முடியலடா.. முடியலையே!
- பா.பானுமதி
பூ வேண்டும் என்றேன்
பூவுக்கே பூவா என்கிறாய்
பொன்னகை வேண்டும் என்றேன்
உன் புன்னகையில் தோற்று விடும் என்றாய்
தேநீர் குடிக்கலாம் என்றேன்
தேனே நீர் அருந்தலாமா என்கிறாய்
வாய்விட்டு சிரித்தேன்
வைரங்கள் கொட்டுகிறது என்றாய்
வலியால் அழுதேன்
மருந்து தராமல் வலிக்கு வலி வரட்டும் என்கிறாய்
ஆலயம் செல்லலாம் என்றேன்
அழகு தெய்வம் நடந்து வருவதா என்றாய்
என்ன சமைக்கலாம் என்று கேட்டேன்
உனை பார்த்தாலே பசிக்கவில்லை என்கிறாய்
ஊருக்கு போகவா என்றேன்
ஒளி இழந்து போய்விடும் என்கிறாய்
மெல்லிசை கேட்டேன்
இன்னிசை ஒன்று இசை கேட்கிறது என்கிறாய்
எது பேசினாலும் ஏற்றுக்கொள்ளாமல்
சம்பந்தமின்றி பேசி சங்கடப்படுத்துகிறாய்
கேட்டால்
கவிஞன் என்கிறாய்
கவிஞனை மணம் செய்து கொண்டதால்
காலத்திற்கும் கஷ்டம்தானா
கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு
எதார்த்தம் தெரியாமல்
என்ன மனிதர்கள் இவர்கள்...!