Monday Motivational Poem: நிலா!
- முனைவர் தி. தங்கலட்சுமி
குழவித் திங்களாய் சிவபிரானின் சடைமுடியில்
குடியிருக்கும் பேறுபெற்ற நிலா!
நீயே இசுலாமிய நண்பர்களின்
ஒவ்வோர் பண்டிகையிலும் முக்கிய இடம்பெறும்
சிறப்புடை பிறை நிலா!
மதநல்லிணக்கம் கண்ட பொதுமைவாதி நீ!
அம்புலி காட்டி சோறூட்டும்
இளந்தாய்மார்க்கு உற்ற தோழி நீ!
"நிலா நிலா ஓடி வா" என
பால பாடம் படித்திடும் மழலையர்க்கு
உற்ற விளையாட்டுத் தோழன் நீ!
வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
என்றென்றும் கவிஞர்களின்
இஷ்ட தேவதை நீ!
உறக்கமற்ற இரவுகளில்
உடன் விழித்திருக்கும்
ஒரே நண்பன் நீ!
யுகங்கள் பல கடந்தாலும்
உன்னிளமைக்கு மூப்பில்லை!
தனிமைக்கு இனிமை சேர்க்கும்
குளுமை நிறை துணை நீ!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).