எனக்கே...எனக்கு!

Su.tha Arivalagan
Jul 20, 2026,03:01 PM IST

- ப.வினு


எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

இன்னொருவனுக்கும் பிடித்துப் போகும்போது,

திடீரென எனக்கு அது

பிடிக்காமல் போய்விடுகிறது.


அவர்கள் அதை ஒரு வியாதி என்கிறார்கள்...

நானோ அதை

என் பிரத்யேகமான அரியாசனம் என்கிறேன்.


ஏனெனில்,

எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு அழகில்

எனக்கென்ன தனி உரிமை இருக்க முடியும்?




கூட்ட நெரிசலில் குளிக்கும் ஒரு நதியை

நான் எப்படி எனது தீர்த்தம் என்று சொல்ல முடியும்?


நான் தேடுவது

எல்லோருக்கும் பொதுவான சொர்க்கத்தை அல்ல;

யாருக்கும் தெரியாத,

எனக்கு மட்டுமேயான ஒரு சிறு நரகத்தை.


என் உலகத்திற்குள்

அடுத்தவரின் கால்தடம் படுவதை

என் அகந்தை அனுமதிப்பதில்லை.

வியாதிதான்... மறுப்பதற்கில்லை.


ஆனால்,


எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்

இந்தச் சலிப்பான உலகத்தில்,

பகிர்ந்து கொள்ள முடியாத என் தனிமை

எவ்வளவு அழகானது!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)