அதிசயம்!

Su.tha Arivalagan
Jan 24, 2026,01:05 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


சாய்ந்த நிலையில் இருக்கும்  

பைசா கோபுரமும்


சீனா நாட்டின் 

தடுப்புச் சுவரும்


சிதிலமடைந்த நிலையில் 

பிரம்மாண்ட கொலோசியமும்


காதலின் சின்னம் 

தாஜ்மஹாலும்


சிச்சென் இட்சா மச்சு பிச்சு 

மீட்பர் சிலை பிரமிடு பெட்ரா என பெயர் புரியாத அதிசயங்களும்...




நான் எப்போதும் வியந்து பார்க்கும் அலைகடலுக்கும்..


கால் நனைக்க கரைக்கு வரும் 

கடல் அலைக்கும்


மணி சத்தம் கேட்டதும் ஓடி வந்து பார்த்து பார்த்து பிரமிக்கும் யானைக்கும் 


பேருந்து பயணத்தில் கண்ணை விட்டு மறையும் வரை 

கழுத்து வலிக்க பார்க்கும் மலைக்கும் ...


பாட்டி வடை சுடும் வட்ட நிலாவிற்கும்...


தோகையையே பொத்திக் காத்து குட்டி போட வைப்போம் நாங்க... 

அத்தோகை விரித்தாடும் வண்ண மயிலுக்கும்..


சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலுக்கும்


வாயைப் பிளந்து அண்ணாந்து பார்க்கும் 

இத்துனூண்டு ஏரோபிளேனுக்கும்


தலையில் நச்... நச்.... என்று கொட்டும் அருவிக்கும்


எத்தனை ஏணி வைத்தாலும் 

எட்டவே எட்டாது.....


அதிசயங்கள் அசந்து போகும் இவைகள் தான் ....

என் உலகில் எனக்கான அதிசயங்கள்!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).