முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்

Meenakshi
Feb 25, 2026,05:05 PM IST

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இன்று காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு இன்று  காலமானார். அவருக்கு வயது 101. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக  அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின்:




எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.


நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!


சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் - 


“சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் 

தூக்கினில் ஏற்றினாலும்

விட்டுப்பிரியாது – செங்கொடி

வீரம் குறையாது”


என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு.


கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்! 


முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். 


பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். 


முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு!


எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன்.


தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!


“தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. 


தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!


மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை:


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு தோழர் நல்லகண்ணுவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தனது 15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள் என அனைவரது உரிமைக்காக அயராது போராடியவர்” என அதில் தெரிவித்துள்ளார்.


பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்:




இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள். அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!


ஓம் சாந்தி!


திமுக எம்பி கனிமொழி:


விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்! தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.


பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. 


சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். 


ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


ஓம் சாந்தி!


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக காலமானார் என்கிற செய்தி வேதனையை அளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கி அவர், தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர். பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவு கூறப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.