- ஜோசப் சாம்ராஜ்
SOLITARY REPAIR மனப்பாட பாடல் 16வரி. எத்தனை முறை டிசைன் டிசைனாக படித்தாலும் ஜோ மன்டையில் ஏறவில்லை. வல்லாரை கீரை பற்றி தெரிந்து இருந்தால் 48நாள் ஜுஸ் குடித்து இருப்பேன்.
ஆங்கில பாடம் சோமு ஐயா. சிவந்த மேனி ஆசிரியர். கை சிவக்க சிவக்க அடிக்கும் மன்னன். பச்சைக் பாவாடை சிவப்பு ரிப்பன் அணிந்த என் வகுப்பு தேவதைகள் மட்டும் தான் இரக்கப்படுவார்கள். குமாரு .. நாகராசு.. நல்லா நகைப்பார்கள்.
இனி வேறுவழியில்லை என்று நூறு முறை யோசித்து தான் இந்த முடிவு செய்தேன். பூவரசு இலையிலே பீப்பி செய்து ஊதினோம் என்று சொன்னேன்அல்லவா அவன் தான் என் நினைவுக்கு வந்தது.
16வரியின் முதல் எழுத்தை திருவள்ளுவர் அச்சாணியில் பனை ஓலையில் எழுதியதை போல நான் பூவரசு இலையிலே எழுதினேன். எங்கள் வகுப்பு தேர்வு எல்லாம் மரத்தடியில் மட்டும் தான் நடைபெறும். வகுப்பு மட்டும் தான் பாடசாலையில் நடைபெறும்.

ஜோ நான் இருக்கிறேன் கவலைபடாதே என்று பூவரசு தாய் எனக்கு கூடுதலாக ஆக்ஸிஜன் கொடுத்தது. மனசு படபடவென்று வெண்புறா போல அடித்து கொண்டது. அருகில் இருப்பவர்கள் அனைவரும் வெயில் வரும் போது காணல் நீராய் ஆகி மறைந்து போனார்கள்.
அனில் பாலம் கட்டும் கதை பற்றி சக்திவேல் ஐயா கதை கதையாக கூறுவார். அப்போது கை கடிகாரம் என்னிடம் இல்லை. எங்கள் அறிவியல் கண்டுபிடிப்பு கூரையில் இருந்து விழும் ஓட்டை வழியாக விழும் வெயில் எந்த இடத்தில் வந்தால் மணி அடிக்கும் என வட்டம் வரைந்து வைத்திருப்பான் ஜோ.
அவனே ஒரு தலைவனாக ஜோசியர் தெருவில் வலம் வந்தான். சின்னப்பிள்ளைகள் அவனை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அவனுக்கு கிடைக்கும் பிஸ்கட் ஹார்லிக்ஸ் என்று நண்பர்களுக்கு கொடுத்து நல்லா வேலை வாங்கி கொள்வான் தம்பி.
தம்பி தான் என் பட்டப்பெயர். தனது பையை குச்சியில் விட்டு இரண்டு பக்கமும் நன்டை தூக்கிச்செல்லும் கொக்குகள் போல இரண்டு சிஷ்யர்கள் தூக்கி செல்வார்கள். பாஸ் மாதிரி ஜோ கம்பீரமாக செல்வான். அவன் சிஷ்ய பிள்ளைகளில் கோபி தான் தளபதி. கிணற்றை தாண்டி குதித்து கொடிக்காப்புளி கொண்டு வந்து பாஸை நல்லா ஐஸ் வைப்பான்.
விடிகாலையில் வாசல் படியில் காத்திருப்பான். வீட்டைச் சுற்றி உள்ள பூக்களை பறிக்க நிறைய தேவதைகளையும் சைட் அடிப்பான். எது எப்படியோ மனப்பாட பாடலை பூவரசு இலை உதவியால் எழுதி முடித்தான். ஆசிரியரால் நம்ப முடியவில்லை. பாராட்டவும் இல்லை.
அந்த டைம் நான் நம்ம தலைவர் சுதாரித்து இருந்திருக்கவேண்டும். எங்கள் ஐயா மருந்துவ விடுப்பு நாட்களில் புஷ்பா ஆசிரியர். காதில் பெரிய வளையம் போட்டு செம ஸ்டைலான ஆங்கிலம் பார்த்து வியந்து அவரை பார்க்க நான் வீடு சென்றேன். மீண்டும் ஐயா வந்து விட்டார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்வதை போல மாட்டிக்கொண்டேன். தலைமைஆசிரியரை பார்த்து விட்டு வா என்று அனுப்பினார். எங்கள் தலைமையாசிரியர் கை சப்பாத்தி அளவு அகலம்
வலது கையால் ஓங்கி ஒரு அறை விட்டார். காது ரீங்காரம் இட்டது.
நாளை வரும் போது உன் அம்மாவை அழைத்து வா என்று கட்டளையிட்டார். அம்மா அங்கு தான் காந்தி நிகேதன் ஆரம்பள்ளியில் ஆசிரியர். பால்ராஜ் ஐயாவை விட ரொம்ப கண்டிப்பானவர். என் அம்மா நான் செய்யும் தவறுகளை நோட்டில் எழுதி வைத்து என் அப்பா வாரம் ஒரு நாள் வரும் போது சனிக்கிழமை இரவு அடித் திருவிழா நடைபெறும்.
அருகில் இருக்கும் தேவதைகள் தான் என் மேல் இரக்கப்படுவார்கள். இதற்காகவே எத்தனை அடிகள் கூட வாங்கலாம் போல இருக்கும். தலைமை ஆசிரியர் அறையில் இருந்து இறங்கி வரும் போது பாதை எங்கும் பன்னீர் மரத்தின் பூ தரையெங்கும் கிடந்தது. ஒரு பூவை எடுத்து பின்புறம் கட்பண்ணிவிட்டு வாயில் வைத்து ஊதினேன். மனசுக்குள் ஐடியா உதித்தது.
இப்போது எதாவது யோசனை வந்தால் ராஜிவ் நகரில் இருக்கும் பன்னீர் மரத்தின் அருகே சென்று பூவை எடுத்து ஊதிக்கொள்வேன் .100ஐடியா சொல்லி தருவதுண்டு பன்னீர் புஷ்பங்கள். அப்பா அம்மாவை நினைத்து மனசு ரொம்ப பயந்தது.
மாலை சூரியன் மயங்கும் நேரத்தில் சேமித்து வைத்திருந்த காசை எடுத்து கொண்டு பாண்டியன் பேருந்து ஏறி தென்காசி பயணம் செய்தேன். குற்றாலம் போய் அருவி மேலே சென்று குதித்து விட வேண்டியது தான். போதும் நம் வாழ்வியல் பயணம் என்று முடிவு செய்தேன். கூடை நிறைய கிருஷ்ண கோவிலில் பாட்டிகள் கொய்யாப்பழம் பேருந்து ஜன்னலில் விற்பனை செய்தனர். அதே சப்தம் திருவில்லிபுத்தூரில் பால்கோவா பால்கோவா என்று கூவும் சப்தம் கேட்டது.
அப்பா எனக்கு எப்போதும் புளியமரத்தடி கடை மைசூர் பா வாங்கி தருவார். சாப்பிடும் போது அம்புலிமாமா படித்துக்கொண்டே மைசூர் பா சாப்பிடும் பழக்கம் உண்டு. என் வசதிக்காக கடவுள், சேகர் கடை சேவு இனிப்பு செய்யும் இடம் வைத்து இருந்தார். பத்தா குறைக்கு நண்பர் குமார் இனிப்பக கடையில் பலகாரம் செய்யும் கிட்டங்கி சென்று சுடசுட அல்வாவை கோழி மண்புழு விழுங்குவதை போல விழுங்குவது உண்டு.
அவன் அப்பா படிக்கல்லை கொண்டு எறியும் நேரத்தில் டபார் என்று குனிந்து கொண்டு சந்து வழியாக ஓடி விடுவோம். செலவுக்கு காசை இல்லை என்றால் சின்ன வேலைகள் கிட்டங்கியில் உட்கார்ந்து செய்வது உண்டு. எப்படியோ பல நினைவுகளை அசை போட்டு தென்காசி பேருந்து வந்து அடைந்தேன்.
தம்பியை காணவில்லை என்று இங்கு வீட்டில், ஊரெங்கும் தேடும் படலம் நடந்ததது. நான் வீட்டிற்கு ஒரே பையன். செல்லப்பிள்ளை. தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து குற்றாலம் பஸ் ஏற வேண்டிய நேரத்தில் கடவுள் பேசினார். திரும்ப வீடு வந்து சேர்ந்தேன். ஊரே வரவேற்பு. அப்பா வந்து ஆரத்தழுவி வரவேற்று கன்னத்தில் முத்தமிட்டார். அனைத்தையும் மறந்து விட்டார்.
அதன் பின்னர் அப்பாவே டைம் எடுத்து இரவெல்லாம் பாடம் நடத்தினார். கணக்கு தெரியாமல் அப்பாஸ் அலி ஐயா அடித்த வீரத்தழும்பு முதுகு முழுவதும். சட்டையை கழற்றி குளித்தால் அம்மா பார்த்து விடுவார்கள் என்று பயந்து தலையில் தண்ணீர் தெளித்து வெட்டப்போகிற கோழி நனைவது போல நனைந்து கொண்டே திரிவதுண்டு.
அம்மா கண்டுபிடித்து அப்பாவிடம் சொல்லி அரசு தேர்வு என்பதால் அப்பா சிரத்தை எடுத்து சொல்லி கொடுத்தார். சரியாக செய்தால் தான் இரவு உணவு என் வீட்டில் வழங்கப்படும். நமக்கு தான் ஒரு டஜன் தேவதைகள் இருக்கும் போது நமக்கென்ன கவலை. எப்படியாவது எந்த ரூபத்திலாவது உணவு கிடைத்து விடும். இது நான் செய்த புண்ணியம்.
அரசு தேர்வில் கணக்கு பாடத்தில் அதுவரை கோழி முட்டை எடுத்தது அதிகம். எனக்கு அரசுத் தேர்வில் 72, மதிப்பெண்கிடைத்தது. அப்பாவுக்கு நன்றி. love you dada.
SOLITARY REPAIR பாடல் பூவரசு இலை இல்லாமல் 16வரியும் எழுத முடிந்தது. எப்போதும் போல அதிக ஆக்ஸிஜன் ஜன்னல் வழியாக அனுப்பியதும் பன்னீர் பூவும் தான் என் இளமைக்காலத்தில் நெஞ்சில் நிறைந்த நினைவுகள். என் வீட்டில் இருந்த மர்பி வானொலியில் நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனசாட்சி என்ற பாடல் ஒலித்தது.
வாசலில் பாவை கூத்து போடலாமா என்று கேட்டு பட்டாளம் காத்திருந்தது. பன்னீர் பூவை எடுத்து பீப்பி ஊதி கொண்டே சென்றான் ஜோ.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
அம்மா பாடிய தாலாட்டு
காய்கறி தோல் துகையல்!
SOLITARY REPAIR.. மண்டைல ஏறவே இல்லையே ஜோ!
ஒரு பக்க கதை .. கதையின் பெயரே இதுதான் பாஸ்!
அது என்ன....!
Tamil Haiku: அடைமழை ஆதவனுக்கும் குளிர்!
Thursday Thoughts: உடையாத வரை ஒரு முகம்.. உடைந்து விட்டால் பல முகம்!
தென்தமிழ் தலையங்கம்: விஜய்க்கு கூடும் கூட்டம்.. எதைக் குறிக்கிறது?
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
{{comments.comment}}