அது துணியல்ல... உன் நம்பிக்கையின் ஆகாயம்!
- ப.வினு
அவசியம் கருதி அலையும்
இந்த உலகத்தின் சலசலப்புகளுக்கு மத்தியில்,
நீ உனக்கான ஒரு தீவை
உடம்போடு சுமந்து திரிகிறாய்.
அவர்கள் பார்க்கிறார்கள்
வெறும் ஒரு துணியை மட்டுமே...
அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை,
அது துணியல்ல...
உன் நம்பிக்கையின் ஆகாயம் என்று.
எல்லா அழகுகளும்
கண்களுக்குக் காட்டப்பட வேண்டியவை அல்ல...
சில அழகுகள்
இறைவனுக்கும் உனக்கும் மட்டுமேயான
மறைமுக உரையாடல்கள்.
உலகம்
சுதந்திரத்தை வெளியே தேடுகிறது.
நீயோ,
உன்னை மூடிக்கொள்வதன் வழியே
உன் ஆன்மாவின் எல்லைற்ற சுதந்திரத்தை
அடைந்திருக்கிறாய்.
அது உன்னை முடக்கும் சிறையல்ல,
அந்நியப் பார்வைகள்
உன் கண்ணியத்தைத் தீண்டாதபடி
தேவதைகள் சூழ்ந்திருக்கும்
ஒரு புனிதமான எல்லைக்கோடு.
கருப்பின் பின்னால்
நீ ஒ ஒளித்து வைத்திருப்பது உன் முகத்தை அல்ல...
உலகம் இன்னும் கற்றுக்கொள்ளாத
பண்பாட்டின் பேரமைதியை.
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)