வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

Meenakshi
Oct 04, 2025,05:17 PM IST

தூத்துக்குடி: விஜய் வரும் நாட்களில் பிரச்சாரப் பயணமாக தெருக்களில், சாலைகளில் செல்லாமல், பொதுக் கூட்டமாக நடத்திக் கொள்ள வேண்டும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் பிரச்சார விவகாரத்தில் விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களுக்கு தான் பாதிப்பு இருக்கிறது. கரூர் விவகாரம் தொடர்பாக சட்ட முறைகளில் கருத்து சொல்ல முடியாது. விஜய் வரும் நாட்களில் பிரச்சாரப் பயணமாக தெருக்களில், சாலைகளில் செல்லாமல், பொதுக் கூட்டமாக நடத்திக் கொள்ள வேண்டும். ஒரு மைதானத்தில் பொதுக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, அனைவரையும் அழைத்து கொள்ளலாம். பிரச்சாரப் பயணத் திட்டத்தையே கைவிட வேண்டும் என்று கருதுகிறேன்.


மேலை நாடுகளில் உள்ளதுபோல நாமும் பரப்புரை விதத்தை இனி மாற்றிக்கொள்ள வேண்டும். கரூர் துயரச்சம்பவத்தில் ஒருவருக்கொருவர் பழிபோட்டுக்கொள்வதென்பது, நேர்ந்த உயிரிழப்புகளைவிட கொடுமையாக இருக்கிறது. எப்படியாவது விஜயை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக நினைக்கிறது. கரூர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடே விஜய்க்கு ஆதரவு அளிப்பது தான். விஜய் கரூருக்கு வந்ததால் தான் கூட்டம் கூடியது. அப்படி இருக்கும் போது வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் விஜய் பழியை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருப்பது சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இதில் அரசு, விஜய் ஆகிய இரு தரப்புக்கும் பொறுப்பு இருக்கிறது.




தவெக கேட்ட மற்ற இடங்களை விட வேலுச்சாமிபுரம் பெரியதாக இருந்ததால், அதனை தந்ததாக போலீசார் கூறுகிறார்கள். மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. கரூர் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு காவல்துறைக்கு நன்றி சொல்லிதான் விஜய் தனது பேச்சை தொடங்குகிறார். ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டவுடன் பழி போடுகிறார். விஜய்யுடன் எனக்கு கொள்கை முரண் இருக்கிறது. திராவிடம், தமிழ் தேசிய நேர் எதிரான கோட்பாடுகள். அதனால் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். எங்களின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் கோட்பாட்டை அடமானம் வைக்க முடியாது.


ஆர்எஸ்எஸ் மற்றும் திமுக ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையே பெரிய கொள்கை வேறுபாடெல்லாம் கிடையாது. வரும் சட்டசபை தேர்தலில், பாஜ பிரதானமாக இருக்காது. திமுக - அதிமுக என இரு கட்சிகள்தான் பிரதானமாக இருக்கும். வழக்கம் போல, இன்னொரு கட்சியின் முதுகுக்கு பின்னால் இருந்து பாஜ செயல்படும். கிறிஸ்துவர், இஸ்லாமியர் ஓட்டுகளை இன்றுவரை திமுக மட்டுமே அறுவடை செய்கிறது. இந்த விஷயத்தில், திமுக முழுமையாக மக்களை ஏமாற்றுகிறது. அதையும் சிறுபான்மையின மக்கள் நம்புகின்றனர்  என்று தெரிவித்துள்ளார்.