"நாளை உன் கண்கள் என்னைத்தான் தேடும்" .. (நீ மழை.. 4)

Su.tha Arivalagan
Feb 23, 2026,12:34 PM IST

- சு.தா.அறிவழகன்


மீரா அந்த லொகேஷனைப் பார்த்தாள். அது நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு பழைய தொழிற்சாலைப் பகுதி. "அவன் வீட்டுக்கு போகலையா? அப்போ அக்கா சொன்னது... அர்ஜுன் சொன்னது... எல்லாமே ஒரு பெரிய நாடகமா?" மீராவின் கைகள் நடுங்கின. மழையில் நனைந்தபடி சாலையோரம் நின்ற ஒரு ஆட்டோவை கையாட்டி நிறுத்தினாள்.


"அண்ணா, சீக்கிரம் இந்த இடத்துக்குப் போங்க!" என்று போனில் இருந்த லொகேஷனைக் காட்டினாள். ஆட்டோ டிரைவர் அதைப் பார்த்து விட்டு, இதுவா, ரொம்ப ஒதுக்குப்புறமான இடமாச்சேம்மா.. என்று சற்று குவப்பத்தோடு மீராவைப் பார்க்க,, பரவாயில்லைண்ணா.. போங்க என்றாள் சற்று வேகமா. கியரை மாற்றிய டிரைவர் ஆக்ஸிலரேட்டரை முடுக்கினார். ஆட்டோ இருட்டுச் சாலைகளுக்குள் புகுந்து வேகமெடுத்தது.


சுமார் இருபது நிமிடப் பயணத்திற்குப் பிறகு, ஆட்டோ ஒரு பாழடைந்த கிடங்கின் முன்னால் போய் நின்றது. சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லை. மழையின் ஓசையைத் தவிர வேறு சத்தமில்லை. தூரத்தில் அர்ஜுனின் பைக் மழையில் நனைந்தபடி நின்றிருந்தது.


ஆட்டோவைக் கட் செய்யலாமா.. இல்லை இருக்க வைத்து விட்டுப் போகலாமா என்று மீராவுக்கு திடீர் குழப்பம் வந்தது. அதன் பின்னர் ஒரு முடிவெடுத்தவளாக, ஆட்டோவைக் கட் செய்து அனுப்பி விட்டு, மெல்ல அர்ஜூனின் பைக்கை நோக்கி நகர்ந்தாள். மனசுக்குள் ஒரு படபடப்பு.. அந்த மழையிலும் வியர்த்துக் கொட்டியது. உடலெல்லாம் குப்பென்று வெப்பம் ஏறியது. குளிரிலும் சூடாக உணர்ந்தாள்.




அந்த பழைய கட்டிடத்தின் இரும்பு கதவு சற்றே திறந்திருந்தது. உள்ளே மங்கலான மஞ்சள் வெளிச்சம் தெரிந்தது. இதயம் வேகமாகத் துடிக்க, மீரா உள்ளே நுழைந்தாள். அங்கே தெரிந்த காட்சி அவளை உறைய வைத்தது.


அங்கே அர்ஜுன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் ஒரு பெரிய கண்ணாடி. அவன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். ஆனால் அங்கே வேறு யாருமே இல்லை.


"மீரா... நீ வரமாட்டேன்னு நினைச்சேன். ஆனா உன்னோட பிடிவாதம் எனக்குத் தெரியும்," அர்ஜுன் கண்ணாடியைப் பார்த்தபடி சொன்னான். அவன் குரல் இப்போது முற்றிலும் மாறி இருந்தது. கஃபேவில் பார்த்த அந்தத் தழுதழுப்போ, நடுக்கமோ இப்போது இல்லை.


மீராவுக்கு பயம் கூடியது. இவன் மன நலம் பாதிக்கப்பட்டு விட்டனா அல்லது.. வேறு ஏதேனுமா.. என்று உள்ளுக்குள் திகிலடிக்க யோசித்த மீரா.. தொடர்ந்து நகருவதா அல்லது அப்படியே திரும்பிப் போய் விடுவதா என்று குழம்பினாள்.


"என்ன மீரா.. இவ்வளவு தூரம் வந்துட்டு.. ரொம்ப யோசிக்கிறே.. உள்ளே வா" மீண்டும் அர்ஜூன்.


மீரா சற்றே பின்வாங்கினாள். "அர்ஜுன்... நீ... நீ யார்கிட்ட பேசிட்டு இருக்க? உங்க அக்கா சொன்னாங்க உனக்கு அம்னீசியானு... ஆனா இங்க என்ன நடக்குது?.. நீ வேற மாதிரி இருக்கியே"


அர்ஜுன் மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் ஒரு குரூரமான புன்னகை. "அக்கா? மீரா... எனக்கு அக்கான்னு யாரும் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா?!"


மீரா அதிர்ச்சியில் உறைந்து போனாள். "என்ன சொல்ற அர்ஜுன்? அப்போ அந்த அம்னீசியா கதை?.. அக்காவோட குரல்.. அவங்க பேசுனது, மெசேஜ்.. எனக்குப் பயமா இருக்கு.."


அர்ஜூனிடமிருந்து திடீரென கவிதை பிறந்தது.. மெல்லிய குரலில் மென்மையாக சொல்ல ஆரம்பித்தான்.. ஆனால் அதில் தெறித்தது குரூரம்...


"காதல் என்பது வெறும் கானல் நீர்தான்,

கண்களை மறைக்கும் ஒரு வண்ணத் திரைதான்

நீ தேடிய அர்ஜுன் ஒரு காகிதப் பூ

நிஜமென்று நம்பியது உந்தன் தப்பு


பாசத்தின் வேடத்தில் ஒரு நஞ்சுக் காற்று

பயத்தில் ஆடும் உன் நெஞ்சுக் கூடு

அக்கா என்றொரு மாயக் குரல்

அத்தனையும் நானெழுதிய நாடகப் பொருள்


அம்னீசியா என்பது அழகான பொய்

உன்னை இழுக்க நான் விரித்த வலை

தேடிய இதயம் தொலைந்து போனது

தேட வந்த இடமோ இருண்டு போனது


நேசம் என்பது ஒரு பலிபீடம்

நாளை உன் கண்கள் என்னைத்தான் தேடும்"


கேட்கக் கேட்க அதிர்ச்சியில் மீராவின் கால்கள் பின்னின. மூளை ஒரு கணம் வேலை செய்வதை நிறுத்தியது. அர்ஜுன் இப்போது நாற்காலியை விட்டு மெல்ல எழுந்து அவளை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு அடியும் அந்தப் பாழடைந்த கிடங்கின் சிமெண்ட் தரையில் ஒருவித மரண ஓசையை எழுப்பியது.


"ஒரு வேட்டையாடிக்குத் தன்னோட இரையைத் தேடிப் பிடிக்கத் தெரியணும். அந்த இரை தானாவே வலையில வந்து விழணும்னா, அதுக்கு ஒரு சென்டிமென்ட் கதை தேவைப்பட்டது. அதைத்தான் நான் செஞ்சேன் மீரா.." என்றான் அர்ஜுன். அப்போது அவனது கண்களைப் பார்த்த மீரா அதிர்ச்சியுற்றாள்.. அது அவள் அதற்கு முன்பு பார்த்த அர்ஜூன் கண்களே அல்ல.. அப்படி ஒரு கோரம் அந்தக் கண்ணில் மின்னியது. 


மீராவின் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தியது போல இருந்தது. அர்ஜுன் இப்போது அவளது மிக அருகில் வந்து நின்றான். அந்தப் பழைய கிடங்கின் கூரையிலிருந்து கசிந்த மழைத்துளிகள் அவன் தோளில் விழுந்து சிதறின. அவன் முகத்தில் தெரிந்த அந்த அமைதி, வெளியில் பெய்யும் பெருமழையை விடவும் அச்சமூட்டுவதாக இருந்தது.


"நீ நேசிச்சது அர்ஜுனை... அவனோட அழகான வார்த்தைகளை... அவனோட கவித்துவமான பார்வையை... ஆனா மீரா, நீ பார்த்தது எல்லாமே ஒரு நிழல். நிழலைத் துரத்துறவங்க நிஜத்தைச் சந்திக்கும்போது இப்படித்தான் உறைஞ்சு போவாங்க," என்று அவன் குரலைத் தாழ்த்திப் பேசினான்.


மீரா நடுங்கும் குரலில் கேட்டாள், "அப்போ... அந்த ஆஸ்பத்திரி ரிப்போர்ட்? அக்கான்னு என்கிட்ட கதறின குரல்? அர்ஜுன்... எதுக்கு இப்படி ஒரு நாடகம்? உனக்கு என்ன வேணும்?"


அர்ஜுன் மெல்ல அவளது காதருகே குனிந்து, குரூரமான ஒரு மெல்லிய புன்னகையுடன் சொன்னான்:


"உன் அர்ஜுன் ரொம்பப் பாவம் மீரா. அவனோட ஒரே தப்பு, அவன் என்னைப் போலவே இருந்ததுதான். ஆனா நான் அவனைப் போல இல்லை. இந்த உலகத்துல ஒருத்தன் வாழணும்னா இன்னொருத்தன் அழியணும்ங்கிறது இயற்கை விதி.. இல்லையா?"


அவன் தன் கையில் இருந்த போனைத் திரையிட்டு அவளிடம் காட்டினான். அதில் ஒரு பழைய நியூஸ் பேப்பர் கட்டிங் இருந்தது. அதன் தலைப்பைப் பார்த்த மீராவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அதில் இருந்த புகைப்படம் அர்ஜுனுடையதுதான், ஆனால் செய்தி வேறொன்றைச் சொன்னது.


மீரா அலற முற்படும்போது, அவன் அவளது வாயைப் பொத்தி, விழிகளில் ஒருவித வெறியோடு சொன்னான்:


"உனக்கு அர்ஜுனை ரொம்பப் பிடிக்கும்ல மீரா?"


(தொடரும்)


முந்தைய அத்தியாயங்கள்: 1 2 3