என்னை நேசிப்பவளுக்கு!
- ப.வினு
உன்னை எனக்குப் பிடிக்கும்.
அவ்வளவுதான்.
அதற்குப் பின்னால்
பெரிய பிரகடனங்கள் எதுவும் இல்லை.
அதற்குக் காதலென்று
பெயர் சூட்டத் தயங்குகிறேன் நான்.
பெயரிட்ட கணமே
அதன் நிபந்தனைகள்
வீட்டின் தாழ்ப்பாள்களைப் போல
ஒன்றன்பின் ஒன்றாக இறங்கத் தொடங்கிவிடுகின்றன.
எதிர்பார்ப்புகளின் கசப்பு,
உரிமைகளின் வன்முறை,
பிரிவின் போது சிந்த வேண்டிய
கட்டாயக் கண்ணீர்
இவற்றையெல்லாம் விட
ஒரு மாலை நேரத்துத் தேநீரைப் போல
நம் உரையாடல் ஆறிப்போகாமல் இருப்பதே போதும்.
நீ எதிர்ப்படும் கணங்களில்
என் தனிமையின் கனம்
கொஞ்சம் குறைகிறது.
நீ இல்லாத இரவுகளில்
வெறித்துக்கிடக்கும் இந்த அறையின் சுவர்கள்
உன் நினைவுகளால் மட்டுமே
மூச்சுவிடக் கற்றுக்கொள்கின்றன.
காதல் என்பது
ஒரு பெரும் அவஸ்தை.
நானோ ஒரு எளிய தப்பித்தலை மட்டுமே
உன்னிடம் யாசிக்கிறேன்.
எந்தப் புனிதமான சொல்லாலும்
இதனைச் சுருக்கிவிட வேண்டாம்.
உன்னை எனக்குப் பிடிக்கும்
ஒரு திறந்த ஜன்னலின் வழியே
திடீரென உள்ளே நுழையும்
எந்தப் பெயரையும் கோராத
ஒரு மெல்லிய சலனம் போல.
உனக்காக!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)