பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 ஜூன் மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமை "பரம ஏகாதசி" அனுஷ்டிக்கப்படுகிறது. இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஏகாதசி ஆகும். இந்த நன்னாள் அதிக மாதம் (புருஷோத்தம) மாதம் வரும் சிறப்பான ஏகாதசி ஆகும். இந்த பரம ஏகாதசி நன்னாளில் முழு விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது பாவங்களை நீக்கி செல்வத்தை வழங்கும் என்பது நம்பிக்கை.
பரம ஏகாதசி நேரம்:
தேதி : ஜூன் 11, 2026 வியாழக்கிழமை.
ஏகாதசி திதி தொடக்கம் :
ஜூன் 10 புதன்கிழமை நள்ளிரவு 12 :57 am.
ஏகாதசி திதி முடிவு :
ஜூன் 11 வியாழக்கிழமை இரவு 10:36 pm.
பாரணை நேரம்:( விரதம் முடிக்கும் நேரம்) ஜூன் 12 வெள்ளிக்கிழமை காலை 05: 23 amமுதல் 08 :10 am வரை.
பரம ஏகாதசி சிறப்புகள் :
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாட்களைக் காட்டிலும் அதிக மாதத்தில் வரும் பரம ஏகாதசியின் முக்கியத்துவம் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது. இந்த அரிய ஏகாதசி சுமார் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் காரணத்தினால் இது மிகவும் சிறப்பானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த புனிதமான நன்னாளில் முழு நம்பிக்கையுடனும் சாஸ்திர விதிமுறைகளின் படி துல்லியமாக விரதம் இருந்து வழிபாடு செய்வது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் திரண்டு இருந்த அனைத்து பாவங்களையும் போக்கி, அவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணு பகவானின் சிறப்பு அருளை பெற்று தருகிறது.
"பரம "என்பது 'உன்னதமான 'அல்லது 'சிறந்த 'என்று பொருள். இதன் காரணத்தினாலேயே அனைத்து ஏகாதசிகளிலும் மிகச் சிறந்த பலன்களை தரக்கூடிய ஏகாதசியாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த விரதத்தை அனுசரிப்பது வறுமையில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.
புராணங்களில் பரம ஏகாதசி திதியின் மகிமை :
புராண கதைகளின் படி செல்வத்தின் அதிபதியான குபேரன் இந்த பரம ஏகாதசி விரதத்தை அனுசரித்ததன் சக்தியாலேயே சிவபெருமானின் அருளுடன், தேவர்களின் கருவூல காப்பாளர் என்ற உயர்ந்த பதவியை அடைந்தார் என்று கூறப்படுகிறது. இதைப்போலவே வாய்மையே வெல்லும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த அரசன் ஹரிச்சந்திரன் பரம ஏகாதசி விரதத்தின் புண்ணிய சக்தியாலேயே தான் இழந்திருந்த அரசாங்கம்,செல்வம் மற்றும் குடும்பத்தினரை மீண்டும் பெற்றார் என்று கூறப்படுகிறது.
இந்த விரதத்தை நம்பிக்கையுடனும், கடுமையான கட்டுப்பாட்டுடனும் கடைபிடிக்கும் அனைவருக்கும் அஸ்வமேத யாகம் செய்வதன் மூலம் கிடைக்கும் ஆன்மீக புண்ணிய பலன்களை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.இந்த நாள் பகவான் விஷ்ணுவையும், லட்சுமி தேவியையும் வழிபடுவது எந்த ஒரு பக்தருக்கும் தங்கள் உயிர் பிரிந்த வரை வைகுண்ட தளம் செல்லும் பேற்றை பெறுவார்கள் என்று பகவான் கிருஷ்ணர் ஒருமுறை அர்ஜுனனிடம் கூறினார்.
பரம ஏகாதசி வழிபாட்டு முறைகள் :
இந்த மங்களகரமான நன்னாளில் பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுந்து,வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து, பகவான் விஷ்ணு மற்றும் தேவி லட்சுமியின் திருவுருவச் சிலைகளை அங்கு எழுந்தருள செய்து, பகவானுக்கு மஞ்சள் மலர்கள், தூபம்,தீபம், சந்தன கலவை, பஞ்சாமிர்தம் மற்றும் பழங்களை நைவேத்தியமாக சமர்ப்பிக்க வேண்டும். பகவான் விஷ்ணுவிற்கு மஞ்சள் நிற இனிப்பு பண்டங்களை நிவேதிக்கும்போது ஒரு துளசி இலையை தவறாமல் அதில் சேர்க்க வேண்டும். ஏனெனில், துளசி இல்லாத எந்த ஒரு நிவேதனத்தையும் பகவான் விஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் விஷ்ணு பகவானின் ஆயிரம் திருநாமங்கள் கொண்ட "விஷ்ணு சகஸ்ரநாமம் "பாராயணம் செய்வது அதீது நன்மை பயக்கும். "ஓம் நமோ பகவதே வாசுதேவாய "எனும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே l
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே ll "
இந்த மந்திரத்தை மூன்று முறை பாராயணம் செய்வது அதீத சிறப்பு. இந்த ராம நாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களை கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணத்திற்கு இணையானதாகும்.
தானம் செய்வதன் சிறப்பு:
பரம ஏகாதசி திதி அன்று செய்யப்படும் தான தர்மங்கள் அக்ஷய புண்ணியத்தை அதாவது என்றும் அழியாத ஆன்மீகப் புண்ணியத்தை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. இந்நாளில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவது பகவான் விஷ்ணுவிற்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கும். இந்நாளில் அன்னதானம் (உணவு )ஜலசேவை (நீர்) வழங்குதல் பழங்கள் விநியோகித்தல் மற்றும் நோயுற்றவர்களுக்கும் , மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் போன்ற செயல்கள் மிகுந்த புண்ணியம் தருபவையாக கருதப்படுகின்றன.
அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தங்களால் இயன்றவற்றை தானம் செய்வது அதீத சிறப்பு.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீகத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.