- சு.தா.அறிவழகன்
"ஹலோ..." மீராவின் குரல் நடுக்கத்தில் கம்மியது.
மறுமுனையில் பேசியது ஒரு பெண். குரல் மிகவும் அமைதியாகவும், அதே சமயம் ஒருவித அதிகாரத்தோடும் இருந்தது. "மீரா... நான் அர்ஜுனோட அக்கா பேசுறேன். அர்ஜுன் இப்போதான் கஃபேல இருந்து கிளம்புனதா மெசேஜ் பண்ணான். நீ இன்னும் அங்கதான் இருக்கியா?"
மீரா ஒரு நிமிடம் திகைத்துப் போனாள். "அக்கா... ஆமா, நான் இங்கதான் இருக்கேன். அர்ஜுன் கிளம்பிட்டார்.. நான் கிளம்பணும்"
"ஓ.. சரி.. நான் உன் கிட்ட பேசணும்"
"சொலுங்கக்கா.. பட்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கேள்வி இருக்கு.. கேட்கலாமா"
"என்ன கேள்வி.."
"அர்ஜுன் நாளைக்கு யாரையோ அறிமுகப்படுத்தறதா சொல்லிட்டுப் போறான். எனக்கு ஒண்ணுமே புரியல. அவனுக்கு கல்யாணம்...?"
அந்தப் பக்கம் ஒரு நீண்ட மௌனம். பிறகு ஒரு மெல்லிய பெருமூச்சு கேட்டது. "மீரா, அர்ஜுன் உன்கிட்ட உண்மையைச் சொல்லல. சொல்ல அவனுக்கு தைரியமும் இல்லை. நாளைக்கு அவன் யாரை அறிமுகப்படுத்தப் போறான்னு அவன் சொன்னானோ இல்லையோ, ஆனா நீ தெரிஞ்சுக்க வேண்டியது வேற ஒண்ணு இருக்கு."
"என்னக்கா சொல்றீங்க? எனக்கு குழப்பா இருக்கு.. பீடிகை போடாம சொல்றீங்களா," மீரா சுவரில் இன்னும் பலமாகச் சாய்ந்து கொண்டாள்.
"அர்ஜுன் சொன்னது பாதி உண்மைதான். அந்த ஒரு வருஷம் அவன் செத்துச் செத்து பிழைச்சதுக்கு காரணம் அவனோட நிலைமை மட்டும் இல்லை மீரா. அவனோட அப்பாவுக்கு அட்டாக் வந்த அதே நாள்ல, அர்ஜுனுக்கும் ஒரு விபத்து நடந்துச்சு. அதுல அவனுக்கு மூளையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அவனுக்கு பழைய நினைவுகள் மறந்து விட்டது.. இதுக்குப் பேரு "ரெட்ரோகிரேட் அம்னீசியா". எல்லா பழைய விஷயங்களையும் அவன் மூளை அழிச்சிருச்சு."
வெளியில் மழை வெளுத்து வாங்கியது.. இடியும் மின்னலும் போட்டி போட்டு மொத்தமாக மீராவின் தலையில் இறங்கியது போல உணர்ந்தாள்.

சுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்ட மீரா, "அக்கா என்ன சொல்றீங்க.. ? அப்போ இப்போ அவன் பேசினது எல்லாம்?"
"அவன் இப்போ பேசினது, கடந்த ஒரு வாரமா அவன் டைரியைப் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். அவனுக்கு உன்னை யாருன்னே தெரியாது மீரா. ஆனா உன் மேல இருந்த காதலால் அந்த டைரியை மனப்பாடம் பண்ணி, நீ அவனை வெறுத்துட்டு போயிடணும்னு இப்போ நடிச்சிட்டு போயிருக்கான். நாளைக்கு அவன் அறிமுகப்படுத்தப் போறது அவனோட டாக்டரைத் தான். தன்னால பழையபடி உன்னை நேசிக்க முடியலங்கிற உண்மையைச் சொல்லத்தான் அவன் உன்னை வரச் சொல்லியிருக்கான்."
மீரா போனை கையில் பிடித்தபடியே மழையைப் பார்த்தாள். அர்ஜுன் தூரத்தில் மறைந்து கொண்டிருந்தான்.
என்ன நடக்குது.. இதெல்லாம் நிஜமா இல்லை கனவா.. அர்ஜூன் சொன்னது பொய்னு எப்படி நம்புவது.. அவனோட அக்கா ஏதாவது கேம் ஆடுகிறாரா.. அவங்க சொல்றது எதுவுமே விளங்கலியே.. செயற்கையா இருக்கே.. எதுவுமே புரியாமல் தலையெல்லாம் சூடாகி அப்படியே கீழே விழுவது போல அமர்ந்தாள் மீரா.
ரெஸ்டாரென்ட்டுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓடி வந்தனர்.. " மேடம் என்னாச்சு.. ஆர் யூ ஆல்ரைட்?" என்று கேட்டனர். ஒரு பெண், மீராவின் தோளைப் பிடித்து எழுப்பி அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தாள்.
"ஐ அம் ஓகே.. சாரி.." என்று கூறியபடி சுதாரித்துக் கொண்ட மீரா கண்களைத் துடைத்தபடி செல்போனை வேகமாக காதில் வைத்தாள். அந்தப் பக்கம் சத்தம் இல்லை.
குழப்ப மன நிலை தீராத மீராவை செல்போன் மெசேஜ் சத்தம் மீண்டும் கலைத்தது. அர்ஜுனிடமிருந்து தான்.
"நாளைக்கு நான் யாரை அறிமுகப்படுத்தினாலும், அந்த முகத்தை உன்னால அடையாளம் காண முடியுமான்னு பாரு மீரா. ஏன்னா, நாளைக்கு வரப்போற அர்ஜுன், இன்னைக்கு நீ பார்த்த அர்ஜுன் கிடையாது."
மீராவின் தலை மீண்டும் சுற்றியது. What the hell is happening? அர்ஜூன் வந்தது, பேசியது, திரும்பிப் போனது, அவனது அக்காவின் பேச்சு, இப்போது வந்த மெசேஜ்.. எல்லாவற்றையும் மின்னல் வேகத்தில் அவளது மனசு ரீவைன்ட் செய்து பார்த்தது.. ம்ஹூம்.. சுத்தமாக எதுவுமே பிடிபடவில்லை.
மழை இன்னும் தீவிரமானது. கஃபே-வின் விளக்குகள் ஒருமுறை விட்டு விட்டு எரிந்து அணைந்தன. அந்த இருட்டில் மீராவுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது.. அர்ஜுன் எதையோ மறைக்கிறான், அது அவன் இழந்த நினைவுகளை விடப் பெரியது... அது என்ன.. கண்டுபிடிச்சாகணும்.
அர்ஜூன் சென்ற திசையைப் பார்த்தாள் மீரா.. அவனைப் பிடிச்சு பேசினா ஏதாவது தெரிய வரும்.. மனசுக்குள் அலாரம் அடிக்க.. கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் சட்டென எழுந்து அர்ஜூன் சென்ற திசையை நோக்கி வேகமாக ஓடினாள் மீரா.
மழை நீர் மீராவின் முகத்தில் அறைந்தபடி வழிந்தது. சாலை முழுவதும் இருளும் நீரும் சூழ்ந்திருந்தது. தூரத்தில் அர்ஜுனின் பைக்கின் பின்விளக்கு சிவப்புப் புள்ளிகளாகத் தெரிந்து மெல்ல மறைந்து கொண்டிருந்தது. அவளால் பைக்கை பிடிக்க முடியாது என்று தெரிந்தும், அந்த வேகத்தில் ஓடியவள் ஒரு கட்டத்தில் மூச்சிரைக்க நின்றாள். "அர்ஜுன்!" என்று கத்தினாள், ஆனால் அவளது குரல் பெருமழையின் இரைச்சலில் கரைந்து போனது.
அர்ஜூன் சொன்னதே மீண்டும் மீண்டும் அவளைத் துளைத்தெடுத்தது. அம்னீசியா வந்த ஒருவனால் இவ்வளவு நுணுக்கமாக, ஒரு புதிர் போல பேச முடியுமா? அவன் அக்கா சொன்னது உண்மையாக இருந்தால், எதற்காக அவன் தன்னிடம் நடிக்க வேண்டும்? வெறும் பரிதாபத்திற்காகவா அல்லது தன்னை அவனிடமிருந்து விலக்கவா? யோசிக்க யோசிக்க அவளுக்கு மூச்சு திணறியது.
அவள் போன் மீண்டும் அதிர்ந்தது. அர்ஜுனின் அக்காவிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ். அதில் ஒரு லொகேஷன் பகிரப்பட்டிருந்தது. அதற்குக் கீழே ஒரு வரி இருந்தது: "உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தா, இப்போ அர்ஜுன் எங்க போறான்னு வந்து பாரு. அவன் போறது வீட்டுக்கு இல்லை."
(தொடரும்)
ஆசை
கனவு மெய்ப்பட வேண்டும்!
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
"அர்ஜுன் சொன்னது பாதி உண்மைதான்".. (நீ மழை.. 3)
சென்னைஒன் செயலி தொழில்நுட்பக் கோளாறு சரியானது.. எம்டிசி நிறுவனம் அறிவிப்பு
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
{{comments.comment}}