Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

Jun 22, 2026,10:09 AM IST

- மணிமா


செட்டிநாட்டின் அத்தனை ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் உள்ளங்களுக்கு இன்று இனிப்பு சுவையுடன் எளிதான முறையில் கோதுமை அல்வா ருசிக்க ருசிக்க செய்வோமா?


வாருங்கள் வணக்கங்களுடன் உங்கள் ....மணிமா ...


வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அன்பையும் சேர்த்து சமைப்போம். சுவையான செட்டிநாட்டு டிஷ் ரெடி ரெடி ...


தேவையான பொருட்கள்




கோதுமை மாவு ஒரு கப்

சீனி (அஸ்கா)இரண்டரை கப்

நெய் ஒரு கப்.

(மாவு அளந்த அதே கப் தான் அளவு)

ஏலக்காய் ஏழு தூள் செய்யவும்

முந்திரி பருப்பு 10


செய்முறை


முதலில் கோதுமை மாவை தண்ணீர் மட்டும் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் தளர்வாக பிசையவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை பிசறியதை போட்டு மூழ்கும் வரை பச்சை தண்ணீர் ஊற்றவும் எட்டு கப் அளவு தண்ணீர் எடுக்கலாம் மூடி வைக்கவும்.


ஆறு மணி நேரம் கழித்து மாவு நன்கு தண்ணீரில் ஊறியிருக்கும் கைகளால் அழுத்தி அழுத்தி பிசறி வடிகட்டியில் வடிகட்டி எடுக்கவும் கடைசியாக வரும் சக்கையை தூக்கி போட்டு விடவும். வடிகட்டியதை நான்கு மணி நேரம் மூடி வைத்து புளிக்க விட வேண்டும்.


பிறகு கலங்கி விடாமல் தெளிவான தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு அடியில் தங்கி உள்ள வெள்ளை பால் மட்டும் எடுத்துக் கொள்ளவும். இப்போது அல்வா செய்வதற்கான கோதுமை பால் நமக்கு தயார்.


ஒரு அகன்ற வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு உடைத்து போட்டு கருகி விடாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். ஏலக்காய் தோல் நீக்கி தூள் செய்து வைக்கவும். அதே வானலியில் பாலை விட்டு மிக மிகக் குறைந்த தீயில் கைவிடாமல் கிளறி விடவும். சிறிது நேரத்தில் கெட்டியாக வரும் கட்டிகள் இல்லாமல் முடிந்தவரை பார்த்துக் கொள்ளவும்.


இரண்டு கப் அளவு மட்டும் உள்ள சீனியை உள்ளே விட்டு கிளறி விடவும். சீனியும் கோதுமை பாலும் கலந்து வரும் பொழுது நான்கு ஸ்பூன் நெய் விடவும். மீதி உள்ள அரை கப் சீனியை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு பக்கத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து தண்ணீர் எதுவும் விடாமல் கிளறவும். இதுதான் அல்வாவுக்கு கலர் கொடுக்கும் கேரமல். மூன்று நிமிடத்தில் தேன் போல் வரும். 




இதனை எடுத்து அல்வாவுக்குள் சேர்த்து விட்டு கைவிடாமல் கிளறவும். நெய் பாதி விடவும். நெய்யில் வறுத்து வைத்த முந்திரிப் பருப்பையும் ஏல பொடியையும் சேர்க்கவும். மீதி உள்ள நெய் எல்லாவற்றையும் விட்டு கிளறும் பொழுது கடாயில் ஒட்டாமல் உருண்டு வரும். வெளியில் நெய் ஓரம் முழுவதும் வரும். இறக்கி உடனே வேறொரு பவுலுக்கு மாற்றி விடவும்.


புளிக்க வைக்கத்தான் நேரம் எடுக்குமே தவிர, அல்வா செய்வது அரை மணி நேர வேலை தான். கிளறுவதும் எளிதுதான். சூப்பரான சுவையான கோதுமை அல்வா ரெடி ரெடி... 


சுவைப்போமா சுவைப்போமே


மீண்டும் அடுத்த செட்டிநாட்டு ரெசிபியுடன் உங்களை எல்லாம் சந்திக்கும் வரை அன்புடன் உங்கள் மணிமா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்