பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

Meenakshi
Jan 12, 2026,06:44 PM IST

திருவனந்தபுரம்: பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். பாஜக இங்கு ஆட்சியில் இல்லை. ஆனாலும் கட்சியின் வாக்கு வங்கி சீராக அதிகரித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். பாஜக இங்கு ஆட்சியில் இல்லை. ஆனாலும் கட்சியின் வாக்கு வங்கி சீராக அதிகரித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நமது இலக்கு அல்ல. முதலமைச்சர் பதவியை அடைவதே நமது இலக்கு. இப்போது திருவனந்தபுரத்தில் பாஜகவை சேர்ந்தவர் மேயராக பதவியில் உள்ளார். நாளை பாஜக முதலமைச்சரை இங்கு காண்போம்.




நமது வெற்றி நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்களின் தியாகத்தின் விளைவாகும். இந்த வெற்றியை நூற்றுக்கணக்கான தியாகிகள் குடும்பங்களுக்கும், சிறையில் இருக்கும் தொண்டர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். 2014-ல் 11% ஆக இருந்த நமது வாக்கு சதவீதம், 2019-ல் 16% ஆகவும், 2024-ல் 20% ஆகவும் அதிகரித்துள்ளது. வாக்கு சதவீதம் 30% அல்லது 40% ஆக அதிகரிப்பது வெகு தொலைவில் இல்லை. அது 2026-லேயே நடக்கும்.


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு அனைவருக்கும் வளர்ச்சி (Sabka Saath, Sabka Vikas) என்ற கொள்கையின் கீழ் செயல்படுகிறது. கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடையும். உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பாஜக மட்டுமே தெளிவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.