மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

Jun 23, 2026,01:00 PM IST


சென்னை: சட்டசபையில் இதுநாள் வரை அமைதியாக இருந்து வந்த முதல்வர் சி. ஜோசப் விஜய், இன்று யாருமே எதிர்பாராத அளவுக்கு ஆவேசமாகவும் அதிரடியாகவும் பேசியதால் பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் ஆவேசமாகப் பேசத் தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.


முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய அனல் பறக்கும் உரை:


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாபெரும் தலைவர்கள் வழிநடத்திய மாண்பும், மாபெரும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்த 17-வது சட்டமன்றப் பேரவைக்கு நம்மையும், நம்ம தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பிய, நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தாயன்புமிக்க தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்!


17-வது சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலுரை வழங்க வாய்ப்பளித்த மாண்புமிகு பேரவைத் தலைவருக்கு நம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




இந்த 17-வது மாமன்றத்தில் அதிகப்படியாக 12 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். நாம் கொள்கை ரீதியாகவும் நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டு இருந்தாலும், மக்கள் பணி செய்வதுதான் நம் எல்லாருக்கும் முதன்மையான ஒரே இலக்கு (Primary Aim). அந்த வகையில்தான் நாம் எல்லாரும் நம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுச் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோம்.


அதனால், நாம் கருத்தால் வேறுபட்டாலும் மக்கள் சேவை என்ற நோக்கத்தில், நம் மாநிலம் சார்ந்த விஷயங்களில் எல்லாரும் ஒன்றிணைந்து பயணித்தால், நம் தமிழ்நாடு என்னைக்கும் எதிலும் முதன்மை மாநிலமாகத் திகழும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நன்றி.


எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி என்று நிரூபிக்க முடியும் என்று நினைத்துக்கொண்டு பேசிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் வணக்கமும் நன்றியும்.


பதிலுரை வழங்குகிற அதே நேரத்தில், நம்மைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நம்முடைய நெஞ்சார்ந்த நன்றிகள். அதே மாதிரி ராஜினாமா பண்ணிட்டாலும், நம்மைத் தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு மக்களுக்கும் இந்த மன்றத்தில் நம்மோடு நன்றியைப் பதிவு செய்கிறோம்.


அப்புறம் நம்மோடு அரசியல் பயணத்தைப் பற்றியும் கொஞ்சம் பதிவு செய்ய விரும்புகிறோம். நாம் ஏதோ சூட்டிங்கிலிருந்து (Shooting) நேராக வந்து சி.எம். (CM) ஆன மாதிரியே சில பேர் ஒரு பிம்பத்தை (Image) உருவாக்குகிறார்கள். அவங்களுக்கு அவங்க ஆசைப்படுற மொழியிலேயே சொல்கிறோம்; அது வெறும் 'ரியல்' (Reel) தான், 'ரியல்' (Real) கிடையாது.


ஒரு சாதாரண நடிகனாகத்தான் நம் பயணம் தொடங்கியது. அப்புறம் அப்படியே உண்மையாக உழைத்து மேலே வந்தோம். நம்முடைய பயணத்தில் நாம் மேலே வந்ததற்கு இந்த விஜய் ஒருத்தன் மட்டுமே காரணம் இல்லை; அவனுடைய உழைப்பு மட்டுமே காரணம் இல்லை. இந்த விஜய்யின் உழைப்புக்கும் உயர்வுக்கும் பின்னால் இருக்கிற ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் அன்பும் அரவணைப்பும்தான் காரணம்.


ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஒவ்வொருத்தரும் நம்மை அவர்கள் வீட்டில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதுதான் நமக்குக் கடவுளும் மக்களும் தந்த மிகப்பெரிய வரம். அதுக்காகவே கடவுளுக்கும், கடவுளுக்குச் சமமான நம்முடைய சொந்தங்களான தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.




இப்படி நம்மைத் தாயன்போடு அள்ளி அரவணைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் எப்படியெல்லாம் துணையாக இருந்தோம், எப்படியெல்லாம் மக்களோடு மக்களாக இருந்தோம் என்று சொல்கிறேன்.


1990-களிலேயே ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்குத் துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதுக்கப்புறம் நற்பணி மன்றமாகவும், அதுக்கப்புறம் விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்றுகொண்டிருந்தோம்.


2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வர வேண்டும், நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பான, நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றைக்கே கோரிக்கை வைத்தோம்.


2009-ல் ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கம் வழியாக நம்முடைய மக்கள் நலப் பணிகளை விரிவுபடுத்திக்கொண்டே (Extend and Expand) வந்தோம். கல்விக்குத் துணையாக இருந்தோம், சமூகச் சேவை செய்தோம், வெள்ள நிவாரணத்தில் துணையாக இருந்தோம், கொரோனா காலத்தில் மக்களுக்குத் தோள் கொடுத்தோம்.


விலையில்லா விருந்தகம், குருதியகம், முட்டை, பால், ரொட்டித் திட்டம், விழியகம், பயிலகம், நூலகம் இப்படிப் பல வழிகளில் மக்களுக்குத் துணையாக இருந்தோம்.


அப்புறம் நம்முடைய திரைப்படங்களில் நம்மால் முடிந்தவரைக்கும் ஊழல் எதிர்ப்பைச் சொன்னோம், சமூக நீதியைச் சொன்னோம், கல்வியைப் பற்றிச் சொன்னோம், அரசியலைப் பற்றிச் சொன்னோம். அரசியலைப் பற்றிப் பேசினதால் நம் படங்கள் சந்தித்த, ஏன் இதுவரைக்கும் சந்திக்கிற பிரச்சினைகளைப் பற்றி எல்லாரும் அறிந்ததுதான்.


இதுமட்டுமில்லாமல், 2011-ல் நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைகளுக்கு ஆதரவாக ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்தினோம். மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசி, அதில் நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.


2017-ல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழர் பண்பாட்டு உரிமைக்கான நம்முடைய ஆதரவைத் தெரிவித்தோம். 2018-ல் ஸ்டெர்லைட் போராட்டத் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னோம்.


2021-ல் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிட்டு ஜெயித்தார்கள். கல்வி விருது விழா நடத்தி, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் பரிசும் கொடுத்தோம்.


2024-ல் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தோம். ஆரம்பித்த உடனேயே சி.ஏ.ஏ-வை (CAA) எதிர்த்து அறிக்கை விட்டோம். அரசியல் கட்சி ஆரம்பித்து, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் நம்முடைய முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவை நடத்தினோம். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரை நம்முடைய ஐந்து கொள்கைத் தலைவர்களாக அறிவித்தோம்.


இந்தியாவில் இரண்டு பெண் ஆளுமைகளைக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி நம் டி.வி.கே. (TVK) மட்டும்தான் என்ற பெருமையோடு அறிவித்தோம்.


பெரியார் சொன்ன மாதிரியே, அவர் சொன்னதில் நமக்கு ஏற்புடையதை மட்டும் எடுத்துக்கொண்டோம். அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்தோம். நமக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று தெளிவாக அறிவித்தோம். பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூக நீதி இப்படிப் பெரியாரின் கருத்துகளை நிறையவே ஏற்றுக்கொண்டோம் என்று அறிவித்தோம்.


அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சமநீதி, சமத்துவத்தைப் பின்பற்றுவோம் என்று அறிவித்தோம். பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக்கொண்டதோடு, அவருடைய நேர்மையான நிர்வாகத்தையே ஒரு கொள்கையாக ஏற்றுக்கொண்டோம் என்று அறிவித்தோம்.


வீரமங்கை வேலுநாச்சியாரின் மண் மீட்பையும் சமூக நல்லிணக்கத்தையும் பின்பற்றுவோம் என்று அறிவித்தோம். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் விடுதலை வேட்கையையும், மக்களின் வாழ்வாதாரத்திற்காக உறுதியாக நிற்பதையும் பின்பற்றுவோம் என்று சொன்னோம்.


எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும், 'எம்மதமும் நம்மதம்' என்று சொல்லி, மதச்சார்பற்ற சமூக நீதிதான் நம்ம கொள்கை என்று அறிவித்தோம். நம் கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று வெளிப்படையாக அறிவித்தோம். எல்லாத்துக்கும் மேல 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறதை நம்முடைய அடிப்படை அரசியல் கோட்பாடாக அறிவித்துவிட்டுத்தான் அரசியலுக்கே வந்தோம்.


நம் மதுரை மாநாட்டில், நம்முடைய தேர்தல் அரசியல் மற்றும் ஆட்சி அதிகார அரசியல் வழிகாட்டியாக அறிஞர் அண்ணாவையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தோம்.


அப்புறம் இன்னொன்றையும் நாம் இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும். எல்லாரும் கட்சி ஆரம்பித்துவிட்டுத்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போவார்கள். ஆனால் நாம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போனதற்கு அப்புறம்தான் கட்சியையே ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருத்தரும் நம்மை அவர்கள் பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டதும் இயல்பாக நடந்தது. தமிழ்நாட்டு மக்களின் மனசுக்குள் போவதற்கு நாம் பட்ட பாடு நமக்கு மட்டும்தான் தெரியும்.


இதெல்லாம் புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறவர்கள்தான் நம்மை 'நடிகன்' என்று சொல்லியும், நம் கட்சியை 'நடிகன் கட்சி' என்று சொல்லியும் சில நக்கல், நையாண்டிகளைப் பேசுவார்கள். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இப்படி நம் அரசியல் பயணம் ரொம்ப வெளிப்படையாகத்தான் (Transparent) ஆரம்பித்திருக்கிறது.




இந்த 2026 தேர்தலில் கூட்டணியே இல்லாமல் தனியாக நின்றோம். மக்கள் நம்மைத் தெளிவாகப் புரிந்துகொண்டதாலும், நம் டி.வி.கே. தோழர்களின் உழைப்பாலும் நாம் 35% வாக்குகளை வாங்கினோம். ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகளோடு தமிழ்நாட்டிலேயே தனிப் பெரும் கட்சியாக வந்தோம். தமிழக மக்களாலும் நம்முடைய ஆதரவு இயக்கங்களாலும் இதோ இன்று இங்கே நம் டி.வி.கே. ஆளும்கட்சியாக உட்கார்ந்திருக்கிறோம். இந்த ஆளும்கட்சி ஆனது ஒன்றும் அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடவில்லை.


"இரண்டு, இரண்டேகால் வருஷத்தில் ஆட்சிக்கு வந்துட்டீங்க" என்று ரொம்பக் கிண்டலாக, ஏளனமாகச் சிலர் பேசுகிறார்கள். எங்களோட இந்த இரண்டு, இரண்டேகால் வருஷப் பயணத்தில் எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கிறது! நம்முடைய மக்கள் சந்திப்புக்கே அவ்வளவு இடையூறுகள், அவ்வளவு தடைகள்.


ஊர் உலகத்தில் யாருக்கும் இல்லாத ஒன்றாக நமக்கு மட்டுமே என்று தனியாக, சிறப்பாக, பிரத்தியேகமாக (Exclusive) நிறைய நிபந்தனைகள், நெருக்கடிகள், கட்டுப்பாடுகள். நம்மைச் சந்திக்க வர மக்களுக்குச் சரியான பாதுகாப்பு இல்லாமல், நம் கூட்ட நிகழ்ச்சிக்கு போதுமான பாதுகாப்பு இல்லாமல் என்று இன்னும் வெளியே சொல்ல முடியாத நிறைய சூழ்ச்சிகள்... எல்லாவற்றையும் தாண்டித்தான் நாம் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்.


ஆனால், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் (But still, miles to go). நம் பயணத்தில் எல்லாத்துக்கும் உச்சமாக நம்முடைய சொந்தங்கள், நம்முடைய உறவுகள் 41 பேரை கரூர் சம்பவத்தில் இழந்த வேதனையெல்லாம் எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. நம் மனதை விட்டு என்னைக்கும் அந்த வலியும் வேதனையும் நீங்கவே நீங்காது.


அதுலயும் நம்ம மேலேயே பழி போட்ட கொடுமையெல்லாம் இருக்கும் பாருங்க, அதெல்லாம் வேற லெவல்ங்க. என்னத்துக்கு அப்படியெல்லாம் செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசியல்னா இப்படியெல்லாம் கொடூரமாக இருக்க வேண்டுமா என்ன? சரி விடுங்கள்.


இந்த விஜய் இவனுடைய மக்களுக்காக எதையும் தாங்கத் தயாராகிவிட்டான். இவ்வளவு வேதனை நிறைந்த நம்முடைய அரசியல் பயணத்தில் (Political Travel) நம்முடைய மிகப்பெரிய ஆறுதலும் பலமும் என்ன தெரியுமா? என் நெஞ்சில் குடியிருக்கும் என்னோட தமிழ்நாட்டு மக்களும், என் உயிருக்கு உயிரான என்னோட தோழர்களும்தான்.


அவர்களுடைய பலத்தால்தான் அன்னைக்கு 1967-ல் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த சாமானியர்களின் ஆட்சி மாதிரி, 1977-ல் முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் அமைந்த மிகச் சாமானியர்களின் ஆட்சி மாதிரி, இதோ இன்று அதே வரிசையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விஜய்யின் தோழர்கள் இடம்பெற்ற ஒரு மிக மிகச் சாமானியர்களின் ஆட்சி அமைந்திருக்கிறது. வாகை சூடும் வரலாறு திரும்பியிருக்கிறது!


இப்படி ஒரு தீர்ப்பை மக்கள் அளித்ததால்தான் தமிழக வரலாற்றில் ஒரு மகத்தான கூட்டணி ஆட்சியை நாம் அமைத்திருக்கிறோம். "இளைஞர்களால் என்ன செய்ய முடியும், பெண்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டவர்களுக்கான பதில்தான் இன்று அமைந்திருக்கிற நம் ஆட்சி.


ஒரே ஒரு குடும்பம் மட்டும் முக்கியம் என்று சொல்வது நம்முடைய ஆட்சி அதிகார அரசியல் இல்லை; தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்று சொல்வதுதான் நம்ம அரசியல், நம்முடைய ஆட்சி அதிகாரம். அதுதான் நம்முடைய மனசாட்சியுள்ள மக்களாட்சி.


இந்த 2026 தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று சொன்ன மதத்தை உடைத்தோம், சாதியை உடைத்தோம்; முக்கியமாகக் காசு கொடுத்து ஓட்டு வாங்குற ஒரு நச்சுக் கலாசாரத்தையே சுக்குநூறாக, தூள்தூளாக உடைத்திருந்தோம். நாம் நேர்மையான மற்றும் நல்லாட்சியில் (Clean Governance and Good Governance) உறுதியாக இருக்கிறோம். இப்ப மட்டுமல்ல, எப்பவுமே இப்படித்தான் இருப்போம். இது 100% உண்மை.


"என்னென்னமோ செய்வான்னு சொல்றானே இந்த விஜய், பல வருஷமாக இருக்கிற ஒரு பதவி வெறி பிடித்த அரசியலை உடைத்து எப்படிச் செய்வான்?" என்று நம் மக்கள் யோசித்திருப்பார்கள். இதோ இப்போது நம் மக்களுக்குப் புரிந்திருக்கும். இப்பவும் சொல்கிறோம், இது வெறும் ஆரம்பம்தான்.


இந்த மாபெரும் சபையிலிருந்து கேட்கிற மக்களே, நமக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இதுக்கு முன்னாடி, அதாவது 2017 கடைசியிலிருந்து 2026 ஏப்ரல் வரைக்கும் இருந்த புண்ணியவான்கள் ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் (Department) போட்ட ஏராளமான ஓட்டைகளை அடைத்துக்கொண்டே, படிப்படியாக மக்களுக்கு நல்லதையும் செய்துகொண்டே வருவோம். அதனால்தான் நமக்கு எதிராக யார் யாரோ சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேருகிறார்கள்; நம்ம ஆட்சிக்குத் தேதி குறிக்கிறார்கள். சரி, அவர்களை நம் மக்கள் பார்த்துக்கொள்வார்கள், அதை விடுங்கள்.


நாம் ஆட்சிக்கு வந்து சரியாக 40 நாட்கள் ஆகிறது. "அதுக்குள்ள என்ன செய்தீங்க, என்ன செய்தீங்க?" என்று கேட்கிறார்கள். ஒரு பட்டியல் சொல்கிறேன் கேளுங்கள்:


* பெண்கள் பாதுகாப்புக்காக *'சிங்கப்பெண் சிறப்புப் படை'*.

* 200 யூனிட் வரை *கட்டணமில்லா மின்சாரம்*.

* போதைப்பொருள் ஒழிப்புக்காகத் *தனிப்படை*.

* குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக *ரூபாய் 134.83 கோடி சிறப்புத் தொகுப்புத் திட்டம்*.

* வழிபாட்டுத் தலம், பள்ளி, பேருந்து நிலையம் ஆகியவற்றின் அருகில் இருந்த *77 மதுபானக் கடைகள் மூடப்பட்டன*. அங்கு வேலையில் இருந்தவர்களுக்கு வேறு கடைகளில் வேலை வழங்கப்பட்டது.

* கவனிக்கப்படாமல் விடப்பட்ட *அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டன*.

* பத்திரப்பதிவுத் துறையில் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது; *வருகையில்லா ஆவணப் பதிவு முறை* கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளது.

* அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களில் கருவுறுவதற்கு முன்பும் பின்பும் ஏற்படும் தவறுகளைக் கண்காணிக்கவும், மருத்துவ நிறுவன முறைப்படுத்தும் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என ஆராயவும், மருத்துவ மற்றும் ஊரகப் பணிகள் இயக்கத்தின் பயன்பாட்டிற்காக *40 புதிய வாகனங்கள்* வழங்கப்பட்டுள்ளன.

* கூட்டுறவு வங்கியில் ஏழை, எளிய மக்கள் வாங்கிய கடனுக்கு முதல் முத்தாய்ப்பாக *ரூபாய் 2,045 கோடி தள்ளுபடி* வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

* ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கடந்த இரண்டு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த *ஜல் ஜீவன் மிஷன் திட்டம் புதுப்பிக்கப்பட்டு*, ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2.0 நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

* ரூபாய் 18,500 கோடி அளவில் உறுதியளிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் *மைய விரிவாக்கத் திட்டம், கோயம்புத்தூரில் **மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்* மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் *காட்டுப்பள்ளி எல்.அண்ட்.டி (L&T) கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டத்திற்கு* ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

* அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் *மின்னணு முறையில் மாற்றம்* கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* சட்டவிரோதக் கல்குவாரி மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது; பல்வேறு குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. கனிமங்களைக் கண்காணிப்பது, எல்லைகளை நிர்ணயிப்பது மற்றும் *ஆளில்லா விமானம் (Drone) மூலம் அளவீடு செய்வது* போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* அனைத்துத் துறைகளிலும் அலுவலர் தலையீடு இல்லாமல், லஞ்ச லாவண்யமற்ற தமிழகத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.




இதெல்லாம் சாம்பிள்தான் (Sample), இன்னும் இருக்கிறது. இந்த வெறும் 40 நாட்களுக்குள்ளேயே இவ்வளவு செய்திருக்கிறோம் என்றால், இனிவரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக, சீராக (Steady) உழைத்து லஞ்ச லாவண்யம் இல்லாத, ஊழல் இல்லாத, பெண்களுக்குப் பாதுகாப்பான, சுதந்திரமான, வெளிப்படையான (Transparent) தமிழ்நாட்டை நம் சொந்தங்களான தமிழக மக்களுக்குத் தருவதுதான் நம்முடைய இலக்கு (Target). கண்டிப்பாக அதை நிறைவேற்றியே காட்டுவோம். 8 கோடி மக்கள் நம்மோடு இருக்கிறபோது ஏன் அதைச் செய்ய முடியாது?


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டின் கருவூலம் எப்படித் திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து கிடைக்கிறது என்று சொன்னார்கள். திசைமாறி, உருமாறி, தேய்ந்து, ஓய்ந்து என்று வசனம் மாதிரி ரைமிங்காக (Rhyming) இல்லாமல், வளமான இலக்கியமாக இதே சபையில் பேசியவர்களின் திறமையான ஆட்சியில் நடந்த நிதி மேலாண்மையைப் பற்றி வெள்ளை அறிக்கையாக வெளியிட்டோம். வெள்ளை அறிக்கை வந்ததிலிருந்தே கண்ணைக் கட்டுதுங்க!


அந்தக் காலத்தில்தான் "பிள்ளையோ பிள்ளை, தொல்லையோ தொல்லை" என்று சொன்னார்கள். அதே மாதிரிதாங்க அவங்க ஆட்சியினாலும், அவங்களாலும் இன்று தமிழ்நாட்டுக்கே தொல்லையோ தொல்லை! இப்படி ஒரு நிலைமையை உண்டாக்கி வைத்துவிட்டு, இவங்க சொல்றாங்க நமக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்று; நம்ம அமைச்சர்களுக்கும் நம்ம சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றும் தெரியாது என்று.


ஆமாங்க, எங்களுக்குத் தெரியாதுதான்! எங்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் பணி செய்யத் தெரிந்த அளவுக்கு, மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாதுதான்! டெண்டர்களை முறைப்படுத்தத் தெரிந்த அளவுக்கு, அதோட ரேட்டை (Rate) உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாதுதான்!


பதவி உயர்வு வழங்கவும், பணியிட மாற்றக் கலந்தாய்வு நடத்தவும் தெரியுமே தவிர, பதவி உயர்வுக்கும் பணியிட மாற்றத்திற்கும் பணம் பறிக்கத் தெரியாதுதான்! புதிய பணியிடங்கள் உருவாக்கத் தெரியுமே தவிர, அந்தப் பணியிடங்களைப் பணத்திற்கு விற்கத் தெரியாதுதான்!


கோயில்களில் நடக்கிற நிர்வாகச் சீர்கேட்டைத் தடுக்க நீங்க பேசுங்க, நீங்க கண்டிப்பு பண்ணுங்க... கோயில்களில் நடக்கிற நிர்வாகச் சீர்கேட்டைத் தடுக்கத் தெரியுமே தவிர, கோயில் பணத்தைக் கொள்ளையடிக்கத் தெரியாதுதான்! தங்கத்தை உருக்கித் தாரை வார்க்கத் தெரியாதுதான்! கனிம வளத்தைப் பாதுகாக்கத் தெரிந்த அளவுக்கு, கனிமத்தை வித்துக் கொள்ளையடிக்கத் தெரியாதுதான்!


அரசு வருமானத்தை அரசு கஜானாவிற்கு மாற்றத் தெரிந்த அளவுக்கு, அந்தப் பணத்தைத் தனிப்பட்ட கஜானாவிற்கு மடைமாற்றத் தெரியாதுதான்! போதை கலாசாரத்தைத் தடுக்கத் தெரிந்தவர்களுக்கு, போதை கலாசாரத்தை வளர்க்கத் தெரியாதுதான்!


நம்ம குடும்பத்தில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, குழந்தைகளை, பெண்களை மதிக்கத் தெரிந்தவங்களுக்கு 'ஓசி பஸ்', 'ஆயிரம் ரூபாய் கேஸ்' இப்படியெல்லாம் பேசத் தெரியாதுதான்! எங்க உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் மக்கள் சேவை தெரிந்த அளவிற்கு, சுயநலத் தேவையைச் செய்து கொள்ளத் தெரியாதுதான்!


அதனால்தான் சொல்கிறோம், எங்களைப் பார்த்து எதுவும் தெரியாது என்று சொல்பவர்களுக்குச் சொல்கிறோம்... இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுதான்! உங்களைப் மாதிரி முறைகேடுகளைச் செய்வதை நாங்கள் தெரிந்து கொள்ளப் போவதுமில்லை, தெரிந்து கொள்ள ஆசைப்படவுமில்லை. அது கடைசி வரைக்கும் எங்களுக்குத் தெரியாமலேயே இருந்துவிட்டுப் போகட்டும். அதனால நாங்களும் எங்க மக்களும் வெரி வெரி ஹாப்பிதான் (Very very happy).


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதற்காக எங்கள் ஆட்சி மீது ஆயிரம் பழி போடலாம். ஆனாலும் தமிழக மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டியது நம்முடைய கடமை. மின்வெட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளாலும், மின்சார சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதாலும், வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கைகளாலும் இந்த மின்வெட்டு ஏற்படுகிறது.


மின் விநியோக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்களை விரைந்து சரி செய்வதில் 10 உயர்மட்டக் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின்தடை நீக்க ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. கூடுதலாகத் தற்போது 77 புதிய மின்தடை நீக்க மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நம்ம விவசாயிகள் எல்லாரும் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தை ஏற்றுக் கொண்டாலும், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் சில இடங்களில் சில போராட்டங்கள் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் என்னதான் சித்து வேலை செய்தாலும், விவசாயப் பெருமக்கள் எல்லாரும் நம்ம ஆட்சி அவர்களுக்கான ஆட்சிதான் என்று நன்றாகப் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.


இந்த வருஷம் எல் நினோ (El Nino) விளைவால் எப்பவும் இருக்கிறதை விட இந்த முறை மழை குறையும் என்கிறதையும் நம்ம விவசாயிகள் உணர்ந்துதான் இருப்பார்கள். இருந்தாலும், நம் அரசு நம்ம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகப் பக்கபலமாகவும் உறுதியாகவும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நம் தமிழகத்தில் ஏற்கனவே நடந்த அதிஅற்புதமான, சூப்பரான நிர்வாகத் திறன் கொண்ட, 50 வருஷ அரசியல் அனுபவம் கொண்ட 2.0, 3.0, 4.0 எனப் பல பாயிண்ட்டோ மாடல் ஆட்சி நடத்தக் கனவு கண்டவர்களின் அட்டகாசமான ஆட்சிக்காரர்கள் பல்வேறு விதமான நிதி நெருக்கடியை நம்ம மக்களுக்கும் நமக்கும் பரிசாகக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் 75,000 வரை பயிர்க்கடன் பெற்று குறு, சிறு, இதர பெரு விவசாயிகளுக்கு 100% முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியும், 75 ஆயிரத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்குக் குறைந்தபட்சமாக 35,000 பணப் பயன் கிடைக்கும் அளவிற்கு மொத்தம் 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாம் "ஒன்றியத்தில் கூட்டுறவுக் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற கொள்கையைக் கொண்டவர்கள் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். தற்போதைய ஒன்றிய அரசு சார்ந்த கட்சியுடன் அரசியலில் கொள்கை அளவில் நேரெதிராக நிற்கிறவர்கள் தான் நாம்.


அதே சமயத்தில், எதுக்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசிடம் மோதல் போக்கை விரும்புபவர்கள் நாம் இல்லை. நமக்கு எப்பவுமே தமிழகத்தின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம். அதற்காக நம்முடைய அரசியல் ரீதியான கொள்கைகளையோ, மாநில உரிமைகளையோ கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கவே மாட்டோம். அதில் ரொம்பத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறோம். இனியும் இப்படித்தான் இருப்போம், அதில் ஒருபோதும் மாற்றமே இருக்காது. அதனால் இதில் யார் திசைதிருப்பும் வேலையில் ஈடுபட்டாலும், அவர்கள் எல்லாரும் மக்கள் மத்தியில் தோற்பது உறுதி.


எனவே, நம்ம மக்களுக்கோ, சிறுபான்மை சகோதரர்களுக்கோ, நம்ம ஆதரவு இயக்கங்களுக்கோ எந்தவித சந்தேகமும் வேண்டாம். நாம் யாருடைய டீமும் (Team) இல்லை; நாம் எப்பவுமே பியூர் பீப்பிள்ஸ் டீம் (Pure People's Team). இன்னும் சொல்லப்போனால் நாம் செக்யூலர் டீம் (Secular Team), சோசியல் ஜஸ்டிஸ் டீம் (Social Justice Team).


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு விழாக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் நம்ம தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பொறுத்தவரை, நம் அரசு இதில் நம்மோட உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், இதில் மாநில அரசின் கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசின் அறிவிக்கையில் திருத்தம் மேற்கொள்ளக் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


நீட் தேர்வைப் பொறுத்தவரை, கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை. மருத்துவக் கல்வியில் சமூக நீதி மற்றும் சம வாய்ப்பை நீட் பாதிக்கிறது என்பதை உணர்கிறோம். எனவே, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று நமது அரசு வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசிடம் நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு 1968-ல் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. தமிழ் ஆட்சி மொழி, தமிழ் மொழியைப் பாதுகாப்பது, மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மூலம் உலக அளவிலான வாய்ப்புகளை வழங்குவது, எந்த ஒரு மொழியையும் கட்டாயமாகத் திணிப்பதைத் தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பது, நிலத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பேணுவது என்பதை நம் தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் இருமொழிக் கொள்கை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே இல்லை.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 11.06.2026 அன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பாகக் கலந்துகொண்டு வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் உருவாக்கத் தேவையான நிதியையும், தமிழ்நாட்டுக்கு இரண்டு எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைகளைத் தருமாறும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை நிரப்புதல் குறித்தும், செயற்கை நுண்ணறிவுத் தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கவும், இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கம் செயல்படுத்த வேண்டியும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்தும், மீனவ சமுதாயங்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்களை விடுவித்தல் குறித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டியும், காலநிலை தாங்கும் தன்மை பெருந்திட்டம் 2045-ன் கீழ் விண்வெளி உற்பத்தி மையத்தைத் தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்கக் கோரியும், தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் மேம்பாடு குறித்தும், அனைத்துக் கிராமங்களுக்கும் டிஜிட்டல் இணைப்பு வசதி ஏற்படுத்துதல் குறித்தும், கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடரவும் அரசின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கான முதலிடத்திற்கான கோரிக்கையையும், மேகதாது அணை கட்டுமானம் நிறுத்தத்தை உறுதிப்படுத்தவும், மாநிலத்தின் மீது மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தாமல், புதிய கல்விக் கொள்கையைத் திணிக்காமல் தமிழகத்திற்கான கல்வித்தொகை ரூபாய் 3,284 கோடியை விடுவிக்கக் கோரியும், ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழில் நுட்பப் பயிற்சி வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான நிதி ரூபாய் 2,283.40 கோடியை விடுவிக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை உருவாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் மற்றும் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறும் தமிழ்நாடு சார்பில் பேசியுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அண்டை மாநிலங்களுடனான நட்புறவு ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் மிகவும் அவசியமானது. தமிழ்நாடு தனது அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பங்கீடு, பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் நல்லுறவைப் பேணி வருகிறது. பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அண்டை மாநிலங்களுடனான நட்புறவை வலுப்படுத்தவும் நமது ஆட்சியில் காக்கப்படுகிறது.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேச்சு வந்தது. சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. கண்டிப்பாக லா அண்ட் ஆர்டர் (Law and Order) கரெக்டாக இருக்க வேண்டும், கரெக்டாக இருக்கும், இருக்க வைப்போம். அதே மாதிரி பெண்கள் பாதிக்கப்படுவதை இங்கே யாராலும் சகித்துக் கொள்ளவே முடியாது. அதற்கான கடுமையான நடவடிக்கைகள் நம் அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கூட அதற்கான ஒரு ஃபர்ஸ்ட் ஸ்டெப் தான் (First Step). அதே மாதிரி இந்த போதைப்பொருள் நடமாட்டம், அதைக் கட்டுப்படுத்துவதற்கும் நம் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது, அதையும் தொடர்ந்து எடுப்போம்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இப்போது நான் சொன்ன இந்த பிரச்சினைகள் எல்லாம் 2026, போன மாதம் மே மாதம் 10ஆம் தேதி புதிதாக வந்தவை இல்லை. இதெல்லாம் பல வருஷமாக இருக்கிற பிரச்சினைகள்தான்; பல வருஷமாகக் கண்டுக்காமல் விட்ட பிரச்சினைகள்தான். இன்னைக்கு வந்து எதிர்க்கட்சிக்காரங்க அதைப் பற்றிக் கேட்கும்போது எனக்கு வந்து அது அக்கறையாகத் தெரியவில்லை; அவதூறு அரசியலாகத்தான் தெரிகிறது, பழி போடுகிற அரசியலாகத்தான் தெரிகிறது.


இப்படி அவதூறு பழி போடுபவர்களைப் பார்த்து ஒன்றே ஒன்றுதான் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. கடந்த ஒன்பது, பத்து மாசமாக நம்ம மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யே (DGP) இல்லை. "சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யைப் போடுங்க போடுங்க" என்று சொல்லி எல்லாம் ஓய்ந்து போயிட்டோம். போன ஆட்சியில் நடந்தவற்றுக்கெல்லாம் இப்பதான் விடையைக் கண்டுபிடிக்கிறோம். நம்ம ஆட்சியில் இந்த போதைப்பொருள் நடமாட்டமெல்லாம் தாறுமாறாக அப்படியே பரவிக் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் வந்து தொடக்க நிலையிலேயே (Initial stage) யார் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்? போலீஸ் டிபார்ட்மெண்ட் (Police Department) அப்போ யார் கையில் இருந்தது?


இத்தனை கேள்விகள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்களே, ஒரே ஒரு கேள்விதான் நான் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது... போலீஸ் டிபார்ட்மெண்டைக் கையில் வைத்துக் கொண்டே, தொடக்கத்திலேயே (Initial stage) இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை? மனசாட்சி உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை எல்லாம் ஏன் நடக்கிறது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும்.


இன்னைக்கு வந்து சட்டம்-ஒழுங்கைப் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாதா என்றால், தாராளமாகக் கேட்கலாம். இது ஜனநாயக அரசு, மன்னராட்சி எல்லாம் கிடையாது, மனசாட்சியுள்ள மக்களாட்சி! அதனால் கேள்வி கேட்கலாம், எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு; விமர்சனம் செய்யலாம், எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு. ஆனால் நம்ம ஆட்சியில் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏத்த மாதிரி ஒரு நடுநிலையாகப் பேசினீர்கள் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும். சட்டம்-ஒழுங்கைப் பற்றி யாருக்கு என்ன யோசனை இருந்தாலும், மக்கள் நலனுக்காக யாருக்கு என்ன யோசனை இருந்தாலும் அதைத் தாராளமாகச் சொல்லலாம், நம் அரசு அதைக் காது கொடுத்துக் கேட்கும்.


ஆனால் நம் அரசினுடைய நிர்வாகத் திறன், அதைப் பற்றிப் பேசுபவர்களுக்கு இந்த ஊரை அடித்து உலையில் போட்டு, ஊழல் மேல் ஊழலாகச் செய்துகொண்டு அதிலிருந்து தப்பிப்பதற்குப் பேர்தான் நிர்வாகத் திறன் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஒரு ஊழல் செய்யும் நிர்வாகத் திறனை நம் அரசு ஒரு நாளும் செய்யாது. பொட்டி பொட்டியாகப் பணத்தை வைத்துக் கொண்டு, பெட்டியை வைத்து எல்லாம் செய்து கொண்டு, போதைப்பொருள் பாதுகாவல் கழக மாடல் அரசாங்கம் செய்த ஒவ்வொரு ஊழலாக வெளியில் வந்துகொண்டிருக்கிறது.


டாஸ்மாக்கில் என்னது அது, பார்ட்டி ஃபண்ட் (Party Fund) பார்ட்டி ஃபண்ட், கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளை எல்லாம் ஒவ்வொன்றாக இப்போது கவர்மெண்ட்டோட கஜானாவிற்குள் கொண்டு சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த டாஸ்மாக் மாதிரியே பல துறைகளிலும் (Department), மறுபடியும் சொல்கிறேன், கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை ஒவ்வொன்றாக கவர்மெண்ட்டோட கஜானாவிற்குள்ளேயே கொண்டு சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.


இப்போதும் சொல்கிறேன், மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டால் விடமாட்டோம்! இதுக்கு முன்னாடி தொட்டவர்களையும் விடமாட்டோம்! ஒவ்வொரு ஊழலாக வெளியில் வரும் போதே ஒவ்வொரு வேஷமாக கலைந்துவிடும் போலிருக்கிறது. இங்கே இருக்கிற நிறைய பேர் நடுங்கிப் போய், இதில் நம்ம மேல அவதூறை வேற இப்ப புதுசா ஒரு ஆயுதமாக (Weapon) கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? அவங்க தயவால்தான் நம்ம ஆட்சி நடக்கிறதாம்!


மக்கள் தயவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, மனசாட்சியுள்ள சக்திகளின் ஆதரவால்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. "நாங்கதான் அனுப்பி வச்சோம், நாங்கதான் அனுப்பி வச்சோம்" என்கிறார்களே, அனுப்பி வைத்தவர்களுக்கு அமைச்சரவையில் (Ministry) இடம் கொடுத்தால் ஏன் கதறுகிறீர்கள்? ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு கதறல்கள்?


இதில் இன்னொரு முக்கியமான விஷயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையாக எடுத்த முடிவு என்று சொல்கிறார்கள். அதே மாதிரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஆதரவு கொடுத்தது சுயேச்சையாக எடுத்த முடிவு என்று சொல்கிறார்கள். இதில் எங்கிருந்து "நாங்கதான் அனுப்பி வச்சோம், நாங்கதான் அனுப்பி வச்சோம்" என்றால் புரியவில்லையே? மக்களுக்கு நன்றாகப் புரியும், எல்லாவற்றையும் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த சமூக நீதி அரசு, சமூக நீதி அரசு என்று சொல்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்... நம்ம பட்டியலின சகோதரர்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? ஆனால் நம்முடைய அரசில் எட்டு அமைச்சர் பதவிகள் யாருக்கு? நம்ம பட்டியலின சகோதரர்களுக்கு! எல்லாம் நம்ம அண்ணன், நம்ம தம்பி, நம்ம தங்கச்சிகள். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய கிட்டத்தட்ட 100 ஆண்டுகாலக் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. நான் ஏன் கொஞ்சம் சத்தமாகப் பேசுகிறேன் என்றால், அவர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான், தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.


அதே மாதிரி, "பெண்களின் பாதுகாவலர் நாங்கதான்" என்று சொல்லிக் கொள்கிறவர்களைக் கேட்கிறேன்... எத்தனை பெண்களுக்கு அமைச்சர் பதவியில் இடம் கொடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? எங்க அரசில் நான்கு சகோதரிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறோம்.


அதனால் மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்களால் அகற்றப்பட்டவங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறோம்... தப்பே செய்ய மாட்டோம், ஊழலே செய்ய மாட்டோம், நேர்மையாகத்தான் இருப்போம், நியாயமாகத்தான் இருப்போம் என்று சொல்பவர்களால் மட்டும்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முன்வர முடியும்; ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு கொடுக்க முன்வர முடியும். ஊழலிலேயே ஊறிப் போனவர்களால் இந்த கூட்டணி ஆட்சியோ, ஆட்சியிலும் பங்கோ, அதிகாரத்திலும் பங்கோ கொடுக்க முன்வர முடியாது. மெஜாரிட்டி (Majority) இருந்தாலும் தர மாட்டார்கள், மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் தர மாட்டார்கள். கேட்டால் ரெடிமேடாக (Readymade) ஒரு பதில் ஒன்று வைத்திருப்பார்கள், "கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்" என்று; அதே மக்கள்தான் இப்போது அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.


நான் வந்து பதவி ஏற்ற அன்றைக்குக் கொஞ்சம் டைம் அவகாசம் கேட்டேன். எதுக்கு கேட்டேன்? நிதி நிலைமை எல்லாம் கொஞ்சம் மோசமாக இருக்கிறது, அதெல்லாம் கொஞ்சம் சரி செய்துகொண்டே படிப்படியாக, கொஞ்சம் கொஞ்சமாக நான் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் செயல்படுத்துவேன், அதுக்காகக் கொஞ்சம் டைம் அவகாசம் கேட்டேன். நான் ஏதோ வேறு எதுக்காகவோ, வேறு யாருக்காகவோ ஏதோ அவகாசம் கேட்ட மாதிரி பேசுகிறார்கள். அடுத்து இங்கே சபையில் இல்லாதவர்களைப் பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.


நம்மைப் பற்றி அவதூறு பரப்புவதோடு மட்டுமில்லாமல், இப்போது நம்ம மக்கள் மேலும் அவதூறு பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் நமக்கு ஓட்டு போட்டது தப்பாம், குடும்பம் குடும்பமாக நம்மை ஆதரித்தது தப்பாம்! இது இப்போதில்லை, நான் சொல்வது எம்.ஜி.ஆர் அவர்கள் காலத்திலிருந்தே, அப்பவே அவர் ஜெயித்தபோது அதே மக்களைத் தப்புத் தப்பாகப் பேசுவது... "மக்கள் என்ன பண்ணிட்டாங்க, எம்.ஜி.ஆர் என்ன பண்ணிட்டாரு, எம்.ஜி.ஆர் என்ன இது பண்ணிட்டாரு" என்று.


50 வருஷமாக ஒரே உத்தியா (Technique)? டெக்னாலஜியெல்லாம் (Technology) மாறி வேற எங்கேயோ போயிட்டு இருக்கு பாஸ்! இதில் கொஞ்சம் உத்தியையாவது கொஞ்சம் மாற்றினால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதனால் மக்களுக்குப் பயனுள்ளதாக (Useful) இருக்கிற மாதிரி, ஆக்கப்பூர்வமான கருத்துக்களோ, ஆக்கப்பூர்வமான யோசனைகளோ இருந்தால் சொல்லுங்கள், அதை நாங்கள் கண்டிப்பாக (Definitely) எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதை விட்டுவிட்டு இந்த நக்கல், நையாண்டி, சம்பந்தம் சம்பந்தமில்லாத பேச்சு இதெல்லாம் பேசிட்டு, அப்புறம் வந்து "முதல்வர் பதில் சொல்லவில்லை, முதல்வருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை" என்றால் அப்புறம் என்ன?


"சோபா மாடல் ஆட்சி"யா? அது என்னவென்று புரிவதற்கே எனக்கு ரொம்ப நாள் ஆனது. இந்த சோபா செட், டேபிள், சேர், டீபாய் பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறங்க, வெளியில் போய் பண்ணச் சொல்லுங்கள். அப்படி அந்த பிசினஸ்தான் பண்ண வேண்டும் என்றால், நிறைய பிசினஸ் பண்ற மாதிரி வெளியில் போய் பண்ணச் சொல்லுங்கள், சட்டசபைக்குள்ளே வேண்டாம். அதனால் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்கள், கண்டிப்பாக அது சரியாக இருந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.


எனக்கு ஒரு குட்டி கதை ஒன்று ஞாபகம் வருகிறது, சொல்லலாமா?


ஒரு ஊரில் ஒரு பெரியவர், வெயில் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது என்று சொல்லிட்டு, கண்ணுக்கு மேலே கை வைத்துக் கொண்டு இப்படிச் சுற்றி முற்றித் தேடிட்டு இருந்தாராம். அப்போ கூட இருந்த ஒரு சின்ன பையன், "என்ன தேடுறீங்க?" என்று கேட்டானாம். அதற்கு அந்த பெரியவர் சொன்னாராம், "அது ஒன்றுமில்லை தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க, அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க உங்க அப்பாவைக் காணோம்?" என்று.


இல்லை, எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக சம்பந்தம் சம்பந்தமில்லாத குட்டி கதை இதெல்லாம் எங்களுக்கும் பேசத் தெரியும். அந்தக் கதையில் பெரியவர் அப்படிச் சொன்னாராம், தப்பாக எடுத்துக் கொள்ளாதீங்க, அந்தக் கதையில் பெரியவர் அப்படிக் கேட்டாராம். அதனால் யாரும் டென்ஷன் (Tension) ஆக வேண்டாம்.


ஐந்து நிமிஷம் பேசினதுக்கே கொளத்தூரே இந்த ஆட்டம் ஆடிவிட்டது! "பேசு பேசு" என்றால் அப்புறம் என்ன பண்றது?


கடைசியாக நான் இந்த உரையை முடிப்பதற்கு முன்னாடி ஒரு முக்கியமான ஒரு விஷயம் பற்றிச் சொல்ல வேண்டும். ஆளுநர் உரை அன்றைக்கு இந்த தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அப்புறம் தேசிய கீதம் பாடியது தப்பு, தேசிய கீதம் இரண்டு முறை பாடியது தப்பு, அப்படி ஒரு நிகழ்வு இதுக்கு முன்னாடி இந்தச் சட்டமன்றத்தில் நடந்ததே கிடையாது, அந்த மரபையே மாற்றிவிட்டீர்கள் என்று இப்படி ஒரு பெரிய போர் மாதிரி எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் எல்லாம் சொன்னார்கள் இல்லையா... அந்த மாநில உரிமைப் போராளிகளை, அந்த மரபு காக்கும் உரிமைப் போராளிகளை ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும்.


2021 ஆகஸ்ட் இரண்டு ஞாபகம் இருக்கா? 'சென்டினரி செலிப்ரேஷன் ஆஃப் தமிழ்நாடு லெஜிஸ்லேச்சர்' (Centenary Celebration of Tamil Nadu Legislature), அந்த விழாவில் நம்ம முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய புகைப்படத்தை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிற ஒரு விழா. அந்த விழாவில் 'நேஷனல் ஆந்தம் ஃபாலோடு பை தமிழ்த்தாய் வாழ்த்து' (National Anthem followed by Tamil Thai Vaazhthu) என்று அறிவித்தது ஞாபகம் இருக்கா?


அதாவது தேசிய கீதத்திற்கு அப்புறமாக இரண்டாவது முறையாக... மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தயவுசெய்து இந்த புள்ளியைக் குறித்துக் கொள்ளுங்கள் (Please note this point)... தேசிய கீதத்திற்கு அப்புறம் இரண்டாவது முறையாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று சொன்னது ஞாபகம் இருக்கா? அதுவும் முத்தமிழ் அறிஞர் என்று சொல்கிற நம்ம கலைஞர் அவர்களுடைய அந்த புகைப்பட வெளியீட்டு விழாவில், அவர் இருந்த இதே சபையில் தமிழை இரண்டாவது இடத்திற்குத் தள்ளியது யார் என்று ஞாபகம் இருக்கா?


அதுமட்டுமல்ல, அந்தத் தேசிய கீதத்தை நாட்டுப்பண் (National Anthem) என்று சொல்லி, அதே விழாவில் கடைசியாக விழா முடியும் போது இரண்டாவது முறை (Second time) தேசிய கீதம் பாடியதும் ஞாபகம் இருக்கா? இதே அவையில்தான் அது நடந்தது, அவை குறிப்பிலும் அது இருக்கிறது; இதே அவையில்தான் நடைபெற்றது.


சந்தேகம் (Doubt) இருந்தால் இந்த புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதனால் இதெல்லாம் கேட்டால் என்ன சொல்வார்கள் என்றால், "அது ஜனாதிபதி கலந்து கொண்ட விழா, அதெல்லாம் அப்படித்தான், அதெல்லாம் கண்டுக்கக் கூடாது" என்று சொல்வார்கள். இதே மாதிரிதான் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று; செய்வது ஒன்று, பேசுவது ஒன்று!


இதெல்லாம் மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. எலெக்ஷனுக்கு முன்னாடிதான் அப்படி செஞ்சுகிட்டு இருந்தாங்க; இப்ப எலெக்சனுக்கு அப்புறமும் அதேதான் செய்றாங்க. இந்த விஜயையும், சாமானியர்களின் உண்மையான சமூக நீதி அரசையும் அவமானப்படுத்துவதற்குத்தான் அவங்களோட அந்த 'பொலிட்டிகல் சீனியாரிட்டி'யைப் பயன்படுத்துறாங்க போல. சரி, செய்யட்டும் செய்யட்டும், நல்லா செய்யட்டும்.


ஆனாலும் நம்மளுடைய மாநில உரிமை, மொழி உரிமைக்கு உத்தம புத்திரர் போல வேஷம் போடுற எதிர்க்கட்சிக்கு ஒன்றை மட்டும் ஆணித்தரமாகச் சொல்றோம். உங்களைப் மாதிரி தமிழ், தமிழ்ன்னு சொல்லிக்கிட்டு... மொழி, பண்பாடு, கலாச்சாரம்னு சொல்லிக்கிட்டு ரெட்டை வேஷம் போடுறவங்க நாங்க கிடையாது. உலகெங்கும் வாழும் என் தமிழ் சொந்தங்களுக்கு நம்முடைய உத்தரவாதம்—'தமிழ்தான் எங்க உயிர்நாடி' அப்படின்றதை நாங்க மறக்க மாட்டோம்.


இப்பவும் சொல்றோம், மாநில உரிமையில் எப்பவும் உறுதியா இருப்போம். அதே சமயத்துல அரசியல் வேற, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையே இருக்கிற நிர்வாக அணுகுமுறை வேற. இதுல நாங்க ரொம்ப தெளிவா இருக்கிறோம். அதனால எங்களுக்குப் பாடம் எடுக்கிறதா நினைச்சுக்கிட்டு, உங்க வேஷத்தை நீங்களே கொஞ்சம் கொஞ்சமா கலைச்சுக்கிட்டே வர்றீங்க, அதை மறந்துடாதீங்க.


அப்புறம் நேத்து மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது நிறைய பேசினாங்க. அதுல ஒண்ணு மட்டும், அரசைச் சொல்றதா நினைச்சுக்கிட்டு நம்மளை இன்டைரக்டா 'ஈவில்' (Evil) அப்படின்ற வார்த்தையை யூஸ் பண்ணிப் பேசினாங்க. எனக்கு ஒன்னே ஒன்னுதான் சொல்லணும்னு தோணுது—'ஈவில்ஸ், ஈவில்ஸ்னு டெவில்ஸ் பேசக்கூடாது!' அவங்க இங்க இருந்திருந்தா ஒரு ஆக்ஷன் பண்ணிக் காட்டியிருக்கணும்னு எனக்குத் தோணுச்சு, ஆனா எல்லாரும் போயிட்டாங்க என்று தனது பேச்சை முடித்தபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலின்போது கையை வைத்து சைகை செய்தது போல செய்து முடித்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

உன் கண்ணில் நீர் வழிந்தால்!

news

நான் எழுதுவது கவிதையல்ல‌..!

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

அதிகம் பார்க்கும் செய்திகள்