வெப்பமே என் வெப்பமே...!
- அ.வென்சி ராஜ்
அனலை மழையென பொழிகிறாயே...
வெப்பமே என் வெப்பமே...!
வெந்து தணிகிறாயே ஏன்?
நீர் மழையைப் பற்றி மளமளவெனை எழுதுகிறாய்...
வெண் பனியைப் பற்றி படபடவென எழுதுகிறாய்...
குளிர் மாலையை எழுதுகிறாய்...
செக்கச்சிவந்த காலையை எழுதுகிறாய்...
மேகத்தையும் விண்மீனையும் கூட விட்டு வைக்கவில்லை...
சந்திரனுக்கோ சதம் அடித்து விடுவாய் போல..
வரைந்து தள்ளுகிறாய் கவிதை வரிகளாய்...
ஆனால்...
என்னைப் பற்றி எழுத ஆளில்லை என அங்கலாய்க்கும் உன் குரல் கேட்டேன்..
ஏங்கும் உன் சோகம் நான் அறிவேன்...
அதனால்தான் அனலாய் வந்து எம்மை அடுப்பில் வைத்து படுத்துகிறாயோ...?
எம்மை வேகவைக்கும் வெங்கதிரோனே....
புரிந்து விட்டது எனக்கு..
தெரிந்து கொண்டேன் உன் ஆசையை...
வந்துவிட்டேன் உனக்காய் வரிகள் தேடி....
தெவிட்டாத தேனமுதே ...
புள்ளியில் தொடங்கி இன்று வரை அத்தனையும் ஆட்டுவிக்கும் உன் வல்லமை கொண்ட இருப்பிடத்தை நான் அறிவேன்...
ஆதவன் என்பார் பலர்...
கதிரவன் என்றார் சிலர்...
சூரியன் என்றார் பலர்..
முடிவில்லா வெப்பத்தை முடிவின்றி கொடுப்பவனே....
எங்கள் முகத்தைக் கூட மூட வைத்து விட்டாயே...
உன் ஆற்றல் யாருக்கு வரும்.?
விளையாடலாமா என வெளிவந்த குழந்தைகளை வீட்டிற்குள் அடக்கி விட்டாயே..,
யாருக்கு வரும் உன் திறமை...?
சமைக்கலாமா என்ன சிந்தித்த பெண்களை நீர்மோர் கலக்க வைத்தாயே...
யாருக்கு வரும் உன் சிக்கனம்...?
சுவைக்கலாமா என எடுத்த பண்டங்களை வைத்துவிட்டு நுங்கையும் வெள்ளரியையும் சுவைக்க வைத்தாயே யாருக்கு வரும் உன் புத்திக்கூர்மை ..?
மழையோ பனியோ கடந்து விடலாம்
உன்னை எப்படி கடப்பது என மிரள வைத்தாயே யாருக்கு வரும் இந்த தைரியம்...?
வெந்துதணியும் வெப்பமே....
போதுமா....
உன்னை புகழ்ந்து தள்ளி விட்டேன்...
உன் பெருமையெல்லாம் பேசிவிட்டேன்...
தனிந்திடுவாய் என் தாகம் தீர்க்க...
வார்த்தையில் நீர் தெளித்து வாகாய் உன்மேல் போட்டுவிட்டேன்....
கொஞ்சம் குளிர்ந்து தான் போய் விடேன் .?
வெப்பம் தணிந்து தான் போய் விடேன்..?
கொஞ்சமாவது தப்பித்துக் கொள்கிறோம் நாங்கள்...
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)