மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்

Nov 04, 2025,04:54 PM IST

சென்னை: ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படை நம் மீனவச்சொந்தங்களை கைது செய்வது,  அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். அக்கொடுமையினை ஒன்றிய - மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து சீமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து, அவர்களின் 4 படகுகலையும் பறித்துள்ளது,  வன்மையான கண்டனத்துக்குரியது.  தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடைமைகள் பறிக்கப்படுவதும் என சிங்கள கடற்படையின் இனவெறி கொடுமைகள் தொடர்வது இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.




கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொள்வது ஏன்? வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்து பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்?


இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவச்சொந்தங்களை இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவச்சொந்தங்கள்  கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத், மராத்திய  மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்? காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித முயற்சியும் இதுவரை எடுக்காதது ஏன்? 


ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படை நம் மீனவச்சொந்தங்களை கைது செய்வது, தமிழ் மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். அக்கொடுமையினை ஒன்றிய - மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன? 


ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

news

மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு

news

தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

news

உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

news

கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்

news

மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்