டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

Su.tha Arivalagan
Jul 27, 2026,12:35 PM IST

புதுடெல்லி:  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) திரண்டு இன்று தீவிர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிரக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.


தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல் துறை அத்துமீறி நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தியவாறு அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


பின்னணி என்ன?




சமீபத்தில் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தேவையின்றி அத்துமீறலில் ஈடுபட்டு வன்முறையைப் பிரயோகித்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்த அத்துமீறல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.


மத்திய உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள், இளைஞர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கை முற்றிலும் ஜனநாயக விரோதமானது எனச் சாடினர். மேலும், டெல்லி காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவதால், இந்தச் சம்பவம் குறித்தும், காவல்துறையின் அத்துமீறல் மற்றும் வன்முறை தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளன.


போர்க்களமாக மாறிய நாடாளுமன்ற வளாகம்:

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். பாஜக அரசின் கொள்கைகள், ஜனநாயகப் படுகொலை, வாக்கு திருட்டு, வினாத்தாள் கசிவு மற்றும் நிதி முறைகேடுகள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட பானர்களைக் கைகளில் ஏந்தியவாறு அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், காவல்துறையினரின் அத்துமீறலுக்குப் பொறுப்பேற்று மத்திய அரசு பதில் கூற வேண்டும் என்றும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏற்படுள்ளது. இதனால் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.