ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
சென்னை: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் உரையாற்றியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போதைய தமிழக முதல்வர் விஜய் பேசியுள்ள சாதனைகள் அனைத்தும் முந்தைய திமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் என்றும், அதன் மீது தற்போதைய அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டியுள்ளது என்றும் அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
"ஒரு மாத ஆட்சியா? 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியா?"
டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சாதனைகள் என ஒரு பெரும் பட்டியலையே முதல்வர் விஜய் வாசித்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியவை அவரது ஒரு மாத கால ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
பொய் பரப்புரையும் பொருளாதார உண்மைகளும்:
தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்து கடனில் தத்தளிப்பதாக நடப்பு முதல்வர் பொய் பரப்புரை செய்ததாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இன்று டெல்லிக்குச் சென்று, இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு என்றும், 42% தமிழக மகளிர் பணிக்குச் செல்வதாகவும், மகளிர் கல்வி மற்றும் பாதுகாப்பில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் முதல்வர் பேசியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் மற்றும் மேகதாது விவகாரத்தில் மௌனம் ஏன்?
தேர்தலுக்கு முன்பு "நீட் மட்டும்தான் உலகமா?" எனக் கேட்ட முதல்வர் விஜய், இன்று நீட் விலக்கு கேட்டுப் பேசியிருப்பதை உதயநிதி விமர்சித்துள்ளார். மேலும், டெல்லி வரை சென்றவர் புதிய கூட்டணி கட்சியிடமோ அல்லது நிதி ஆயோக் கூட்டத்திலோ தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான மேகதாது பிரச்சினை குறித்து வாய் திறக்காமல், 'நமக்கேன் வம்பு' என்று அமைதியாகத் திரும்பியிருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"சோஃபா மாடல் அரசு; உண்மை நிச்சயம் வெல்லும்"
ஒட்டுமொத்தமாக, நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது இந்த 'சோஃபா மாடல் அரசு' என்று சாடிய உதயநிதி ஸ்டாலின், மக்களை ஏமாற்றிப் பெற்ற போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது என்றும், உண்மை நிச்சயம் வெல்லும் என்றும் தனது அறிக்கையில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.