நீர்,நிலம், காற்று.. ஆகாயம் அவள் விழி அசைவில்...!

Su.tha Arivalagan
Jan 24, 2026,04:27 PM IST

- ந. தீபலட்சுமி


காலையில் சமையலறையில்...

காற்றினில் மிதந்து வந்த 

கானத்தைக்

கேட்டுக் கொண்டே..

காய்கறி நறுக்கிய 

காதுகளில் ஒலித்தது...

'போறாளே பொன்னுத் தாயி' என்ற

கருத்தம்மா பாடல்.




கள்ளிப் பாலின் மகிமை

தாயின் இயலாமை

பாலூற்றும் அவளும்

ஓர் பெண் தானே 

என்ற எண்ணமின்மை.


என்று தணியும்...

இந்த அரக்கத்தனம்..

என்ற வேண்டுதலை

இறைவன் கேட்டிருப்பானோ ?


மெது மெதுவே

மலர்ந்தது காலம்..

சுதந்திர நாட்டில் 

பெண் சுதந்திரம் மட்டும்

எப்போது...?

என ஏங்க வைத்த

எண்ணத்தை மாற்றியது.


கல்வியறிவு வளர்ந்தது...

கடமைகள் அழைத்தது...

மடமைகள் மறைந்தது...

வெற்றிகள் மிளிர்ந்தது!


நீர்,நிலம், காற்று..

ஆகாயம் அவள்

விழி அசைவில்...

ஆட்சி செய்ய

ஆரம்பித்தாள்....ஆர்ப்பரித்தாள் !


இன்னும் வளர்வாள்...

சமூக புல்லுருவிகளைக்

கருவருக்க...இரும்புக் கரம்

கொண்டு ஒடுக்க

உருவெடுப்பாள்..

அவளே பெண்..

அவளே மகள்...

அவளே மனைவி..

அவளே தோழி..

அவளே அன்னை !


துணிவு வாய்ந்த

துடிப்பான

துள்ளலான

வருங்கால தூண்களான

பெண் குழந்தைகள் 

அனைவருக்கும் 

இனிய 

தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்!


(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர் - ஆங்கிலம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)