பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??

Jun 01, 2026,10:45 AM IST

சென்னை: "நான் ஒரே ஒரு வார்த்தை பேசியிருந்தால், தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களே எனது வீட்டு வாசலுக்கு வந்து எனக்குத் துணை முதலமைச்சர் பதவியை வழங்கியிருப்பார்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாகத் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.


அதேசமயம், அவரது இந்தப் பேச்சை தவெகவினர் டிரோல் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.


சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் முக்கியக் கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் அதற்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.




கூட்டத்தில் பேசிய அவர், அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய அரசு அமைந்தது குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தற்போதைய புதிய ஆட்சியில் இணைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளை மறைமுகமாகச் சாடினார். சில கட்சிகள் தங்களுக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தங்களது கொள்கைகளைக் கைவிட்டு, ஓடி ஓடிப் பதவி தேடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.


ஆனால், தேமுதிக எப்போதும் கூட்டணி தர்மத்திற்கும், கட்சியின் கொள்கைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் என்று அவர் உறுதியளித்தார். "தேமுதிக ஒருபோதும் அதிகாரத்திற்கோ, அமைச்சர் பதவிகளுக்கோ அல்லது பண பலத்திற்கோ ஆசைப்பட்டுக் கொள்கைகளை சமரசம் செய்து கொண்டதில்லை என்பதை இந்தத் தேர்தலிலும் மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்:




தொடர்ந்து பேசிய பிரேமலதா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீதும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போது எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்றும், தேமுதிகவைச் சரியான முறையில் நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார். கூட்டணியை ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டங்களை நடத்துவதற்குக் கூட அதிமுக தலைமை தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.


ஒரு காலத்தில் தங்களை 'தீய சக்தி' என்று விமர்சித்த கட்சிகளோடு, இன்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் சில கட்சிகள் கைகோர்த்து நிற்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் திமுக கூட்டணி குறித்தும் மறைமுக விமர்சனம் செய்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் இளைஞர்களிடையே பெரும் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.


தமிழக அரசுக்குக் கோரிக்கை மற்றும் எச்சரிக்கை:




தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய மக்கள் நலப் பிரச்னைகளில் தற்போதைய தமிழக அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தினார்.


மேலும், விசிகவின் ஆதவ் அர்ஜுனா தன்னை 'துரந்தர்' என்று விமர்சித்தது குறித்துப் பதிலளித்த அவர், "முதலில் அந்த வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை, அது ஒரு இந்தி வார்த்தை. 'இந்தி தெரியாது போடா' என்று நாம் எளிதாகக் கடந்து போகலாம். ஆனால், என்னை அப்படி விமர்சித்தவர், எதிர்காலத்தில் அவரே ஒரு 'துரந்தராக' மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று காட்டமாக எச்சரித்தார்.


தமிழக அரசியலில் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பதில் அடுத்தடுத்து பல்வேறு பரபரப்புகள் நிலவி வரும் சூழலில், பிரேமலதா விஜயகாந்தின் இந்தத் துணிச்சலான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


விஜய் நேரில் போய் பார்த்திருப்பாரா?




சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் விஜய் பல அரசியல் தலைவர்களை நேரில் போய்ப் பார்த்தார். அவர் பார்த்த முதல் தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தன்னை கடுமையாக விமர்சித்துப் பேசிய சீமான், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரையும் சென்று சந்தித்தார் விஜய்.


அதிமுகவின் ஒரு குழுவாக இயங்கி வந்த சிவி. சண்முகம் குழுவையும் கூட அவர் சந்தித்தார். அதேபோல தேமுதிக தலைவர் பிரேமலதாவையும் அவர் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போகவில்லை. அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் கூட அவர் சந்திக்கவில்லை.


மேலும் தனது அரசுக்கு ஆதரவு தேவைப்பட்டபோது, தவெக தரப்பில் தேமுதிகவை அணுகியது போலவும் தெரியவில்லை. இப்படி இருக்கையில், தன்னைத் தேடி வந்து விஜய் துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

news

புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்

news

Monday Thoughts: "தி.மு... தி..பி".. புதிய உறவால் உதயமாகும் பெயர் மாற்றங்கள்!

news

பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??

news

CM Vijay visits Trichy: இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்.. மக்களுக்கு நன்றி சொல்கிறார்!

news

அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்