நான் காணும் உலகமடா...!!

Su.tha Arivalagan
Nov 07, 2025,04:54 PM IST

- கவிநிலவு சுமதி சிவக்குமார்


ஊருக்கே ஒரு கோயில் உருவாக்க வேண்டும் 

உருவமில்லா அருவமே வழிபாடாக வேண்டும்


அவரவர் அன்னையைத் தெய்வமாக எண்ணிடல் வேண்டும்

அண்டை வீட்டாரை அன்பு கொள்ள வேண்டும்


ஊருக்கே ஒரு சமையல் செய்திடல் வேண்டும் 

ஊறுகாயாய் கொஞ்சம் அன்பும் கலந்து இருக்க வேண்டும்




நாறு போல அனைவரும் ஒன்றாக அமர்ந்து 

பாருலகில் பெருமை கொள்ளும் நிகழ்வு வேண்டும்


பெண்ணின் கைகளுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் கண்ணின் இமைகளாய் காத்திடல் வேண்டும்


அந்தந்த வேலைகளை அவரவர் செய்திடல் நன்று 

எந்தெந்த பொருளையும் எடுத்த இடத்தில் வைத்தல் நன்று


உலகமெல்லாம் இரு ஜாதி உய்திருக்க வேண்டும் 

ஆணும் பெண்ணும் இதுதவிர வேறெதுவும் வேண்டாம்


எங்கெங்கும் சமநீதி செழித்திருக்க வேண்டும் 

அங்கங்கும் நீதிமகள் கண் திறக்க வேண்டும்


எல்லோரும் பணக்காரன் என்றாக வேண்டும் 

ஏழைகள் இல்லாது என் நாடிருருக்க வேண்டும்


நல்லோரும் நலமாக நிறைந்திருக்க வேண்டும் 

நம் மொழியே தமிழ் மொழியாய் தனித்திருக்க வேண்டும்


பார்க்கும் இடங்களெல்லாம் பசுமையேப் படர்ந்திருக்க வேண்டும்

நோக்கும் விழிகளிலெல்லாம் நேர்கொண்டப் பார்வை வேண்டும்


காக்கும் வீரர்கள் மனம் கலங்காதிருக்க வேண்டும் 

தாக்கும் பிணிகள் யாவும் தொற்றாமல் தடுத்திருக்க வேண்டும்


விண்ணுக்கு ஒளிதரும் நிலவும் மண்ணில் உலவிடல் வேண்டும்

பெண்ணிற்கு நிகரானப் பெருமை திருநங்கைக்கு நவின்றிடல் வேண்டும்


உண்மைக்கு எதிரான பொய்கள் ஓடி ஒளிந்திடல் வேண்டும் 

தன்மை குறையாத் தணலும் தீயாய் சுட்டாதிருக்க வேண்டும்


பணம் காய்க்கும் மரங்கள் வேண்டுமதில் 

பாதிப் பங்கையும் பலருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்


சினம் கொள்ள சிரிப்பும் வேண்டுமதில் 

சிலையாக நிற்கும் சித்திரப் பெண்ணும் வேண்டும்


கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கணவராக வேண்டும்

தொல்லைத் தராத பிள்ளைகளாய் தோளில் சுமக்க வேண்டும்


ஆழ்மனதில் அழுகையும் அமர்ந்து இருக்க வேண்டும் விழும் போதெல்லாம் வீறுகொண்டு எழந்திடல் வேண்டும்


தள்ளாடும் போதெல்லாம் தோள் கொடுக்கும் நட்பு வேண்டும் 

கல்லாகும் போதெல்லாம் கரையும் கானம் வேண்டும்


தடுமாறும் போதினிலே  நிம்மதியாய் தாய்மடி வேண்டும்

உருமாறும் உலகினிலே நான் காலம் உலகமடா..!!


(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி‌ நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்.  சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)