குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
சென்னை: கோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், திமுக அரசு கோவை மாநகராட்சி மூலம் சொக்கம்புதூரில் 2000 மாணவர்கள் படிக்கும் பள்ளியும், 5000 மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளதற்கு அருகில், பாதாள சாக்கடை கழிவுகளையும், மலக்கழிவுகளையும் கொண்டுவந்து கழிவுநீர் பண்ணை அமைத்து, சுத்திகரிப்புப் பணிகள் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றானது பல்வேறு நுரையீரல் தொற்றுநோய்களை ஏற்படுத்துவதால் இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடுமையாகப் போராடியும், இன்றுவரை அதனை அகற்ற திமுக அரசு மறுத்து வருகின்றது. மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, வேறு எங்கும் இல்லாத பேரவலம்.
பள்ளிக்கூடம், வழிபாட்டுத்தலங்கள், வணிகதலங்கள், மக்கள் குடியிருப்புகள் அருகே உள்ள நிலையில் நிலத்தையும் - நீரையும் நாசப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனிற்கும் கேடு விளைவிக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை அங்கே அமைப்பது ஏன்? அரசுக்குச் சொந்தமான யாரும் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான பல இடங்கள் உள்ள நிலையில், அவற்றையெல்லாம் விடுத்து மக்கள் நெருக்கமான இடங்களிலேயே கழிவுநீர் சுத்திகரிக்கவும், குப்பைகளை எரிக்கவும் திமுக அரசு இடம் தேர்வு செய்வது ஏன்? என்ற அம்மக்களின் கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?
மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களை நகரத்திற்கு பல கிமீ தூரத்திற்கு வெளியே ஆள் அரவமற்ற இடத்தில் வைக்கும் திராவிட மாடல் திமுக அரசு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திடக்கழிவு சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றை நகரத்திற்கு நடுவே மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைத்து மக்களின் நலத்தை மேலும் கெடுப்பதுதான் மற்றுமொரு பெருங்கொடுமை. நகரத்தை தூய்மை செய்வதே மக்களின் நலன் காப்பதற்குத்தானே? கழிவுநீரை அகற்றுவது எந்த அளவிற்கு முதன்மையானதோ, அதே அளவிற்கு மக்களின் உடல் நலனைக் காப்பதும் முதன்மையானது அல்லவா? மக்கள் நலனைக் கெடுக்கும் வகையில் கழிவுகளை அகற்ற முனைவது அறிவுப்பூர்வமாக இயங்கும் எந்த அரசும் செய்யாது.
ஆகவே, திமுக அரசு கோவை மாநகராட்சி சொக்கம்புதூரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்படுவதை உடனடியாகக் கைவிட்டு, அதனை ஊருக்கு வெளியே மக்கள் பயன்படுத்தாத பகுதியில் அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.