முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

Su.tha Arivalagan
Jun 02, 2026,04:51 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலமைச்சர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்துக் கூறி, ஒரு சிறப்புப் பரிசினையும் வழங்கினார். முதலமைச்சர் விஜய்யும் ப.சிதம்பரத்தை இன்முகத்தோடு வரவேற்று, அவரது வாழ்த்துகளுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 


ராஜ்யசபா தேர்தல் குறித்து ஆலோசனையா?




இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மிக முக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜூன் 18ம் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா (மாநிலங்களவை) தேர்தல் தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாகப் பேசியிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.


நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், இந்தத் தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான இடப் பகிர்வு குறித்து இப்போதே ஆலோசனைகள் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


தவெக ஆட்சி அமைக்க முதல் ஆளாக தனது ஆதரவை வழங்கியது காங்கிரஸ். இதற்கு பதிலாக தமிழக அமைச்சரவையில் காங்கிரசிற்கு இடம் அளித்தது தவெக. அதிமுக.,வை சேர்ந்த சி.வி.சண்முகம் தனது ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு ஜூன் 18ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கி உள்ளது. இருந்தும் இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ இல்லை. 


இந்நிலையில் 107 எம்எல்ஏ.,க்களை தங்கள் வசம் வைத்துள்ள தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யை ப.சிதம்பரம் சென்று சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆட்சியில் கூட்டணி வைத்துள்ள கட்சி என்ற அடிப்படையில் இந்த ராஜ்யசபா சீட்டை தவெக, காங்கிரசிற்கு ஒதுக்க உள்ளதா என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது.