பொருத்தமோ பொருத்தம் MATCHING MATCHING .. ஒரு நிமிடக் கதை (10)
- பூரணவள்ளி சேகர்
கமலா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். கமலா அழகும் நளினமும் மிகுந்து இருப்பாள்.
ஆள் பாதி ஆடை பாதி என்பது போல அழகு மிகுந்த அவள் மிகவும் அழகான ஆடைகளை மிகவும் பொருத்தமான அணிகலன்களுடன் அணிவதில் திறமை பெற்றவள்.
ஒவ்வொரு நாளும் கமலா அணிந்து வரும் ஆடையின் நிறமும் அதற்கு ஏற்ற அணிகலன்களும் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் அன்றைய பேசு பொருளாக இருக்கும்.
அணிய வேண்டிய ஆடையும் அதற்கான அதே நிற அணிகலன்களையும் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவாள் கமலா.
அழகான மற்றும் பொருத்தமான காதணி கைவளை நெற்றிப் பொட்டு மோதிரம் போன்றவற்றை அணிந்து சேலைத் தலைப்பு காற்றில் அசைந்து வர தேவதை போல கமலா நடந்து வருவதை அலுவலகத்தில் உள்ள அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். சிற்றுண்டி நேரத்தில் கமலாவைப் பற்றி பேசாமல் ஒருவருக்கும் வேலை ஓடாது.
காலையில் ஏழு மணிக்கு அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று மேலாளர் கூறியிருந்தார். இரவு முழுவதும் தூறல் தூறிக் கொண்டிருந்தது. மின்சாரம் தடைபட்டது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாததால் விடியும் நேரத்தில் சிறிது கண் அயர்ந்தாள். கண் விழித்தவுடன் அவசரம் அவசரமாக அலுவலகத்திற்குக் கிளம்பி வந்து சேர்ந்தாள்.
தூக்கமின்றி இருந்த கமலா கவலை தோய்ந்த முகத்துடனும் இருந்தாள். புடவைத் தலைப்பைக் கழுத்தைச் சுற்றி போர்வை போல் போர்த்தி இருந்தாள். இன்று என்ன ஆயிற்று கமலாவிற்கு என்பதை அறிந்து கொள்ள முடியாமல் அலுவலக நண்பர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை.
உடல் நலம் இல்லையா என்று அருகில் வந்து விசாரித்தனர். கமலா அவர்கள் யாருக்கும் சரியான பதிலைக் கூறவில்லை. மதிய உணவிற்குப் பின் சிறிது யோசித்த கமலா தன் மேலாளரிடம் ஒரு மணி நேரம் அனுமதி பெற்றுக் கொண்டு விரைவாக வீட்டிற்குக் கிளம்பினாள். அலுவலகத்தில் ஒரே பரபரப்பாக இருந்தது. அனைவரிடத்திலும் ஒரே கேள்வி இருந்தது.
அன்று காலையில்...
மின்சாரத் தடை மற்றும் அவசரத்தில் அடர் பச்சை நிற சேலைக்குச் சிறிது பொருத்தமில்லாத இலைப்பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருப்பதைக் காலையில் ஆட்டோவில் ஏறி அலுவலகம் செல்லும் போதுதான் கவனித்தாள் கமலா. அதை அலுவலகத்தில் பகிரவா முடியும்?
வீட்டிற்கு வந்து உடையை மாற்றி அணிந்தவுடன் அவள் மனம் அமைதி அடைந்தது.
பொருத்தம் உடையிலும் வேண்டும் என்று கமலா நினைத்தாள்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)