அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திடீர் என சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக வரும் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற டிசம்பர் 14ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின் போது சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். இதற்கிடையில் இன்று திடீர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடியாரின் வீட்டில் நடந்துள்ளது.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்த சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசவில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.