நவராத்திரி ஸ்பெஷல் நெய்வேத்தியம்: நவதானிய சுண்டல்!

Su.tha Arivalagan
Oct 09, 2026,11:50 AM IST

- எம்.எல்.பிரபா


"நவராத்திரி" தொடங்கப் போகிறது. ஒன்பது நாளும் 9 வகையான சுண்டல் செய்து அம்பிகைக்கு நெய்வேத்தியம் செய்து பிறகு பிரசாதம் வழங்குவது இந்துக்களுடைய வழக்கம். 


சிலருக்கு தினமும் சுண்டல் செய்ய முடியாது. அவர்களுக்காக நவதானிய சுண்டல் செய்து சாப்பிடுவதற்கு ஒரு சிறிய டிப்ஸ். வாருங்கள் நவதானிய சுண்டல் எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.


தேவையான பொருள்கள்:


1.வெள்ளை கடலை ஒரு கப்

2. கொண்ட கடலை ஒரு கப்

3. பச்சை பட்டாணி ஒரு கப்

4. வெள்ளை பட்டாணி ஒரு கப்

5. வெள்ளைக்கார மணி ஒரு கப்

6. சிகப்பு காராமணி ஒரு கப்

7. பச்சை பயிறு ஒரு கப்

8. மொச்சை ஒரு கப்

9. கொள்ளு ஒரு கப் (நவதானியங்கள்) 


தாளிப்பதற்கு கொஞ்சம் எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன்,பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 4 ,சிறிது கருவேப்பிலை, துருவிய தேங்காய் அரை கப், தேவையான அளவு உப்பு.


செய்முறை:




வெள்ளை கடலை, கொண்டைக்கடலை, மொச்சை, மூன்றையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு எல்லா தானியங்களையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். 


பிறகு தானியம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். வேகவைத்த தானியத்தை வடிகட்டி தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். 


சுண்டலுக்கு தேவையான உப்பை சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகை போடவும். கடுகு பொரிந்த உடன் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு, பச்சை மிளகாயை நறுக்கி போடவும். 


கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு வறுத்து, சுண்டலைக் கொட்டி கலக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். 


நவதானிய சுண்டல் ரெடி. சுடச்சுட சாப்பிடும் போது அமிர்தமாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


(குறிப்பு)


1. சுண்டலில் புரதச்சத்து மற்றும் உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளதால் அது உடலுக்கு நல்லது.

2. நவதானியங்களை ஊறவைத்து முளைகட்டி வேகவைத்தும் சாப்பிடலாம். நவதானியங்களை வறுத்து மிக்சர் போலவும் காரசாரமாக சாப்பிடலாம்.


நவதானியங்களை வேக வைத்த நீரை கீழே ஊற்றாமல் அதில் ரசம் செய்தும் சாப்பிடலாம். அதிலும் சத்துக்கள் உள்ளது.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)