அன்பிற்கொரு அழுகை... உரிமைக்காய் ஒரு அழுகை..!

Nov 25, 2025,10:42 AM IST

- அ.வென்சி ராஜ்


தாயின் கருவறை திறந்து...

இத்தரணி வந்ததுமே 

அழுகையோடு பயணம் தொடங்கும் மனிதன்...

புவியில் வாழ்நாள் முடிந்து...

தன் கல்லறை திறந்து உள் செல்லும் பொழுது கூட 

தன்னோடு இருப்பவரை அழ வைத்து விட்டல்லவா செல்கின்றான்...


அழுகையோடு பிறந்து..

அழுகையோடே  மரணிக்கும்...

மனித வாழ்வில்...

இடையிடையே தான் எத்தனை  வகையான அழுகைகள்... 




தாயிடம் பால் கேட்க உரிமையோடு ஒரு அழுகை..

நினைத்ததை சாதிக்க நிச்சயம் இல்லாமல் ஒரு அழுகை...

சகோதரனின்  செல்ல அடிக்கு சிணுங்கலாய் ஒரு அழுகை...

வம்பு செய்யும் தங்கையை மாட்டி விட கண்ணீர் வராமல் சும்மா நடித்திட ஒரு அழுகை.... 


அம்மாவின் அன்பை பெற  அப்பப்போ சிறு அழுகை...

அப்பாவின் அரவணைப்பிற்காய் அடிக்கடி வரும் அழுகை..

திருமணமான பெண்களுக்கோ திடுக்கென்று வரும் அழுகை... 


ஆண் குலம் அத்தனை பேரும் வெளியில் தெரிந்திடாமல் மனதிற்குள் அழும் மௌன அழுகை.. 

உண்மையான  உறவொன்றை  இழந்ததனால் உயிர் துடிக்க வரும் அழுகை... 

துக்க வீட்டில் சிலருக்கு மட்டும்  அப்பப்போ வரும் கடமைக்காய் ஒரு அழுகை.. 

நினைத்ததை சாதிக்க சுட்டிகளுக்கும் குட்டிகளுக்கும் எப்பொழுதுமே ஆயுதம் அழுகை... 


அன்பிற்கொரு அழுகை...

உரிமைக்காய் ஒரு அழுகை.. 

நடிப்பிற்கு ஒரு அழுகை..

நகைப்பிற்கு ஒரு அழுகை..

கடமைக்கு ஒரு அழுகை ... 

கண்ணியமாய் ஒரு அழுகை...


இத்தனை அழுகையையும் பின் தள்ளி, அழுகையும் அழகாகும் அத்தருணம் சொல்லிடவா... 


தித்திப்பாய் உளம் இனித்து...

செந்தூரம் போல் முகம் சிவந்து...

கண்கள் முழுதும் மகிழ்ச்சி நிறைந்து...

ஆனந்த கண்ணீருடன் கூடிய மகிழ்வழுகை... 


எப்பொழுதும் உம் கண்ணில் ஆனந்த கண்ணீர் நிறைந்திடவே தித்திக்கும்  மனதுடனே. ..

தெவிட்டாமல் வாழ்த்துகிறேன். . . 


உங்கள் அழுகையும் அழகாக அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன்.


(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,  சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்