அன்பு - உறவு- வானவில்.. முத்து முத்தாய் மூன்று கவிதைகள்!

Su.tha Arivalagan
Nov 11, 2025,04:36 PM IST

- P.அகிலாண்டேஸ்வரி


அன்பு என்னும் சிறகை விரித்தால் 

ஆனந்தம் என்னும் உயர்ந்த வானில் பறக்கலாம் 

எவ்வித கவலைகளும் இன்றி...


அன்பு என்னும் அழியா படகை செலுத்தி தான் பாருங்களேன் 

பேரானந்தம் என்னும் பெருங்கடலில் 

நீந்திக் கொண்டே இருக்கலாம் 

சுனாமி வந்தாலும் கூட.. துவளாமல் நிலை குலையாமல்!


அன்பின் பூந்தோட்டத்தில்

பாசம், பரிவு, பந்தம், பணிவு, ஈகை, கொடை, நட்பு, நன் மதிப்பு என்னும் 

அழியா பூக்கள் பூத்துக் குலுங்குகிறதே! 

அதைக் காண மனக்கண் என்னும் நுழைவுச்சீட்டு இருந்தால் போதும் 

கண்டுகளிக்க...!


--




பாரமாய் போன உறவுகள் 


பாரம் என கருதினால் 

பெண் கருவை சுமக்க முடியாது 

பாரம் என கருதினால்

மாணவர்கள் கல்வி கற்க முடியாது .

பாரம் என்று கருதினால் 

சுமைதாங்கி சுமக்க முடியாது .

பாரம் என்று கருதினால் 

பூமி மக்களை, மரம் ,செடி கொடி மற்றும் பல உயிர்களை சுமக்க முடியாது

ஆனால் மனிதா..!

ஏன் நீ மட்டும் பெற்றோரை பாரமாய் நினைக்கிறாய்?


--


வானவில்லே.. வானவில்லே!


ராமன் வில்லை வளைத்து 

சீதையை மணந்தான்

ஏ வான வில்லே 

யார் உன்னை வளைத்தது?

அதுவும் இவ்வளவு அழகாய் 

எந்த சீதையை மணப்பதற்கு 

எந்த ராமன் வளைத்ததோ?


(பி. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)