கண்டதும் காதலா
Apr 15, 2026,10:41 AM IST
- பாவலர் மாயோன் மங்கை
மாலை இளம் வெயிலிலே
மலையோரம் நான் நடக்க
மஞ்சள் குருவி ஒன்னு மலையாளப் பாட்டிசைக்க
வச்ச அடி பின் இழுக்க
மிச்ச அடி நான் மறந்தேன்
மலையாளம் மனம்தூவ
சிலையாக
நின்றவளை
கலையாகத்தான்
பார்த்தேனே
காதலை வளர்த்தேன்
மல்லையில் சிற்பம்
மயிலிறகுக் கூந்தல்
அலைய
சேரனின் தந்தம் போல
சேயிழையால்
மினுமினுக்க
சோழனின் கோபுரமே
சொட்டுகின்ற இளமையது
பாடிவந்த பைங்கிளி தான்
பஞ்சவர்ணக் கிளி
மொழியோ
பிரம்மனின் படைப்பிலே
பித்தாகி நான் நிற்க
அணைத்தவன் மார்போடு ஆரணங்கு ஆரணங்கு
துவண்டுவிழ
ஆலம் விழுதொன்று
வேரோடு விழுந்தது போல்
அன்றே விழுந்தவன்
நான் இன்றுவரை
எழவில்லை