ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்

Su.tha Arivalagan
Mar 21, 2026,02:59 PM IST

புதுடில்லி: மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்களின் வருமான வரிச் சேமிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) கோருவதில் இப்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.


வரி விதிப்பில் எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மை :


மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய புதிய வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய முறை, வரி விகிதங்களில் மாற்றங்களைச் செய்யாமல், வரி நடைமுறைகளை எளிமையாக்குவதையும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


HRA கோருவதில் புதிய நிபந்தனைகள் :




சம்பளம் பெறும் ஊழியர்கள் இனி HRA விலக்கு கோரும் போது மிகவும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும். குறிப்பாக,  

உறவினர்களுக்கு வாடகை செலுத்துதல்: உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு (பெற்றோர் அல்லது உறவினர்கள்) வாடகை செலுத்தி அதன் மூலம் வரி விலக்கு கோரினால், அது குறித்த உறவுமுறை விபரங்களை இனி கட்டாயம் தெரிவிக்க வேண்டும். போலி வாடகை ரசீதுகளைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பான் கார்டு (PAN) கட்டாயம்: ஆண்டு வாடகை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், நில உரிமையாளரின் (Landlord) பான் எண்ணை வழங்குவது முன்பைப் போலவே கட்டாயமாகும். தவறும்பட்சத்தில் வரிச் சலுகை மறுக்கப்படலாம்.


மெட்ரோ நகரங்களுக்கான வரி விலக்கு வரம்பு புதிய விதிகளின்படி, வசிக்கும் நகரத்தைப் பொறுத்து HRA வரி விலக்கு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.


50% வரம்பு: மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், புனே, அகமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 8 முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்களின் அடிப்படைச் சம்பளத்தில் 50% வரை HRA விலக்காகக் கோரலாம்.


40% வரம்பு: இதர நகரங்களில் வசிப்பவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40% வரை வரி விலக்கு அனுமதிக்கப்படும்.


இதர முக்கிய மாற்றங்கள் :


இந்த புதிய சட்டத் தொகுப்பில் 819 பிரிவுகள் 536 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. வரி படிவங்கள் மற்றும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு வருமானம், மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) மற்றும் தணிக்கை முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1 முதல் அமலாகவுள்ள இந்த மாற்றங்கள், வரி செலுத்துவோர் மற்றும் வரித் துறை இடையிலான தர்க்கங்களைக் குறைக்கவும், டிஜிட்டல் முறையை ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சம்பளம் பெறும் ஊழியர்கள் தகுந்த வாடகை ரசீதுகள் மற்றும் நில உரிமையாளர் விபரங்களைச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும்.