எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே!

Su.tha Arivalagan
Nov 26, 2025,09:59 AM IST

- அ. வென்சி ராஜ்


தாய் தந்தையை பிரிந்து

நான் தவழ்ந்த வீடு மறந்து 

புத்தாடையும் புதுப்பையும் சுமந்து

முத்து முத்தாய் கண்ணில் நீர் வர 

முகம் வாடி மழலையில் அழுதபடி

கொஞ்சி மகிழ்ந்த தாத்தா பாட்டியை விட்டு..

அம்மா கட்டிப்பிடித்து முத்தம் தர...

அப்பா கைப்பிடித்து தைரியம் தர...

இனிப்போடு சென்றேன்

என் பள்ளிக்கு முதல் நாள் அன்று....




பள்ளிக்கூட கட்டிடம் பார்த்து பயந்து நின்றேன். 

ஆசிரியர் எல்லாம் அயல் நாட்டவராயும்

அருகிருந்த குழந்தைகள் எல்லாம் அழுமூஞ்சிகளாகவும்

மனதில் பட்டதும் சட்டென  நின்றது அழுகை...

தோள் மீது தூக்கிய தந்தையைக் காணோம்...

தங்கமே வைரமே என்ற தாயையும் காணோம்...

தரையில் விடாமல் தூக்கி வைத்திருந்த தாத்தா பாட்டியையும் காணோம்....

சத்தமாய் அழுதேன்...

சத்தியமாய் பயந்தேன்...

இனிப்போடு சிரிப்பையும் தந்தார் என் புது ஆசிரியர்...

அழுகை நின்றது...


அவர் கைபிடித்தேன். 

கூடவே சென்றேன். 

புதுவித அன்பு..

பிடித்துப் போயிற்று...


என்னை  பண்படுத்திய  ஆசான் அவரே...

பாசமிகு தாயும் இவர்தான்...

இவ் வீட்டின் பண்பு தரும் தந்தையும் இவர்தான் என்பது மட்டும் அப்போது புரிந்து போனது...


ஓடியது நாட்கள்...

கூடியது அறிவு....

கற்றேன் கல்வியை...

பெற்றேன் அறிவை...

அடைந்தேன் ஞானத்தை..

உயர்ந்தேன் ஒழுக்கத்தில்...


நாட்கள் மாதங்களாகின..

மாதங்கள் வருடங்கள் ஆயின...


இன்று லட்சியத்தை அடைய இலகுவாய் வழிகாட்டினார் என் ஆசான்...

கல்வியின் அவசியம் உணர்ந்தேன்...


மனிதத்தோடு மனிதனாய் நிமிர்ந்து நின்றேன்....


என்னை வளர்த்த என் ஆசானே...

எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே....

உங்களை எப்படி மறப்பேன்...


பள்ளிக்கூடக் கட்டிடத்தை பாசத்தோடு பார்க்கின்றேன்...

நன்றியோடு 

வணங்குகிறேன்...


என்னை வளர்த்த என் கல்விக்கூடமே...

என்னை வாழ வைத்த என் ஆசான்களே....

புது மனிதனாய் பெற்றெடுத்த புண்ணிய பூமியே...


இருகரம் கூப்பி உங்கள்  இருவருக்கும் நன்றி கூறுகிறேன்


என் ஆசான்...

என் வழிகாட்டி...

என் பள்ளி...

என் பெருமை... 


உயிர் உள்ளவரை நன்றிகள் உங்களுக்கு மட்டும்


என் அன்பு நிறைந்த  ஆசிரியர்களுக்கு (என் தாய்க்கும்) சமர்ப்பணம். 


(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,  சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)