இன்று நவராத்திரி 4ம் நாள்...வழிபட வேண்டிய அம்பிகை, மலர், நைவேத்தியம் முழு விபரம்

Su.tha Arivalagan
Sep 25, 2025,11:12 AM IST

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் அம்பிகையின் ஒன்பது ரூபங்களை வழிபட்டு, அவளின் அருளை பெற வேண்டும். இந்த ஆண்டு நவராத்திரி விழா செப்டம்பர் 22ம் தேதி துவங்கியது. நவராத்திரியின் முதல் நாளில் சிவ பெருமானிடம் இருந்து தோன்றிய மகேஸ்வரியின் வடிவத்தையும், 2வது நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் வடிவத்தையும், 3ம் நாளில் சப்தகன்னியர்களில் ஒருவராக வாராஹி அம்மனையும் வழிபட்டு துர்கை வழிபாட்டினை நிறைவு செய்து முடித்துள்ளோம்.


நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, திருமகளான லட்சுமி தேவியை வழிபட துவங்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. வெறும் பணம் மட்டுமல்ல, ஒரு மனிதன் மனநிம்மதி, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, நல்ல குழந்தைகள், உயர் பதவி, ஆரோக்கியம், குறைவில்லாத உணவு, நிறைவான மனம் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களையும் பெற்று, நிறைவாக வாழ வேண்டும் என்றால் அது லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டும் தான் முடியும். அப்படிப்பட்ட லட்சுமி தேவியை நவராத்திரியின் 4ம் நாளில் மகாலட்சுமியின் வடிவமாகவே வழிபட வேண்டும்.  


நவராத்திரி 4ம் நாள் வழிபாடு : 




அம்பிகையின் பெயர் - மகாலட்சுமி

கோலம் - படிக்கட்டு வகை கோலம்

மலர் - ஜாதிமல்லி

இலை - கதிர்பச்சை

நைவேத்தியம் - கதம்ப சாதம்

சுண்டல் - பட்டாணி சுண்டல்

பழம் - கொய்யா பழம்

ராகம் - பைரவி

நிறம் - கருநீலம்


சொல்ல வேண்டிய மந்திரம் : 


1. மகாலட்சுமி மந்திரம் : "ஓம் ஹ்ரீம் யம் வம் வைஷ்ணவ்யை".

2. லட்சுமி காயத்ரி மந்திரம் : 

"ஓம் அம்ருத வாசினி வித்மஹே

பத்ம லோசனி தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்"

3. சக்தி வாய்ந்த மகாலட்சுமி மந்திரம் :

 "ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மியே நமஹ"

4. மகாலட்சுமி பீஜ மந்திரம் :

"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா". 


நவராத்திரியின் 4ம் நாளில் மகாலட்சுமிக்கு விருப்பமான கனகதாரா ஸ்தோத்திரம், லட்சுமி ஸ்துதி ஆகியவற்றை படித்து வழிபடலாம். வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து, சில்லறை காசுகள் கொண்டும், குங்குமம் கொண்டும் அர்ச்சனை செய்வது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். இப்படி வழிபடுவதால் மகாலட்சுமியின் அருட் கடாட்சம் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும்.