"ஓணம் வந்தல்லோ... ஓணம் வந்தல்லோ"
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 2026 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமையான இன்று "ஓணம் பண்டிகை" உலகெங்கிலும் பரவியுள்ள கேரள மக்கள் கொண்டாடும் அறுவடை திருநாளாகும்.
ஓணத்தின் பத்தாம் நாளான திருவோணம் தான் இந்த அறுவடை திருவிழாவின் மிக முக்கியமான மற்றும் பெரிய கொண்டாட்ட நாளாகும். அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது மன்னர் மகாபலி கேரளாவிற்கு வருகை தருவதாக கூறப்படுகிறது, உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் எவ்வித பேதமும் இன்றி மன்னர் மகாபலியின் வருகையை நினைவு கூறும் வகையில் ஓணம் பண்டிகை கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகை வரலாறு :
மாவேலி மற்றும் ஓணத்தப்பன் என்று அழைக்கப்படும் மகாபலி மன்னரின் கதையையும், தாராள மனப்பான்மை கொண்ட இந்த பேரரசர் ஓணம் கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்வது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பண்டைய கேரளாவை ஆண்ட அசுர குல மன்னரான மகாபலி மன்னன் மக்கள் மீது மிகுந்த அன்பும்,பாசமும், சமத்துவமும் கொண்டவராக விளங்கினார். மகாபலி யின் பெருமையை சோதிக்க வந்த மகாவிஷ்ணு வாமனர் - குள்ள பிராமணர் அவதாரம் எடுத்து மூன்றடி நிலம் கேட்டார். பிரபஞ்சத்தையே அளந்த வாமனரின் மூன்றாவது அடிக்கு தன் தலையை கொடுத்தார் மகாபலி. மகாவிஷ்ணுவிடம் அவன் கேட்ட வரத்தின் காரணமாக ஆண்டிற்கு ஒரு முறை தன் மக்களை காண மகாபலி மன்னன் பூலோகம் வரும் நாளே ஓணம் பண்டிகையாக உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகை(2026) தேதிகள்:
ஆகஸ்ட் 16:
ஞாயிற்றுக்கிழமை அத்தச் சமயம் ஓணம் கொண்டாட்டங்களின் தொடக்கம் கோலாகலமாக துவங்கியது.
ஆகஸ்ட் 25:
செவ்வாய்க்கிழமை முதலாம் ஓணம்/ உத்திராடம். திருவோணத்திற்கு முந்தைய ஆயத்த நாள் கொண்டாடப்பட்டது.
ஆகஸ்ட் 26 :புதன்கிழமை
திருவோணம்/ இரண்டாம் ஓணம் மிக முக்கியமான முதன்மைத் திருநாள் இன்று.
ஆகஸ்ட் 27:
வியாழக்கிழமை மூன்றாம் ஓணம்/ அவிட்டம்.
ஆகஸ்ட் 28: வெள்ளிக்கிழமை நான்காம் ஓணம்/ சத்யம்.
ஆகஸ்ட்29: சனிக்கிழமை புலிகளி என்று அழைக்கப்படும் புலி வடிவ நடனம் நடைபெறும்.திருச்சூர்.
ஆகஸ்ட் 30: ஞாயிற்றுக்கிழமை ஆரன்முலா படகு போட்டி- பாம்பு வடிவ படகு போட்டி நடைபெறும்.
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் சிறப்புகள்:
பூக்களம் :
ஓணம் பண்டிகை முன்னிட்டு பத்து நாட்களும் கேரள மக்கள் வீடுகளின் வாசலில் பல வண்ண மலர்களால், பலவிதமான மலர்களால் அழகான கோலமிட்டு, விளக்கேற்றி வாசலை மிகவும் அழகு படுத்துவார்கள். இதனை 'பூக்களம்' என்று அழைப்பர்.
ஓணம் சத்யா :
திருவோணத்தன்று வாழை இலையில் 25க்கும் மேற்பட்ட சைவ உணவு வகைகளுடன் பரிமாறப்படும் பாரம்பரிய அறுசுவை விருந்து "ஓணம் சத்யா" என்று அழைக்கப்படுகிறது.
வள்ளம் களி :
கேரளாவின் புகழ்பெற்ற பாரம்பரிய பாம்பு படகு போட்டிகள் நடைபெறும். இதனை "வள்ளம் களி ' என்று அழைப்பர். மக்கள் இந்த படகு போட்டியில் மிகவும் மகிழ்ச்சியுடனும், குதூகலமாகவும் பங்கேற்று மகிழ்வார்கள்.
ஓணம் பண்டிகையின் போது கேரளா முழுவதும் வண்ணமயமாக மகிழ்ச்சியான காட்சியாக, கேரளாவின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வர். கேரளாவின் கலாச்சாரமும்,அழகும் நிறைந்த அற்புதமான காட்சி இந்த ஓணம் பண்டிகையில் காணலாம்.
நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட பூக்களும் மற்றும் பிரம்மாண்ட ஓணசத்யா விருந்துகளும், கண்களைக் கவரும் விதமாக பாம்பு படகு பந்தயங்களும், மனதைக் கவரும் விதமாக கை கொட்டிக் களி நடனமும், ஓணம் பண்டிகையில் இடம் பெறும் முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும். கேரள மக்கள் இந்த ஓணத் திருவிழாவை மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.