திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டு அவதூறாக பேசியிருந்தார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்திலும், சினிமா துறையில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகை திரிஷாவும் மெளனம் காத்து வந்தார். இந்த நிலையில், தற்போது மெளனம் கலைத்துள்ளார் நடிகை திரிஷா. தனது வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் மூலம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில்,
எனது கட்சிக்காரர் திருமதி. த்ரிஷா கிருஷ்ணன் (பிரபல இந்தியத் திரைப்பட நடிகை) அவர்கள் அளித்த அறிவுறுத்தலின்படி, பின்வருவனவற்றை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
ஊடகங்களில் எனது கட்சிக்காரரைப் பற்றிப் பரவி வரும் அருவருப்பான கருத்து தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
மாநில அரசியலில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு கீழ்த்தரமான மற்றும் பொருத்தமற்ற கருத்தைக் கூறுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல என்பதையும், எதிர்காலத்தில் சேரும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதையும் மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் அவர் தொடர்ந்து கூறி வருவது போலவே, அரசியல் என்று வரும்போது அவர் எப்போதும் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.
எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அடையாளம் காணப்பட விரும்புகிறாரே தவிர, எந்தவொரு அரசியல் சார்பினாலும் அல்ல. மேலும் மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான கருத்தாகும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனது கட்சிக்காரருக்கும் சம்பந்தமில்லாத விவகாரங்களில் அவரது பெயரை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், என்னுடைய அரசியல் வாழ்க்கையில் பொருத்த மட்டில் தனிநபர் விமர்சனத்தை அனுமதித்ததும் இல்லை. பேசியதும் இல்லை. அன்றைக்கு தவறி வந்த ஒரு வார்த்தை. அதற்கு என்னுடைய அகில இந்திய தலைவி வானதி சீனிவாசனும், அண்ணாமலையும் இது குறித்து பேசினார்கள். உண்மையில் இதில் யாரேனும் வருத்தப்பட்டிருந்தால் எனது வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.