தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி படு வேகமாக கட்சிகள் பாய்ந்தோடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாரெல்லாம் முறுக்கிக் கொண்டு நின்றார்களோ அவர்கள் எல்லாம் இப்போது படு வேகமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரமாண்டக் கூட்டத்தில் பேசவுள்ளார். அதுதான் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து உத்தரவு பறந்துள்ளதாம். இதனால்தான் படு வேகமாக கட்சிகளை உள்ளே இழுத்து வருவதாக கூறப்படுகிறது.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தற்போது முக்கிய அரசியல் நகர்வுகள் நடந்து வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி (அன்புமணி) மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை அடுத்தடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்துள்ளன.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்காக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. இந்த முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிமுகவே தலைமை தாங்கி வழிநடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் சில வாரங்களுக்கு முன்பு வரை வேறு யாருமே இணையாமல் இருந்து வந்தனர். அதாவது பெரிய கட்சிகள் என்று யாருமே இடம் பெறாத நிலையே காணப்பட்டது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் மதுராந்தகக் கூட்ட அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போது பாஜக கூட்டணியில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
முதலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்தது. அதேசமயம், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது இன்று, டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, பாஜக கூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இந்தக் கட்சியை கூட்டணியில் சேர்த்தே ஆக வேண்டும் என்று பாஜக தரப்பில் அதிமுகவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதால் அதிமுக அதை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று தினகரன், பாஜக கூட்டணிக்கு வந்து விட்டார்.
அடுத்தடுத்து கட்சிகள் தேஜகூவை நோக்கி வர ஆரம்பித்திருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே இக்கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய குட்டிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அடுத்த பெரிய கட்சியாக தேமுதிகதான், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சியின் தலைவரான பிரேமலதா விஜயகாந்த், உரிய நேரத்தில் கூட்டணியை அறிவிப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் அவரையும் விரைவில் பாஜக உள்ளே இழுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபக்கம், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் குழப்ப நிலையிலேயே உள்ளது. நடிகர் விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஒருவேளை அவர் கூட்டணிக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம் அவரைச் சுற்றி பல சிக்கல்கள் வியாபித்து நிற்கின்றன.
ஆக மொத்தம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல, அதிமுக தலைமையில் ஒரு "மெகா கூட்டணி" அமைப்பதற்கான வேலைகள் தீவிரமாகியுள்ளன.