எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!

Feb 25, 2026,02:43 PM IST

சென்னை: தமிழக அரசியலில் தூய்மை என்ற சொல்லுக்கு ஒரு உருவம் கொடுத்தால், அது தோழர் ஆர். நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101 ஆண்டுகளை பூர்த்தி செய்து நிலைத்த புகழுடன் விடை பெற்றுள்ளார் தோழர் ஆர். நல்லகண்ணு.


நீண்ட நெடிய பொது வாழ்க்கையில், அதிகாரத்தின் நிழல் கூட தன் மீது படாமல், ஒரு சொட்டு கறையுமின்றி வாழ்ந்து மறைந்துள்ளார் இந்த அதிசய மனிதர். செந்நிறக் கொடியேந்தி ஏழை எளிய மக்களின் குரலாக ஒலித்த இந்த எளிமையின் சிகரத்தின் வாழ்க்கைப் பக்கங்கள், ஆச்சரியங்களும், போராட்டங்களும் நிறைந்த செம்மையானவை.


1925-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். தனது 15 வயதிலேயே பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்த இவர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பிறகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியதால், சுமார் 7 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் சுதந்திர இந்தியாவில் அவர் அனுபவித்த சித்திரவதைகள் சொல்லில் அடங்காதவை.




நெல்லைச் சீமைக்காரர்களை மீசை இல்லாமல் பார்க்க முடியாது. ஆனால் நல்லகண்ணுவுக்கு மீசை கிடையாது. இதற்கு என்ன காரணம் தெரியுமா.. போராட்டகாலத்தில் கைது செய்யப்பட்ட அவரது மீசையை கைகளாலேயே பிடுங்கி எறிந்து கொடுமைப்படுத்தினர். அதனால்தான் அவருக்கு மீசை வளராமலேயே போய் விட்டதாம். 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் (1992-2005) பணியாற்றியவர். நினைத்திருந்தால் எத்தனையோ முறை எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகியிருக்க முடியும். ஆனால், தேர்தல் அரசியலை விட மக்கள் களத்தையே நேசித்தார். ஒருமுறை கூட இப்பதவிகளை வகிக்க அவர் விரும்பியதே இல்லை. மக்களுடன் இருப்பது மட்டுமே அவருக்கான பிடித்தமாக இருந்தது.


பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற ஊர்களில் தலித் மக்கள் ஊராட்சித் தலைவராகப் போட்டியிட முடியாத சூழல் நிலவியபோது, அச்சமின்றி அங்கு சென்று மக்களாட்சி மலர வழிவகுத்தார். மணல் கொள்ளைக்கு எதிராக முதன்முதலில் நீதிமன்றம் சென்றவர் இவர்தான். தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க இவர் மேற்கொண்ட நடைப்பயணங்கள் இன்றும் வரலாறாகப் பேசப்படுகின்றன.


இன்றைய அரசியல்வாதிகளுக்கு நல்லகண்ணுவின் வாழ்க்கை ஒரு பாடம்.  பல தசாப்தங்களாகச் சென்னை தியாகராய நகரில் ஒரு அரசு குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார். அந்த வீட்டை அரசு காலி செய்யச் சொன்னபோது, எவ்வித மறுப்பும் இன்றி உடனடியாக வெளியேறிய அவரது நேர்மை தமிழகத்தையே நெகிழ வைத்தது.


இவருக்குச் சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது. நடமாடிய காலம் வரையிலும், அரசுப் பேருந்திலும், ரயிலிலும் சாதாரண மனிதனாகப் பயணம் செய்வதையே விரும்பியவர். உடல் நலப் பாதிப்புகளுக்கு எப்போதுமே அரசு மருத்துவமனைக்கு மட்டுமே போவார். இப்போதும் கூட அவரது கடைசி கட்ட போராட்டம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்தான் முடிவுக்கு வந்துள்ளது.


ஒருமுறை அரசு வாரியப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் வரிப்பணம் மக்களுக்கே சேரட்டும் என்று கூறி, மாதம் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே அடையாள ஊதியமாகப் பெற்றார்.  ஒரு நாளைக்குக் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பார். சங்க இலக்கியம் முதல் நவீன அரசியல் வரை அனைத்தும் விரல் நுனியில்.  சிறையில் இருந்தபோது செய்த கடுமையான உழைப்பால் இவரது கைரேகைகளே தேய்ந்து போயின என்று சொல்லப்படுவதுண்டு.


அரசியல் என்பது லாபம் ஈட்டும் தொழில் அல்ல, அது ஒரு தவம் என்பதை வாழ்ந்து காட்டியவர் தோழர் நல்லகண்ணு. ஒரு சென்ட் நிலம் கூடச் சொந்தமாக இல்லாமல், ஒரு வாடகை வீட்டில் இருந்தபடி உலகத்தையே தன் அன்பால் ஆண்டவர் அவர். 100 வயதை தாண்டிய இந்த மக்கள் தலைவன், அடுத்த தலைமுறைக்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.


ஐயா நல்லகண்ணு அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை அப்படியே திருப்பித் தந்தபோது, "எனக்கு எதற்கு இவ்வளவு பணம்? இது மக்களுக்கே பயன்படட்டும்" என்று மிக எளிமையாகக் கூறிவிட்டார்.


ஊழலில் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளையே அதிகம் பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு, தோழர் நல்லகண்ணுவை உயர் பொறுப்பில் அமர்த்திப் பார்க்கத் தெரியாமல் போனது காலத்தின் விந்தைதான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்