அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்!

Su.tha Arivalagan
Oct 01, 2026,11:12 AM IST

- ப.வினு


கண்ணாடி முன்னால் ஒரு போர்க்களம்

என் காதல் தேவதையின் அழகு நாடகம்!

பவுடர் டப்பாவில் தொடங்கி

லிப்ஸ்டிக் டியூப் வரை...

முகத்தில் நிகழ்கிறது

ஒரு முழுநீள அறிவியல் ஆராய்ச்சி!


இரண்டே நிமிடம் என்றாள்...

என் கைக்கடிகார முள்ளோ

தன் ஆயுள் ரேகையைத் தேடி

இரண்டு சுற்று சுற்றி முடித்துவிட்டது!




அந்த ஒற்றைப் புருவத்தை வளைக்க

அவள் போடும் கோடுகள்...

அடடே

லியோனார்டோ டாவின்சியே நேரில் வந்தாலும்

தோற்றுப் போய் மூலையில் நிற்பான்!


கண்ணுக்குள் மை தீட்ட

அவள் காட்டும் பாவனைகள்...

வாய் ஒரு பக்கம் திறக்க

கண் மறுபக்கம் விரிய

அவள் முகத்தில் அத்தனை நவரச அவதாரங்கள்!


சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசிவிட்டு

கண்ணாடியைப் பார்த்து

அவள் போடும் அந்த உதட்டு முத்தம்...

அந்தக் கண்ணாடிக்காரன் கொடுத்து வைத்தவன்

வெளியே காத்திருக்கும் நானோ பாவப்பட்டவன்!


இயற்கை வரைந்த பேரழகின் மேல்

இவள் போடும் இந்தத் தொழில்நுட்பக் கோலங்கள்...


நிலவுக்கு எதற்கு வெள்ளையடிக்கும் வேலை?

ரோஜாவுக்கு எதற்குச் சிவப்புச் சாயம்?

எப்படி இருக்கேன்? என்று

கடைசியாய் அவள் கேட்கும் போது,

நடுங்கும் குரலில் அற்புதம் என்பேன்...

இல்லையென்றால்,


மீண்டும் தொடங்குமே முதல் கோட்டிங்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு. கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)