நாற்காலி
Jan 26, 2026,04:22 PM IST
- கவிதா அறிவழகன்
இருள் சூழ்ந்த இடைவெளியில்,
குவிக்கப்பட்ட ஒளியின் பிடியில்,
மூச்சற்ற ஒரு நாற்காலி,
ஆயிரம் கவிதைகள் தீட்டியது.
ஆனால் இன்றோ
கவிதைகள் வடிக்க ஆளின்றி,
ஆளுமை புரிந்த தோப்பில்
அது தனித்த மரமாக
நின்றது.
நற்பண்புகள் சுவாசித்த நாற்காலி அது,
அதை ஆளுமை செய்தவரைப் புகழ,
அகராதியே தோற்றுவிடும்.
சொல்லுக்கு மரியாதையும்,
விடாமுயற்சியில் ஆழ்ந்த நம்பிக்கையும்,
மேன்மையும், கம்பீரமும் நிறைந்த,
செயற்கரிய செயல் புரிந்த ஒரு மாமனிதர்
அமர்ந்த நாற்காலி அது.
மரியாதை நிமித்தம்,
ஒவ்வொரு மனிதரும் அவர் முன் கைகட்டி நின்றனர்.
அவரது மரணம் எத்தனித்த பின்னர்,
அந்தப் புனிதத்தின் தாளம் இன்னும் நீடிக்கவே செய்கிறது,
நாங்கள் சுவாசிக்கும் காற்றில் அவரது மூச்சுக்காற்று எதிரொலிக்கின்றது.
அந்தப் புனிதமான இருக்கைக்கு ஈடு இணை ஏதுமில்லை,
மனிதநேயத்திற்கு அவர் ஆற்றிய சேவையின் மாண்பால் உருவானது அது.
அந்த நாற்காலி இன்றும் அழியாமல் இருக்கிறது,
தலைமுறைகளைத் தாண்டி ஆட்சி செய்கிறது,
கற்றுக் கொடுக்கிறது,
இன்மை, ஒரு மகத்தான இருப்பின் 'மதிப்பை' உணர்த்துகிறது.