உன் பேர் சொல்லி .. ஒரு பூஞ்செடி

Su.tha Arivalagan
Jul 22, 2026,04:54 PM IST

- கொடைக்கானல் ப.வினு


உன் பெயரைச் சொல்லி

ஒரு பூஞ்செடி வளர்க்கிறேன்.


அதன் விதையை மண்ணில் புதைத்தபோது

எனக்குத் தெரியாது,

நான் புதைத்தது ஒரு விதையை அல்ல...

உன்னோடு நான் வாழ்ந்த

சில கணங்களைத்தான் என்று.


அது வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு அங்குலத்திலும்

உன் நினைவுகள்

பச்சையாய் உறைந்து போயிருக்கின்றன.




இரவுகளில்

அதன் இலைகளில் வந்து தங்கும் பனித்துளி,

நீ என்னைப் பார்த்து

ரகசியமாய் சிந்திய

அதே கண்ணீர்த்துளி போல ஒளிர்கிறது.


நான் அதற்குப் பேசக் கற்றுத்தரவில்லை,

ஆனால் அது

உன் குரலிலேயே காற்றில் அசைகிறது.


அதன் முதல் மொட்டு அவிழும் அந்த நொடி,

நீ என் தோளில் தலைசாய்க்கும்

அதே கணமாய் மாறிப்போகிறது.


உலகம் முழுவதையும்

எனக்குத் தர வேண்டாம்...


என் ஜன்னலோரம்

உன் பெயர் தாங்கிய இந்தச் செடி

மலர்ந்துகொண்டிருந்தால் மட்டுமே போதும்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)