அடுத்த மாதம் கல்யாணம் (ஒரு நிமிட சிறுகதை)

Su.tha Arivalagan
Feb 24, 2026,04:30 PM IST
- ஷீலா ராஜன்

யாரோ கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு வாசலை எட்டிப் பார்த்தாள் மல்லிகா..  சார் நீங்களா!! என்ன சார் திடீர்னு ?? வாங்க..... வாங்க.... இப்பதான்  ஆபீஸ்ல இருந்து நம்ம கிளம்பனும் இங்க வரேன்னு சொல்லவே இல்லையே சார் என்று செல்லமாக் கோபித்துக் கொண்ட மல்லிகாவை பார்த்து புன்முறுவலுடன் சொல்லி இருந்தா வர வேண்டாம்னு சொல்லி இருப்ப மல்லிகா என்றார்...

கார்த்திகேயன் பேசிக்கொண்டே ஒரு வெள்ளி தட்டை எடுத்து அதில் பூ பழம் ஸ்வீட் என எடுத்து அடுக்கிக் கொண்டே இருந்தார்..

என்ன சார்?? இதெல்லாம் எங்க வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு தான் வரணுமா என்ன!! என்றபடியே கார்த்திகேயனுக்கு சொம்பில் தண்ணீர் அளித்தாள்.. 

மல்லிகா, எல்லாம் எதுக்கு னு தானேப் பாக்குற??



பொண்ணு பார்க்க வந்திருக்கேன்.. இந்தா!! வாங்கிக்கோமா என்ற கார்த்திகேயனை பார்த்து,, என்னது?? பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா!!!  அம்மா!! என்று கத்தினாள் மல்லிகா.

ஓட்டமும் நடையுமாக வந்த அம்மா மல்லிகாவைப் பார்த்து, என்ன? என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற என்றார்.

இவர் எங்க ஆபீஸ்ல வேலை செய்றாரு,, பொண்ணு பார்க்க வந்திருக்கேன்னு சொல்றாரு மா என்றபடியே திருதிருவென விழித்தாள்.. ஆச்சரியத்தில் மூழ்கி போனார் மல்லிகாவின் தாய் கமலவல்லி.

இரு !இரு! அதிர்ச்சியாகாதே!! நானே சொல்றேன்... என ஆரம்பித்த கார்த்திகேயனை இருவரும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"மல்லிகா உன் குடும்பத்தை பற்றிய எல்லா விஷயங்களையும் நீ என்கிட்ட சொல்லி இருக்க நீ ஒரு வயசா இருக்கும்போது உங்க அப்பா உடம்புக்கு முடியாம இருந்து இறந்து போனது... அதுக்கு அப்புறம் உங்க அம்மா உன்ன வளர்த்து படிக்க வச்சது எல்லாத்தையும் சொல்லி இருக்கே,, அப்படியே இன்னொரு விஷயமும் சொன்ன ஞாபகம் இருக்கா ?? எங்க அம்மாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஒரு நாள் நீ என்கிட்ட சொன்ன அத அப்படியே நான் என் பையன் கிட்டயும் சொன்னேன்.. இதோ !அவனே வந்துட்டானே!! என்னப்பா விஷயத்தை நீயே சொல்றியா??

கொஞ்சம் உக்காந்துட்டு சொல்லட்டுமா என சொல்லிக் கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தான் நரேன்.

"மல்லிகா இன்னைல இருந்து நீ என் தங்கச்சி, உன் அம்மா எனக்கும் அம்மா, சரினா அடுத்த மாசமே கல்யாணம் வச்சிடலாம்" என்றான்.. இதை சற்றும் எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சிக்குள்ளான மல்லிகா, மகிழ்ச்சி கடலில் மூழ்கினாள். அப்படியே ஓடி வந்து  நரேனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

என்ன இப்பவே முகூர்த்தப் பட்டு எடுக்க போலாமா? என்ற கார்த்திகேயனை பார்த்து கமலவல்லி வெட்கத்தில் சிவந்தாள்.

சில சங்கடங்களை விலக்கி விட்டு புதிய கண்ணோட்டத்துடன் பார்த்தால்.. பல சந்தோஷங்கள் அங்கு மறைந்திருப்பதை உணரலாம்.. அவை வெளி வரும்போது.. சொர்க்கத்தின் சுவையை உணரலாம்.