ஆயுத பூஜை .. சரஸ்வதி பூஜை .. கல்விக்கும், தொழிலுக்கும் நன்றி செலுத்தும் தினம்!
- ஸ்வர்ணலட்சுமி
அக்டோபர் 1ஆம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை அனைத்தும் மாநிலங்களிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கருவிகள் புத்தகங்கள் மற்றும் அவரவர் செய்யும் தொழில்களுக்கு உதவும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வழிபாடுகள் நடைபெறும்.
அன்னை பராசக்தி மகிஷாசுரமர்த்தினியாக மகிஷாசுரனை அழித்ததற்கு நன்றி கடனாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் வளர்பிறை நவமி இந்த நாளை "மகா நவமி" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கல்வி மற்றும் ஞானத்தின் தெய்வமான வாக் தேவியான சரஸ்வதி தேவியை வணங்கும் நன்னாள் இந்த அக்டோபர் முதல் நாள் ஆகும்.
குழந்தைகள் படிப்பில் வெற்றி பெறவும், நினைவாற்றல் சிறக்கவும், கல்வித்தகுதி பெற்று உயரவும் மக்கள் சரஸ்வதி தேவியை இந்த நாள் பக்தி சிரத்தையுடன் வணங்குகின்றனர்.
இந்த பூஜை நன்னாள் அரசு விடுமுறையாக அங்கீகரிக்கப்படுகிறது. நம் வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் உதவும் கருவிகள் மற்றும் அறிவுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்பாட்டு நிகழ்வு ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை ஆகும். நேரம்: நவமி திதி செப்டம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2:53 முதல் புதன்கிழமை மதியம் 3:33 மணிவரை. சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் புதன்கிழமை காலை 9:00 மணிக்கு மேல் 12 மணிக்குள் பூஜை செய்வது நன்மை பயக்கும்.
பூஜை அன்று வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணம் கட்டி வீட்டில் பயன்படுத்தும் அனைத்து கருவிகள்,கதவுகள், வாகனங்கள், மற்றும் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் மஞ்சள், குங்குமம்,சந்தனம் வைக்க வேண்டும். மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மேலும் பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் உருவப்படமோ அல்லது சிலையை அலங்கரித்து ஒரு மாடம் அல்லது பலகையின் மேல் சிவப்பு நிற துணியை விரித்து வெண்ணிற தாமரை மலர், வாசனை மலர்கள் வைத்து அலங்கரித்து, குழந்தைகள் புத்தகங்கள்,பேனா, பென்சில், லேப்டாப், பொரிகடலை, அவல், சுண்டல், பொங்கல் அனைத்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறப்பு.
இந்த வருடம் நவராத்திரி பண்டிகை 11 நாட்கள் வருகிறது அதீத சிறப்பாகும். இந்த நாளில் பார்வதி தேவி அசுரனை அழிக்க அனைத்து ஆயுதங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது.அந்த ஆயுதங்கள் தான் நாட்டு மக்களை தீய சக்தியிலிருந்து பாதுகாக்கவும், அம்பிகையால் பயன்படுத்தப்பட்டது. எனவே கலைகளுக்கும் தொழிலுக்கும் உதவும் எல்லா கருவிகளையும், இசை கருவிகள், ஆகியவற்றை பூஜிக்கும் நாளாக ஆயுத பூஜை அமைந்துள்ளது.
தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.