நாணயம் மூழ்குமா?
- க.யாஸ்மின் சீராஜுதீன்
இனிமையான நாட்கள்
நினைவிலிருந்து தப்பித்து விடுவதில்லை ...
உங்களுக்கும் அப்படித்தானே நண்பர்களே ...ஆம்..
இதை மறுக்கத்தான் முடியுமோ ...
அல்லது மறக்கத்தான் முடியுமோ...
வாங்க என் நினைவில் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்
நாணயம் மூழ்குமா? என்ற வினாவிற்கு விடை எப்படி கண்டுபிடித்தேன் என பார்ப்போம்..
என் ஊர் அழகிய கிராமம்
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்..
தண்ணீர் தேவையை நிறைவு செய்ய வாளியில் கயிறுகட்டி கிணற்றிலிருந்து நீர் சேந்துவோம்..அப்படி ஒருநாள் தண்ணீர் எடுக்கும் போது என்னிடம்
நாணயம் ஒன்று இருந்ததது.
இதை கையில் வைத்துக்கொண்டு எப்படி நீர் சேந்த முடியும்.
அப்போது எனக்கு ஒருயோசனை எட்டியது.
அந்த நாணயத்தை வாயில் போட்டுக்கொண்டேன்.
வாயில் ஓரமாக வைத்துக்கொண்டு தண்ணீர் சேந்தினேன்.
அந்த கிணறு சுற்றுச்சுவர் அற்றது ,குனிந்துநின்று தான் நீர் சேந்த வேண்டும்.
அப்போது அந்த கிணற்றில் தவளைகள் குதித்து விளையாடின.
பார்த்தேன் ,ரசித்தேன், மகிழ்ந்தேன்..அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது?
நாணயம் கிணற்றில் போட்டால் மிதக்குமா? அல்லது மூழ்குமா? என்று.
மூழ்கினா காசு போயிடுமேன்னு ஒருபக்கம் பயம் .அப்புறம் எப்படி தின்பண்டங்கள் வாங்குவது.
போட்டி வாங்கி விரல்களில் செருகி சாப்பிடும் சந்தோஷம் இருக்கே சொல்லவா வேண்டும் .அப்புறம் கம்மர்கட்டு , போன்றவை..
குழப்பத்தில் தண்ணீர் சேந்த குனிந்தேன் பாருங்க...!
வாயிலிருந்த காசு கிணற்றில் குதித்துவிட்டது..
என்னடா இது ?
காசு எங்க போச்சி தண்ணிகுள்ள மூழ்கிப்போச்சு...!
காசு போனாலும் விடை கிடைச்சிடிச்சே ...!
என் சோதனை களம் அப்பவே கிணறு பாருங்க .
இதை நான் நினைத்தேன் ,சிரித்தேன், எனக்கு நானே பெருமை கொண்டேன்..
ஏன்னு நினைக்கிறீங்களா ....
என் வகுப்பறை எண்ணும் எழுத்தும் வகுப்பு 4மற்றும் 5 க்கு அறிவியல் பாடத்தில் மிதக்குமா? மூழ்குமா? செயல்பாட்டை செய்து காட்டினேன் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் ..
பொருட்கள் மிதப்பது மற்றும் மூழ்குவது எதனால் என்ற அறிவியல் உண்மையை விளக்கினேன்
ஆஹா...!.அறிவியல்..!
அன்று கிணற்றில் இன்று வகுப்பறையில்...
ஏன்? எதற்கு? எப்படி ?வினா எழுப்புவோம் ..
அறிவை விரிவு செய்வோம் ...
என்ன நண்பர்களே உங்களுக்கும்
மீண்டும் சந்திப்போம்...
நினைவலைகள் மலரும்.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)