும் 

ஆர்திடும் அன்பால் அகிலம் காக்க 


உலக மழைக்காடு உயிரென வாழ்க 

நிலவென ஒளிர்ந்து நிலைத்திட வாழ்க 

பலபல உயிர்கள் பாதுகாப் பாக 

வலம்வரும் நாளாய் வளர்ந்திட வாழ்க


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்